×

பிள்ளையார் வழிபாடு காட்டும் நீரியல் தத்துவம்

முனைவர் செ.ராஜேஸ்வரிஎறும்புப் புற்றின் அருகிலும் மரத்தடியிலும் பிள்ளையார் மற்றும் நாகர்களை வைத்து வழிபடுவதன் உயர் ஞானத்தை எப்போது புரிந்து கொள்வோம் வாருங்கள்? பிள்ளையாருக்கு நாவல் பழமும் விளாம்பழமும் வழிபாட்டு பொருட்களாகப் படைக்கின்றோம். தண்ணீரின் அளவை காட்டும் முதல் தரக் குறியீடுகளான வேப்ப மரம், ஆல மரம் மற்றும் அரச மரத்தின் கீழ் பிள்ளையாரை வைத்து வழிபடுகிறோம். ஏன் இவ்வாறு செய்கின்றோம்? இதன் தத்துவ ரகசியம் என்ன என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?‘கஜானன பூத கனாதி சேவிதம்’ எனத் தொடங்கும் ஸ்லோகத்தின் அடுத்த வரி அவருடைய உணவு பொருளான மோதகம் பற்றி சொல்கிறதே அதை பற்றிய ஆய்வு நமக்கு தண்ணீரியல் தத்துவ ரகசியம் ஒன்றைப் பூடகமாக விளக்குகிறது.   கபித ஜம்பு ஃபலசார என்ற தொடர் விளாம்பழம் மற்றும் நாவல் பழத்தின் சாரத்தைக் குறிக்கிறது. இந்த இரண்டு பழங்களும் மக்கள் விரும்பி சாப்பிடும் அளவுக்கு இனிப்பானவை அல்ல. ஆனால் அந்த மரங்கள் அக்காலத்தில் நிறைய இருந்திருக்கலாம். அதனால் தான் ஜம்பு தீவு அல்லது நாவலந்தீவு என்று  முன்னோர் அழைத்திருக்கலாம்.  இந்த இரண்டு பழங்களைப் பிள்ளையாருக்கு படைப்பதன் காரணத்தை ஆராய்ந்த போது எனக்கு வியத்தகு உண்மைகள் தெரிய வந்தன. நம்முடைய முனிவர்கள் நீரியல் அறிவை பாதுகாத்துள்ளனர். ஆம் தண்ணீரின் மூலாதாரம் எது என்பதை உணர்த்தும் ரகசியம். ரிஷி மூலம் நதி மூலம் என்பார்களே அது போல தண்ணீரின் மூலாதாரம் எது என்பதன் ரகசியம் இதில் பொதிந்துள்ளது. இதன் மூலமாகப்  பிள்ளையாரை மூலப்பொருளே முதற்பொருளே என்பதன் காரணத்தையும் அறிந்துகொள்ளலாம்.பிள்ளையாருக்கும் நீர் மூலாதாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இன்றைய தலைமுறையினருக்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்ததும் பிள்ளையாரைத் தண்ணீரில் மூழ்கடித்து விடுவது  மட்டுமே தெரியும். எங்கெங்கு நீர்நிலை இருந்தாலும் அங்கங்கு ஒரு பிள்ளையார் சிலையை வைத்து அவருக்கு வழிபாடு செய்வதன் ரகசியம் தெரியுமா? பெரும்பாலும் அவர் அரசமரத்தின் அடியில் தான் கோயில் கொண்டுள்ளார். அரச மரம் நீர் வளம் நிறைந்த செழிப்பான  பகுதிகளில் மட்டுமே வளரும். இவ்வாறு ஆற்றங்கரையிலும் கண்மாய் கரையிலும் குளக்கரையிலும் வைத்து வழிபடப்படும் அரசமரத்தடிப் பிள்ளையாரை தமிழ்நாட்டில் எங்கும் பரவலாகக் காணலாம்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் நடந்ததைப் போல தென்னிந்தியாவில் அன்னியர் படையெடுப்பால் கோயில்கள் அதிகளவில் அழிக்கப்படவில்லை. இன்றைக்குப் பல குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் அதிகளவில் அங்குக் கட்டப்பட்டு விட்டாலும் அங்கிருந்த பிள்ளையார் கோயில்களை யாரும் எடுத்து விடவில்லை. அவற்றை அங்கு புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்புகளில் புனரமைத்து வைத்துள்ளனர். இப்போது பிள்ளையார் வழிபாட்டில் மிஞ்சியிருப்பவை கபிதா எனப்படும் விளாம்பழமும் ஜம்பு எனப்படும் நாவல் கனிகளும் மட்டுமே. இந்தக் கனிதரும் மரங்களுக்கும்  நீரியலுக்கும் [hydrology] இருக்கும் தொடர்பை ஆராய்வோம்.