×

ஆளுடைப் பிள்ளையின் பெருமணம்

சமயம் வளர்த்த நாயன்மார்கள்-7ஆளுடைப்பிள்ளை எனும் திருஞானசம்பந்தர் ஞானம் தளும்ப ஈசனின் புகழை ஞாலம் முழுதும் பரப்பிவந்தார். தான் அருந்திய ஞானம் எனும் பாலில், தேனெனும் பக்தியைக் குழைத்து பதிகங்களாக்கினார். பாரிலுள்ளோர் அனைவருக்கும் பகிர்ந்தளித்தார். அதைப் பருகியோர்கள் வெண்மையாய் மாறினார்கள். வெண்மையான திருநீற்று வழியில் தங்கள் திருவுளம் பற்றினார்கள். பற்றியோர் பற்றற்று அவர் முன் நின்றனர். ஈஸ்வர பக்தியில் பிழம்பாய் சிவந்தனர்.  தென்னாடு முழுவதும் அவர் திருவடி சிவக்க நடந்தார். ஈசனின் பேரணையால் அற்புதங்கள் பலவும் புரிந்தார். சமணப் பண்டிதர்கள் பலரை வாதில் வென்றார். சீர்காழியில் தொடங்கிய சிவப்பணி ஒரு திருச்சுற்றாகச் சுற்றி திரும்பவும் சீர்காழிக்காய் நகர்ந்தது.ஈசன் வேறொரு முனை நோக்கி நகர்த்தினார். அது புரிந்தவராய் தன் திருப்பாதத்தை அந்த திக்கு நோக்கி திருப்பினார். ஒரு பெரிய அடியார் கூட்டம் இரவு, பகலாய் அவர் அடியொற்றி நடந்தது. சீர்காழியை நெருங்கியது.சீர்காழி திருஞானசம்பந்தரை பெருந்திரளாய் திரண்டு வரவேற்றது. தன் வீட்டுக் குழந்தையல்லவா இது என்று கண்களில் நீர் தளும்ப நின்றது.  தன் தந்தையான சிவபாதஹிருதயரின் பாதம் தொட்டார். சிவபாதர் தன் இதயப் பூர்வமாக ஆசி அருளினார். ஞானப்பால் அருந்திய தன் பால்மணம் மாறாத பாலகன் மணவயதை எட்டிய பருவ மகனாக இருப்பதைப் பார்த்து வியப்புற்றார். திருமணம் செய்ய வேண்டுமே என்று கவலையுற்றார். மெல்ல அது குறித்து பெரியோர் பலர் கூடும் சபையில் சொல்லிப் பார்த்தார்.சபை இது முடியுமா என்று சந்தேகத்தோடு பார்த்தது. சரி கேட்டுப் பார்க்கலாமே என்று கேள்வியோடு சம்பந்தப் பெருமானை நெருங்கியது.திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் இயற்றிக்கொண்டிருந்தார். பெரியோர்களைக் கண்டதும் அகம் குளிர முகம் மலர்ந்தார். அருகே வரச் சொன்னார். ஆசனம் காட்டி அமரச் சொன்னார். அந்த சிறு சபை அமைதியாய் அமர்ந்தது. ஒரு நிமிடம் ஞானசம்பந்தரையே பார்த்தது. அவர் குழந்தையாகவே இருந்தார். முகத்தில் ஏதோ ஒரு ஆனந்தம் தளும்பி, ததும்பி வழிந்து கொண்டிருந்தது. பேச வந்தவர்கள் பேச்சற்று பேரமைதியில் ஆழ்ந்தார்கள். சம்பந்தர் சட்டநாதர் கோயிலைப் பார்க்க, அக்குளத்தை அரவணைத்தபடி தென்றல் அங்குள்ளோரை குளுமையாய் தழுவியபடி நகர்ந்தது. அப்போதுதான் தாங்கள் வந்து வெகுநேரமாகிவிட்டிருந்ததை அந்த சபை உணர்ந்திருந்தது. இவரை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று எப்படிச் சொல்வது. அந்தச் சபை விழித்தது.சிவபாதர் சம்பந்தரை நோக்கினார். சட்டென்று விஷயம் சொன்னார். அந்தச் சபையும் தந்தையின் கவலை நியாயம் என்றது. சம்பந்தர் பெரியோர்களை பார்த்தார். சட்டநாதர் கோயிலையும், குளத்தின் படித்துறையையும் பார்க்கச் சொன்னார். பெரியோர்கள் புருவம் சுருக்கினார்கள். என்ன சொல்கிறீர்கள் என்பது போல் பார்த்தார்கள். மெல்ல பேச ஆரம்பித்தார்.