×

மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலானது உலக அதிசயப் பட்டியலுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அற்புத ஆச்சர்யங்கள் கொண்ட ஆன்மிகத் தலமாகும். பதினேழு ஏக்கர்  நிலப்பரப்பில் விரிந்திருக்கிற இக்கோயில் ஆதியில் இந்திரனால் கட்டப்பட்டது என்கின்றனர். தனக்கு ஏற்பட்ட கொலைப்பாவமான ‘பிரம்மஹத்தி தோஷம்’ நீங்க பல தலங்களுக்குச் சென்று வந்த இந்திரன், கடம்பவனக் காட்டுப் பகுதிக்கு வந்தபோது, சுயம்புவாகத் தோன்றியிருந்த லிங்கத்தை வழிபட்டு, சிவபெருமானின் அருள் பெற்றதும், இங்கேயே சிறு கோயில் நிர்மாணித்ததும், திருவிளையாடற் புராணத்தால் தெரிய வருகின்றன.நான்கு திசைகளிலும் எழிலார்ந்த கோபுரங்கள் கோவில் வாயில்களாகவே திகழ்கின்றன என்றாலும், மீனாட்சி அம்மை கிழக்கு நோக்கி  அருள்பாலிப்பதால், கிழக்குக் கோபுரத்தை கைகூப்பி வணங்கியபடி உள்ளே நுழைவது மரபாகும். அவ்வாறு நுழைந்ததும் எதிர்ப்படுகிறது அட்டசக்தி மண்டபம். அதாவது எட்டு சக்திகளுக்கான மண்டபம். இடப்புறத்தில் கவுமாரி, ரவுத்ரி, வைணவி, மகாலட்சுமி எனவும் வலப்புறம் யக்ஞாரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி எனவும், இருபுறமும் எட்டு அம்பிகைச் சிற்பங்களைத் தரிசிக்கலாம். இந்த குளக்கரைக்குப் பல சிறப்புகள் உண்டு. 165 அடி நீளம், 120 அடி அகலமிக்க இக்குளத்தைச் சுற்றி, நாலாபுறமும் தூண்களுடன் கூடிய பிராகாரங்கள் அமைந்திருக்கின்றன. இதன் தென்புறத்தில்தான் திருக்குறள் அரங்கேற்றம் கண்டிருக்கிறது என்கிறார்கள். சிவபெருமானால் 64 திருவிளையாடல்களில் சிலவாகிய வெள்ளை யானையின் சாபம் தீர்த்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்குப்  பொற்கிளியளித்தது, கீரனைக் கரை ஏற்றியதுடன், இலக்கணம் உபதேசித்தது ஆகியவற்றுடன் இந்தப் பொற்றாமரைக் குளத்திற்கு தொடர்பிருக்கிறது.  இன்னொரு விஷயம் இக்குளத்தில் மீன் வசிப்பதில்லை – மீனாக விழித்திருந்து, மக்களை மீனாட்சி காப்பதாகிய அதிசயத் தத்துவத்தை  விளக்குவதுபோல! சிறிதுநேரம் குளக்கரைப் படிக்கட்டில் அமர்ந்து தென்றல் வருடலோடு, ஆன்மிக உணர்வு மேலோங்க, ஓய்வெடுக்கலாம். தென்மேற்குக் கரை பிராகாரத்தில் விபூதி விநாயகரை வணங்கலாம். அவரைச் சுற்றிலும்,  தனியே ஒரு பெட்டியிலும் வைக்கப்பட்டிருக்கும் விபூதியை இரு கைகளாலும் அள்ளி விநாயகருக்கு அபிஷேகம் செய்யலாம். இந்த விநாயகரை வணங்கிய பிறகே அம்மன், சுவாமியை வணங்கச் செல்வது தொன்றுதொட்டு நிலவிவரும் வழிபாட்டு முறை.தென்கிழக்குக் கரையிலிருந்து அம்மன்-சுவாமி கோயில்களின் தங்க விமானங்களை தரிசிக்கலாம். இதற்கென தரையில் ஒரு அடையாளம் போட்டு வைத்திருக்கின்றனர். அங்கே நின்றபடி அண்ணாந்து தங்க விமான தரிசனம் காணலாம். அடுத்து கிளிக்கூண்டு மண்டபத்து சித்திவிநாயகரையும், முருகரையும் வணங்கி, அம்மன் திருச்சந்நதியின் முன் உள்ள பலிபீடத்தை வலம்வந்து, மீனாட்சியம்மனை தரிசிப்பதற்கான பிரதான வாயிலுக்குள்  நுழையலாம். இரண்டாம் பிராகாரத்தை வலம் வரும்போது கிழக்குப் பகுதியில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலையையும், மேற்குப் பகுதியில்  கொலு மண்டபத்தையும் கண்டு வியக்கலாம். பின் வடமேற்கிலுள்ள கூடல் குமாரர் சந்நதியில் வழிபடலாம். கொடிமரத்தைக் கடந்து ஆறுகால் பீடத்தை அடையலாம். இங்குதான் குமரகுருபரர், மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழை அரங்கேற்றம் செய்திருக்கிறார் என்ற