×

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி

தமிழக சக்தி பீடங்கள்திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது.அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இச் சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. அம்பாள்: சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி’ என்றழைக்கப்படுகிறாள். இத்திருத்தல அகிலாண்டேஸ்வரி கம்பீரமான, திருத்தோற்றமுடையவள்; கருணை பொழிகின்ற திருமுக நாயகி; வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமா சித்திகளை அருள்பவள். இந்த சிவசக்தி ஸ்வரூபிணியை நாமும் பணிந்து அருள் பெறுவோம். அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சந்நதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சந்நதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர். இது இத்தல விசேஷமாகும்.ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.ஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீ சக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால், இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீ சக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்தபோது, அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால், பள்ளியறை இருக்கிறது. இந்த பள்ளியறைக்கு இங்கு அருட்பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர். சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற, அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள அம்பாள், வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். வேதியரிடம், “”நான் வெற்றிலை போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே, உம் வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்து கொள்கிறேன்,’’ என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். “”கோயில் பாழ்படாமல் இருக்க, எந்த தியாகத்தையும் செய்வேன், பெண்ணே! தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள்,’’ என்றார். அம்பாளும் அப்படியே செய்ய, அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில், சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர். 51 சக்தி பீடங்களில் இத்தலம் ஞானபீடமாகத் திகழ்கிறது.அகிலாண்டேஸ்வரி, வாராஹி தேவியின் அம்சமாக வணங்கப்படுகிறாள். உயரமான குத்துவிளக்கு தீபம் அசைய அந்த அசைவின் ஒளியில் புன்னகையோடு வீற்றிருக்கும் அகிலாண்டேஸ்வரியின் தரிசனத்தால் இருளில் தவிக்கும் பல குடும்பங்கள் ஒளி பெற்று விளங்குகின்றன. இந்த அம்மனுக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி செய்யப்படுகிறது. ஆடி வெள்ளியில் அகிலாண்டேஸ் வரியை மாணவியாக பாவித்து, இத்தல ஈசனான ஜம்புகேஸ்வரர் குருவாக இருந்து உபதேசம் செய்வதாக ஐதீகம். எனவே, அன்று மாணவ, மாணவியர் அதிகம் பேர் வந்து, தம் கல்வி மேம்பட வேண்டி செல்வர்….

The post திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி appeared first on Dinakaran.

Tags : Thiruvanaikaval ,Akilandeswari ,Tamil Nadu ,Shakti Faculties ,Thiruvanaiyakawal ,Trichy ,Thirunanasampandar ,Sunderar ,Arunagirinathar ,Motherman ,IIDs ,Kadavarkon ,Thiruvanaikaval Akilandeswari ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில்...