விளாமரமும் நாவல் மரமும் நிலத்தடி நீர் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டுமே வளரும். நிலத்தின் அடியில் காணப்படும்  நீரோட்டத்தை ஜல நாடி என்பர். தக்காணப் பீடபூமி உற்பத்தியான சமயத்தில் கசிந்து வந்த லாவா எனப்படும் எரி கூழ் ஓடிய தடங்கள் குளிர்ந்து நிலத்தடியில் நீரியல் தடங்களாக மாறிவிட்டன. இந்த நீரியல் பாதையில் எப்போதும் நிலத்துக்கு அடியில் நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கும். நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில் மட்டுமே விளாமரங்களும் நாவல் மரங்களும் செழித்து வளரும். இத்தகைய நீர்வளம் தேடும் மரங்களாக ஐம்பது மரங்களை பிருஹத் சம்ஹிதை என்ற நூலில் வராஹமிஹிரர் காட்டுகிறார். இவற்றில் விளா மரமும் நாவல் மரமும் இடம்பெற்றுள்ளன. இந்த இரு மரங்களும் நிலத்தடி நீரோட்டம் இருக்கும் இடங்களில் வளரும். இம்மரங்கள் நீரோட்டம் இருக்கும் இடங்களில் மற்றும் ஜலநாடி ஓடும் இடங்களில் குறிப்பிட்ட திசை நோக்கியும் குறிப்பிட்ட தொலைவிலும் வளர்கின்றன. இப்பகுதியில் எறும்புப் புற்றுகளும் ஏராளமாகக் காணப்படும்.தென்னிந்தியாவில் மரங்களை வைத்து ஜல நாடி எனப்படும் நீரோட்டம் கண்டறிவது ஒன்றும் அதிசயம் அல்ல. வராஹமிஹிரர் கருத்துப்படி சரஸ்வதி நதியின் அருகே பிறந்த ஒரு முனி சாரஸ்வதா எனப்பட்டார்.  மகாபாரதத்தில் சல்லிய பருவத்தில் [49] சரஸ்வதி நதி தீரத்தில் ஒரு முனிவர்  பிறந்தார் என்பது இந்த சாரஸ்வதா முனிவரைத் தான் குறிக்கிறது.  இவர் பன்னிரெண்டு வருடங்கள் பஞ்சம் வந்த சமயத்தில் எல்லோரும் இந்த சரஸ்வதி நதிக்கரையை விட்டு புலம் பெயர்ந்து போய்விட்டனர். ஆனால் நீரோட்டம் தெரிந்திருந்த சரஸ்வதா மட்டும் இங்கேயே தங்கியிருந்து வேத பாராயணங்களைச் செய்து வந்தார். சரஸ்வதி நதி மழை நீரால் உருவாகிறது என்பதும் இமாலய மலைப்பகுதியில் உள்ள பனி உருகிய நீரால் இந்த நதி உருவாகவில்லை என்பதும் தெளிவாகிறது. பன்னிரு ஆண்டுகள் பஞ்சம் வந்ததில் நதி காய்ந்துவிட்டது. ஆனால் சாரஸ்வதாவால் ஆற்றின் அடி நீரை எடுத்துப் பயன்படுத்த அங்கு கரையில் இருந்த சில மரங்கள் உதவின. இன்னின்ன மரங்கள் இருக்கும் இடங்களில் அடிநிலத்தில் நீரோட்டம் இருக்கிறது என்பதை சரஸ்வதா உணர்ந்திருந்தார். அவர், தாம் கண்டறிந்ததைத் தனக்கு பின் வந்தவர்களுக்குத் தெரிவித்ததால் அவை பின்னர் வராஹமிஹிரரால் 98 பாடல்களாக பிருகத் சம்ஹிதையில் இடம்பெற்றன.சாரஸ்வதாவின் கருத்துப்படி தானாக வளர்ந்த நாவல் மரம் இருக்கும் இடத்தில் அதற்கு நான்கரை அடிக்குக் கிழக்கே நிலத்தடி நீர் இருக்கும். அந்த நீர் பன்னிரெண்டு அடி ஆழத்தில் கிடைக்கும்.  நாவல் மரத்தின் அருகே எறும்புப் புற்று காணப்பட்டால் அம்மரத்திற்கு தெற்கே 12 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும். நாவல் மரத்தின் கிழக்கே எறும்புப் புற்று இருந்தால் அந்தத் திசையில் 12 அடியில் தண்ணீர் கிடைக்கும் விளா மரத்திற்குத் தெற்கே பத்தடி தொலைவிற்குள் பாம்புப் புற்று இருந்தால் அங்கிருந்து வடக்கே நிலத்தடி நீர் ஏராளமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு சில குறிப்பிட்ட மர வகைகளைக் கொண்டு நிலத்தடி நீர் அறியப்பட்டது. இந்த மரங்களை அழிவில் இருந்து பாதுகாக்கவே இவற்றிற்கு தெய்வீக முக்கியத்துவம் வழங்கினர். விளாம்பழமும் நாவல் பழமும் விநாயகருக்கு