தகவல் சிலிர்க்கவைக்கிறது. மூலத்தானத்தின் தென்பகுதியில் உச்சிஷ்டர், கூத்தர் என இரட்டை  விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். இங்கே ஒவ்வொரு சந்நதியிலும் முதன்மையாக விநாயகர் இருக்கிறார். விநாயகரே, விநாயகரை வணங்கித் துவக்கும் தத்துவமாக இந்த ‘இரட்டை விநாயகர்’ இருக்கின்றனர்! தென்மேற்கில் உள்ள ஐராவத விநாயகர், வல்லபை விநாயகர் மற்றும் நிருத்த  கணபதியுடன், வடமேற்கில் முத்துக் குமார சுவாமியையும் தரிசிக்கலாம். மூலவர் சுந்தரேஸ்வரரை தரிசிக்கலாம். ஆதியும் அந்தமுமில்லாத அந்தப் பெருங்கருணையை காணும்போது நெஞ்சு நிறைகிறது. எத்தனை எத்தனை  திருவிளையாடல்கள் புரிந்த அற்புத இறைவன்! பக்தர்களை ஆட்கொண்டு இம்மையிலும், மறுமையிலும் அவர்களுக்கு அபிரிமிதமான ஏற்றங்களை அள்ளி அருளும் அரன்! நெஞ்சு விம்ம அவரை சிரம் தாழ்த்தி  தொழுது வணங்குகிறோம். கருவறை வெளிச்சுற்று மாடங்களில் எழுந்தருளியுள்ள மூன்று சக்திகளையும் வழிபட்டு வலம் வந்து, அடுத்து மீனாட்சி அம்மனை தரிசிக்கலாம். மீன் போன்ற கண்களை உடையவள் என்ற பொருளில் இறைவி ‘மீனாட்சி’ எனப்படுகிறாள். மீன் தன் பார்வையால் முட்டைகளை பொரியச்செய்து பின் பாதுகாத்தும் வரும் கருணையைப் போலவே, உலக மக்களுக்கு தன் அருட்பார்வையில் நலம் தருவாள் எனும் நயமும் இதில் அடங்கியிருக்கிறது. கண் துஞ்சாமல் மீன் இரவு, பகல் விழித்துக்கிடப்பது போலவே இந்த மதுரை தேவியும் கண்ணிமைக்காது உலகைக் காத்து வருகிறாள் என்று பொருள்.ஆயகலைகளின் முழுவடிவாகிய கிளியை மீனாட்சியம்மன் தன் திருக்கரத்தில் ஏந்தி நிற்கிறாள். பக்தர் அம்மனிடம் கோரிக்கையை தெரிவிக்கிறார், அதைக் கவனமாகக் கேட்கும் கிளி, அதை திரும்பத் திரும்ப அம்மனுக்குச் சொல்லி, பக்தர் துயர் களைய அந்தக் கிளி உதவுகிறதாம்! முக்குறுணி விநாயகர் அற்புதக் காட்சி தருகிறார். எட்டடி உயரமிக்க இந்த விநாயகர் கோயிலில் தெற்குமுகமாக  நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மதுரை நகரின் கிழக்கே திருமலை மன்னர், தெப்பக்குளம் தோண்டியபோது கிடைத்த இச்சிலையை, இங்கே பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு மாதந்தோறும் விழா நடைபெறுவது பக்தர்களின் ஆன்மிக உணர்வுக்கு அருள் சேர்க்கிறது: சித்திரை: சித்திரைத் திருவிழா, சித்திரை மாதம் வளர்பிறையில் துவங்கி சித்ரா பவுர்ணமியன்று முடிவடையும். முதல் நாள் கொடியேற்றம். பின் ஒவ்வொரு நாளும் அம்மனும், சுவாமியும் புராண சிறப்புடைய வாகனங்களில் வீதி உலா வருவர். 8ம் நாள் மீனாட்சி பட்டாபிஷேகம், செங்கோல் வழங்கும் வைபவம். 9ம் நாள் மீனாட்சி திக் விஜயம், 10ம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும். 11ம் நாள் தேர்த் திருவிழா, 12ம் நாள் தீர்த்த விழா மற்றும் வைகையில் அழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதுடன் சித்திரைத் திருவிழா நிறைவடையும்.கோயிலின் நுழைவாயில் துவங்கி, வெளியேறுவது வரை உள்ள சிற்பங்கள், கொண்டாடப்படும் விழாக்கள், கோயில் பொற்றாமரைக்குளம், கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளின் சிறப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக அணிவகுத்து நிற்கும்போது மலைப்பு ஏற்படுவது உண்மை. தொகுப்பு: செ.அபுதாகிர்

The post மதுரை மீனாட்சி அம்மன் appeared first on Dinakaran.

Tags : Madurai Meenatchi Amman ,Madurai Meenatsiyamman Temple ,
× RELATED மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாத...