×

திருநெல்வேலி காந்திமதி அம்மன்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடிப் போற்றிய இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன – ஸ்ரீநெல்லையப்பர் காந்திமதி ஆலயம், தாமிர அம்பலம்; குற்றால நாதர் ஆலயம், சித்திர அம்பலம். இந்த இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். அதேபோல அம்பாளும் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். காந்திமதியம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அலங்காரம் செய்யப்படுகிறது. அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இது காந்தி பீடமாகத் திகழ்கிறது. காந்தசக்தி மிகுந்து, பிரகாசமாக அம்பிகை விளங்குவதாலும் இது காந்தி பீடமாயிற்று. ஒரு மனைவி கணவனையும் விருந்தினர்களையும் உபசரித்துப் போற்றும் விதிமுறையை இத்தல உச்சிக்கால பூஜை நிகழ்ச்சியில் நிலைநாட்டப்படுகிறது. உச்சிக்கால பூஜையின் போது காந்திமதி அன்னை நைவேத்திய தட்டுடன் ஈசனை நோக்கிப் புறப்படுவாள். வெறும் சுத்த அன்னம் மட்டும் அல்ல; கூட்டு, பொரியல், என மேளதாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தேவி ஈசன் சந்நதிக்குச் செல்வாள். அப்போது ஈசனுக்கு அபிஷேகம் செய்யப்படும். பின் தான் கொண்டுவந்த நைவேத்தியத்தை ஈசனுக்குப் படைத்து ஆராதிக்கிறாள் காந்திமதி. பின் ஆலயத்திலுள்ள அனைத்துப் பரிவார தேவதைகளுக்கும் நைவேத்தியம் செய்கிறாள். பின்னரே காந்திமதிக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது! கணவர் உணவு எடுத்துக்கொண்ட பின்னர் மனைவி உணவு புசிக்கும் பாரம்பரியத்தை இக்கோயிலில் அன்னை காந்திமதி தினந்தோறும் நிகழ்த்திக் காட்டுகிறாள்!வருடா வருடம் புரட்டாசி மாத இறுதியில், ஐப்பசி மாதத் தொடக்கத்தில், காந்திமதி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண உற்சவம் தொடங்குகிறது. அதையொட்டி காந்திமதி ஈசனுக்கு சிவபூஜை செய்வது போன்ற அலங்காரம் செய்யப்படும். தேவி அந்த அலங்காரத்துடனே பல்லக்கில் திருவீதியுலா வருவாள். தம் பக்தர்களிடம் தர்மகுணம் தழைத்துச் செழிக்க வேண்டும் என்பதற்காக அம்பிகை 32 வகையான தர்மங்களைப் புரிந்ததாக தலபுராணம் கூறுகிறது. அதை நினைவூட்டும் விதமாக திருவிழாவில் 3ம் நாள் முதல் 7ம் நாள்வரை காந்திமதி கம்பை நதிக்கு நீராடச் செல்லும்போது அங்கே வரும் பெண்களை எல்லாம் அம்பிகையின் தோழியராக பாவித்து அவர்கள் நீராட, ஆலயத்தின் சார்பில் நல்லெண்ணெயும் பாலும் வழங்கப்படுகின்றன. இரண்டையும் சிரசில் வைத்து நீராட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.அடுத்தடுத்த நாட்களில் இடக்கையில் கமண்டலம், வலக்கையில் தீர்த்தக் கெண்டி ஏந்தி எளிய ஆடை உடுத்தி தவக்கோலம் பூண்டவளாய் ஆலயத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கோயிலுக்கு எழுந்தருள்வாள் அம்பிகை. நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் ஆரோகணித்து அக்கோயிலுக்கு சென்று காந்திமதிக்கு தரிசனம் தரப் புறப்படுவார். அவர் காந்திமதியுடன் மறுபடியும் ஆலயத்திற்கு வரும்போது நெல்லை கோவிந்தர் இருவரையும் ஆலய வாசலில் வரவேற்கும் வைபவம் நடைபெறும். பின் நெல்லையப்பருக்கும் காந்திமதிக்கும் விமரிசையாக திருமணம் நடைபெறும். ஸ்ரீகாந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தெற்கு வடக்காக 756 அடி நீளமும், மேற்கு-கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாகத் திகழ்கிறது.அம்பிகைக்கும், ஈசனுக்கும் தனித்தனி ஆலயங்கள். இந்த இரு ஆலயங்களும் இடையே அழகிய கல் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. அம்பாள் சந்நதியில் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது. நெல்லையப்பர் கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை பிரமிப்பூட்டுகிறது. கொடிமரத்தைக் கடந்து உள்ளே சென்று மூலவரை தரிசிக்கலாம். கருவறைக்கு முன்னால் 9 அடி உயர மிகப் பெரிய விநாயகர் சிலை உள்ளது. மூலவரைச் சுற்றி 3 பிராகாரங்கள். முதல் பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சந்நதிகள் அமைந்துள்ளன. கோவிந்தராஜப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருக்கிறார். இது சைவ-வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இரு துர்க்கை சந்நதிகள் உள்ளதும் குறிப்பிடத்தகுந்தது. முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்பவர் சிவபெருமானிடம் பெரும் பக்தி கொண்டிருந்தார். அவருடைய பக்தியை உலகோருக்கு வெளிப் படுத்த சிவபெருமான் ஒரு திருவிளையாடல் புரிந்தார். வேதபட்டர், இறைவனின் நைவேத்தியத்திற்காகத் தினமும் வீடு வீடாகச் சென்று நெல் சேகரித்து வருவார். ஒருநாள் அப்படிச் சேகரித்த நெல்லைச் சந்நதி முன் உலரப் போட்டுவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்தது. மழைநீரில் நெல் நனைந்துவிடப் போகிறதே என்று எண்ணி பதறியபடி வேதபட்டர் ஓடிவந்து பார்க்க, நெல்லைச் சுற்றி ஒரு வேலியிட்டாற்போல நெல் பரப்புக்கு வெளியே மழை பெய்வதையும், நெல் பரப்பப்பட்ட பகுதியில் மட்டும் வெயிலில் காய்வதையும் கண்டு திகைத்தார்.இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவித்தார். மன்னன் ராமபாண்டியனும் ஓடோடி வந்து பார்த்து பிரமித்தான். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தான். அன்று முதல் இறைவனை நெல்வேலி நாதர் என்று அழைக்கலானான். அதுபோல் வேணு வனம் என்ற அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தான். அன்னையின் ரசனைமிக்க புன்னகை ஒன்றிற்குத்தான் ஈசன் இங்கு திருக்கூத்தாடினார் என்பது வரலாறு. இத்திருத்தலம் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது. சொக்கநாத பிள்ளை, இத்தல அன்னையைப் போற்றி காந்திமதியம்மை பதிகம் பாடியுள்ளார். 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம். இத்தல தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. தமிழ்நாட்டின் முக்கிய நகரமான திருநெல்வேலி மாநகரத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலுமிருந்தும் பேருந்து, ரயில் பயண வசதிகள் அதிக அளவில் உள்ளன….

The post திருநெல்வேலி காந்திமதி அம்மன் appeared first on Dinakaran.

Tags : Tirunelveli Gandhimathi Amman ,Tirunelveli Nelleyapar ,Temple ,Tirunelveli Nagar ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்