‘‘நீங்கள் திருமணம் என்று எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. ஆனால், அந்த குளக்கரையிலேயே என் பால்ய வயதில் ஒரு திருமணம் நடந்து விட்டது. அதற்குப் பிறகு வேறொரு மணம் தேவைப்படாது. ஈசனைத் தவிர வேறொருவரை மணக்க முடியாது. இது முற்றிலும் வேறான நிலை’’ என்று முடித்தார்.அந்த சபை சற்று முன்னே நகர்ந்தது. ‘‘ஆயினும் உலக வழக்கம் வேறானது. வேதங்கள் மூலம் வேள்விச் சடங்குகளை நிறைவேற்றும் பொறுப்பு உள்ளது. வைதீக நெறியில் பிறழாது மணம் முடிப்பது உங்கள் கடமை’’ என்றது.சிவபாதர் பெண்ணின் பெயர் சொன்னார். குலம்பற்றிக் கூறினார். தந்தையின் சிவபக்தியை மெச்சிப் பேசினார். இறுதியாய் உன் சம்மதம் மட்டுமே என்று காத்திருந்தார்.திருஞானசம்பந்தர் கண்கள் மூடினார். உள்ளே ஈசன் ரிஷபாரூடராய் சிரித்தார். எந்த ஊர் என்று தந்தையை இன்னொரு முறை கேட்டார். அவர் ஊரின் பெயர் சொன்னார்.அவர் சொல்லி முடிக்கும்போது அந்தச் சபையில் உள்ளோர் உடல் ஏனோ சிலிர்த்துப் போட்டது. ஞானசம்பந்தர் அவ்வூர் திக்கு நோக்கி நமஸ்கரித்தார். பெரும் அடியார் கூட்டத்தோடு நடக்கத் துவங்கினார்.அந்த அழகான கிராமத்திற்கு திருநல்லூர் பெருமணம் என்று பெயர். சிவத்தொண்டர்களால் பழுத்த ஊர். அதில் நம்பியாண்டார் நம்பி கனிந்த பழமாயிருந்தார். எப்போதும் சம்பந்தரின் பதிகங்களை பாடியபடி கிடந்தார். ஈசன் அவரின் பூரண பக்தி பார்த்து பூர்ணாம்பிகை எனும் பெண்ணை புதல்வியாக அருளினார். ஸ்தோத்திரங்களை முழுமையாய் , பதம் பிரித்து அழகாய் சொல்வாள். அதனால் ஸ்தோத்திர பூர்ணாம்பிகை என்று அன்பாய் அழைக்கப்பட்டாள். அவள் சொல்லும் ஸ்லோகம் கேட்போரின் மனதை சொக்க வைப்பதால் சொக்கியார் எனவும் புகழப்பட்டார். அழகும், அருளும் பூரணமாகி நிறைந்திருந்தாள். ஞானசம்பந்தப் பெருமான் தன்னை மணக்கப்போகிறார் என்றவுடன் இன்னும் சிவந்தாள். கண்களில் நீர் வழிய அவ்வூர் ஈசனின் சந்நதியிலேயே கிடந்தாள். இன்னும் அதிகமாய் ஸ்தோத்திரங்களை பாடியபடி பரவசித்திருந்தாள். நம்பியாண்டார் நம்பி நெக்குருகினார். ஈசனே இதென்ன பாக்கியம் என்று ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினார்.வெகுதொலைவே ‘நமசிவாய… நமசிவாய…’ எனும் அடியார்களின் குரல் அக்கோயிலின் கருவறையில் எதிரொலித்துத் திரும்பியது.ஈசன் மெல்ல அவ்வூரை தன் தீந்தழலால் தழுவிக் கொண்டான். ஊரிலுள்ளோர் அனைவர் நெஞ்சிலும் சட்டென்று ஒரு தீபம் சுடர் விட்டு எரிந்தது. மெல்ல அந்தக் கோயில் எல்லோரையும் தன்னை நோக்கி இழுத்தபடி இருந்தது. ஞானசம்பந்தர் அவ்வூரின் எல்லையைத் தொட்டார்.சட்டென்று ஒரு பெருஞ்ஜோதி அக்கோயிலுக்குள் சுழன்று சுழன்று எழுந்தது. அடர்ந்து சிவந்து லிங்கத்துள் அமர்ந்தது. உள்ளுக்குள் தகதகத்து ஒளிர்ந்தது. ஒரு மாபெரும் மாற்றத்திற்காய் காத்திருந்தது. காந்தம் போல ஓர் விசை, இழுப்பினால் துடிப்போடு இருந்தது. மேற்பார்வைக்கு சாதாரணமாய் தெரிந்தது. ஆனால், எங்கேயோயிருந்து அதை உணர்ந்த ஞானத் தபோதனர்களான திருநீலநக்கநாயனார், முருகநாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஆகியோர் பெருமணநல்லூர் அடைந்தனர். கங்கையில் மூழ்கிய காகர் எனும் முனிவர் இக்கோயில் குளத்தில் எழுந்தார். சம்பந்தருக்காய் காத்திருந்தார்.