*ஒன்பது வயதுக் குழந்தையாக அருள்கிறாள், பாலாதிரிபுரசுந்தரி. மழலை வரமருளும் மாதேவி இவள்.*ராஜராஜேஸ்வரியின் கரும்பு வில்லிலிருந்து தோன்றிய சக்தியே ராஜமாதங்கி. பக்தருக்கு சகல கலைகளும் அருளும் தேவி.*அம்பிகையின் பஞ்ச புஷ்ப பாணங்களிலிருந்து தோன்றியவள் வாராஹி. இத்தேவியை பஞ்சமி தினங்களில் வழிபட்டு நற்பலன் பெறலாம்.*தேவியின் பாசம் ஆயுதத்திலிருந்து தோன்றியவள் அஷ்வாரூடாதேவி. தம்பதியர் ஒற்றுமைக்கும், பிரிந்த தம்பதியர் சேர்ந்திடவும் அருள் புரிபவள்.*பராசக்தியின் அங்குசத்திலிருந்து தோன்றியவள் ஸம்பத்கரி தேவி. வற்றாத செல்வவளம் அருள்பவள். *மஹாகணபதியைப் போன்றே உருக்கொண்ட தேவி, வித்யாகணபதி. தடைகள் பொடிபடச் செய்பவள்; ஐஸ்வர்யங்கள் அருள்பவள்.*அம்பிகையும் கிருஷ்ணனும் இணைந்த திருவடிவம் கோபாலசுந்தரி.மழலைப் பேறு கிட்ட வரமளிப்பவள்.*நான்கு யானைகள் சூழ தோன்றும் மகாலட்சுமி, கமலாத்மிகா எனப்படுகிறாள். 16 செல்வங்களையும் வழங்கும் தேவி இவள்.*கருடன்மேல் ஆரோகணித்த திருமாலின் இடது தோளில் அமர்ந்தருளும் மகாலட்சுமியின் திருவுருவை பராம்பிகை என்கிறார்கள். ஞானமும், கல்வியும் அருளி, நோய்தீர்க்கும் தாய் இவள்.*வில் அம்பு ஏந்தி பார்வையை புருவமத்தியில் செலுத்தி, வயிற்றில் ஐம் பீஜத்துடன், மூன்று நீலக்குதிரைகள் பூட்டிய ரதத்தில் திகம்பரியாய் திருவருள் புரிபவள் திரஸ்கரணியம்பா. எதிராளியின் மனதிலிருப்பதை நமக்கு உணர்த்தவல்லவள். *ஒரு கையில் எழுதுகோல், ஒரு கையில் புத்தகத்துடன் அருளும் வாக்வாதினி தேவி, கல்வி வளம் சிறக்கச்செய்வாள்.*மண்டியிட்டு அமர்ந்த பைரவரின் மேல் ஆரோகணித்திருப்பவள் பத்மாவதி. தேவி மகாத்மிய பதின்மூன்று அத்தியாய பலன்களைத் தருபவள்.*துடுப்பால் படகை செலுத்தும் பாவனையில் அமர்ந்தவள், குருகுல்லா தேவி. சம்சாரக் கடலில் தவிப்பவர்களைக் கரையேற்றுபவள். *இரு கரங்களிலும் மாதுளங்கனிகள் தாங்கிய, சித்தலக்ஷ்மியை வழிபட்டால் சிறைவாச பயத்திலிருந்து நிவாரணம்பெறலாம்.*வயோதிக வடிவில் அங்கங்கள் தளர்ந்து ஒற்றைக் காகம் இழுக்கும் ரதத்தில், கையில் முறத்தையும், துடைப்பத்தையும் வைத்த வண்ணம் தரிசனமளிப்பவள் தூமாவதி. எதிரிகளின் தொல்லை நீக்கவல்லவள். *ஒரு கரத்தில் வீணை, மறு கரத்தில் பானபாத்திரம் ஏந்தி நின்ற கோலத்தில் காட்சியளிப்பவள் லகுச்யாமா. கல்வி வரம் அருள்பவள்.*ஒரு கரத்தில் தாமரை மலர், ஒரு கரத்தில் அமிர்தப் பொற்கிண்ணம் ஏந்தி, பொற்கலசத்தில் திருவடிகளைப் பதித்திருக்கும் தேவி, ஸிந்தூராருணவிக்ரஹாம் எனப்படும் லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முதல் த்யான ஸ்லோக தேவி சகல மங்களங்களையும் அருள்பவள்,*சங்கு, சக்கரம், கதை, தாமரை, வில். அம்பு, வரதம், அபயம் தாங்கி, நீல நிறம் கொண்ட மகாலக்ஷ்மி, சர்வஸாம்ராஜ்யலக்ஷ்மி எனப்படுகிறாள். சகல வளங்களையும் தருபவள்.*கண்ணனும், பைரவியும் சேர்ந்த திருவடிவம் கோபால பைரவி. இக பர சுகங்கள் கிட்டவும், வீண் பயம் விலக்கவும் செய்பவள்.*கருடனின் மேல் ஆரோகணித்து சங்கு, சக்ரம், வாள், வில், கத்தி தாங்கி சுற்றிலும் கீரிப்பிள்ளைகள் சூழ காட்சி தருபவள் நகுலீ தேவி. வாக்கு வன்மை அருள்பவள்.– ந.பரணிகுமார்…
The post தேவியின் திருவடிவங்கள்!! appeared first on Dinakaran.