காணிக்கை பழங்கள் ஆயின. எனவே, விநாயகரை ஆலமரம், அரச மரம் மற்றும் வேப்ப மரங்களின் அடியில் வைத்தனர். இம்மரங்கள் அதிகளவில் நீர் இருக்கும் இடத்தில் மட்டுமே வளரும். மதுரையில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தைத் தோண்டிய போது அங்கு முன்பு கோயில் கொண்டிருந்த பெரிய பிள்ளையார் கிடைத்தது. அதை 17ஆம் நுற்றாண்டில் முக்குறுணி விநாயகர் என்ற பெயரில் மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்தனர். இன்று இந்தப் பிள்ளையார் இருந்த இடம் மிகப் பெரிய தெப்பக்குளமாக தண்ணீர்  நிறைந்த இடமாக உள்ளது.  நல்ல நீரோட்டம் இருந்த இடத்தில் இந்தப் பெரிய பிள்ளையார் கோயில் கொண்டிருந்தார் என்பது தெளிவாகின்றது. பல பிள்ளையார் கோயில்கள் தண்ணீரோடு தொடர்புடையனவாகவே உள்ளன.இந்தப் பின்னணியில் பீஷ்மருக்கு அருகில் அர்ஜுனன் அம்பை பூமியில் எய்து தண்ணீர் கொண்டு வந்தான் என்ற கதையை ஆராய்ந்தால் பூமிக்கு அடியில் இருந்த நீரோட்டம் பற்றிய அறிவு அவனுக்கு இருந்தது புலப்படும். மகாபாரதம் அர்ஜுனன் தன் ரதத்தில் இருந்தவாறு பீஷ்மருக்குத் தெற்கே அம்பு எய்தான் என்கிறது.  அவனுக்கு தன் பெயருக்கு ஏற்ப அங்கு எங்கேயாவது இருந்த அர்ஜுனா மரத்தின் அருகில் நீரோட்டம் இருப்பது தெரிந்திருக்கும். அர்ஜுனா  என்று அழைக்கப்படும் மருத மரத்திற்கு வடக்கே எறும்புப் புற்று காணப்பட்டால் அதற்கு 21 அடி மேற்கே பூமிக்கடியில் நல்ல நீரோட்டம் இருக்கிறது என்று சாரஸ்வதா தெரிவித்திருக்கிறார். பீஷ்மரைச் சுற்றி வரும்போது அர்ஜுனன் அங்கிருந்த மரங்களையும் எறும்புப் புற்றையும் கவனித்து அவற்றின் அடியில் இருக்கும் நீரோட்டத்தை அறிந்து அதற்கேற்ப அம்பை எய்திருக்கலாம்.இந்த மரங்களின் பின்னணியில் உள்ள ரகசியத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்? மரத்துக்கு அடியில் பிள்ளையாரையும் பாம்புகளையும் வைத்திருப்பதன் தாத்பர்யத்தை அவற்றில் இருக்கும் ஞான ரகசியத்தை இப்போது பார்ப்போமா? பூமிக்கு அடியில் காணப்படும் ஜலநாடி எனப்படும் நீரோட்டத்தை அறிந்துகொள்ள இந்த மரங்களையும் அவற்றின் அடியில் காணப்படும் எறும்புப் புற்றுகளையும் பாதுகாக்கவேண்டியது மக மிக அவசியமாகும். எறும்புப் புற்றுகளுக்குள் பாம்புகள் இருக்கலாம் என்பதை உணர்ந்ததனால் அங்கு பால் தெளிக்கும் பழக்கத்தை வைத்திருந்தனர் எனக் கருத இடமுண்டு. அங்கு புற்றுகளில் பால் ஊற்றி  வழிபட்டால் பாம்புகள் கோடை காலத்திலும் குளிர்ச்சியாகத் தங்கியிருக்கும். வெளியே வராது. மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது.மக்களின் உளவியலை மனதில் கொண்டவர்களாகவே நம் முன்னோர்கள் நமது கடவுள் வழிபாட்டு முறைகளை வடிவமைத்திருந்தனர் என்பது தெரிய வருகிறது. தற்காலத்தில் இந்த நாவல் மரங்களும், விளா மரங்களும் அருகிவிட்டன. இவற்றை நீர்நிலைகளுக்கு அருகே காண முடியவில்லை. மரங்களை அதிகளவில் வெட்டி விட்டனர். இனியாவது நாம் இந்த மரங்களை குளக்கரைகளில் கண்மாய் கரைகளில் வைத்து வளர்க்க வேண்டும்….

The post பிள்ளையார் வழிபாடு காட்டும் நீரியல் தத்துவம் appeared first on Dinakaran.

Tags : Piliyar ,Rajeshwari ,Pilliyar ,Nagas ,Dinakaran ,
× RELATED முன்னாள் முதல்வருடன் நாட்டியம் ஆடினேன்!