திருமணநாள் நெருங்க நெருங்க ஊரே திருவிழாக்கோலம் பூண்டது. ஞானசம்பந்தர் அழகராய் இருந்தார். சுந்தரமாய் சுடர்விட்டுப் பிரகாசித்தார். சொக்கியார் பூரண அழகோடும் , அலங்காரங்களோடும் சபைக்கு அழைத்துவரப்பட்டார். திருநீலநக்க நாயனார் நெற்பொரியை வேள்வித் தீயில் செலுத்திக் கொண்டிருந்தார். சம்பந்தர் சொக்கியார் கரத்தை பிடித்தவாறு வேள்வித்தீயை வலம் வந்துகொண்டிருந்தார். வலம் வரும்போது அம்மி மிதிக்க வேண்டுமென்பது வழக்கு. மணப்பெண்ணின் காலடிபற்றி அருந்ததி பார்க்க வேண்டியது மரபு. ஆனால், சம்பந்தர் மறுத்தார்.  ஈசனின் திருவடி பற்றிய பிறகு வேறு அடி பற்ற முடியாது. ஈசனின் அகத்துள் புகுந்தபிறகு வேறொரு இல்லத்துள், வாழ்க்கையில் ஏன் புக வேண்டும். எத்தனை ஜென்மம் திருமணம் செய்வீர்கள். வாருங்கள் பெருமணம் செய்வோம். முக்தி எனும் பெருமங்கையை மணப்போம். சபையோரை ஏறிட்டுப் பார்த்தார். சபை என்ன என்று பணிவாய் கேட்டது. சம்பந்தர் திருநீலநக்கரை பார்க்க அவர் மெல்ல புன்னகைத்தார். யாழ்ப்பாணர் புறப்படுவோம் என்றார். முருகநாயனார் முன்னே நடந்தார்.பெருமணநல்லூரில் சுருண்டு கொண்டிருந்த ஈசன் மெல்ல தன் வார் சடையை விரித்து எழ ஆரம்பித்தான். அம்மையும் மறையவர் குலப்பெண் வடிவில் அருகே அமர்ந்தாள்.நாதஸ்வரமும், மேளதாளங்களும் முன்னே முழங்கியபடி சென்றன. அந்தத் திருமண மண்டபம் ஞானசூரியனான சம்பந்தப் பெருமானையும், பூர்ணாம்பிகையையும், நாயன்மார்களையும் தொடர்ந்தது. தொலைவிலே இருந்த ஈசன் கோயிலுக்குள் புகுந்தது. கோயிலுக்குள் புகுந்தவர்கள் சிலிர்த்தார்கள். ஏதோவொரு பேருணர்வு அவர்களை ஆரத் தழுவிக்கொண்டது. அந்த மாபெரும் திருமணக் கூட்டத்தினரின் சிவநாமம் கயிலையை அதிர வைத்தது. சம்பந்தர் கல்லூர் பெருமணம் எனும் பதிகத்தைப் பாடினார். அதை அக்கூட்டம் வாங்கிப் பாடியது. அவர்களின் குரல் விண்ணைப் பிளந்தது. ஈசன் லிங்கத்தைப் பிளந்து கொண்டு பெருஞ் ஜோதியாய் எழுந்தார். அங்கிருப்போர் இன்னும் பரவசமானார்கள். அவர்கள் முகம் பேரொளியில் செம்மையாய் பிரகாசித்தது. ‘காதலாகிக் கனிந்து கண்ணீர் மல்கி…’ என்று தொடர்ந்தார். அக்கூட்டம் கோயிலைக் கண்ணீரால் நனைத்தது. நாதன் நாமம் நமசிவாயமே…  முடித்தபோது; அக்கூட்டம் நமசிவாய… நமசிவாய என்று பெருங்குரலெடுத்து பிளிறியது. பெருஞ்ஜோதியாய் திகழ்ந்த ஈசன் சிவந்தெழுந்தான். சீரடியார்கள் முன்பு வானுக்கும் பூமிக்குமாய் வளர்ந்தான். கூட்டம் திகைத்தது. அடியார்கள் அரனை அண்ணாந்து பார்த்தார்கள். சம்பந்தர் திரும்பினார். திருக்கூட்டம் பார்த்தார். பிறப்பறுக்கும் இந்த ஞானத்தீயில் புகுங்கள் என்றார். கூட்டம் பெருமணநாதனைப் பார்த்து மெல்லியதாய் மிரண்டது. எப்படி புகுவது? திண்டாடியது. தீஞ்சுடர் எரித்து விடுமோ என்று சம்பந்தரை ஏறிட்டுப் பார்த்தது.ஞானசம்பந்தர் ஞானப்பிழம்பை பார்த்தார். ஈசன் அழகாய் அதிலொரு வாயிலை அமைத்தான். உமையன்னை வாயிலில் அமர்ந்தாள். திருவெண்ணீற்றை உள்புகுவோரின் நெற்றியில் பூசினாள். இதென்ன அதிசயம் என்று முதலில் நாதஸ்வரம் வாசிப்பவர்களும், மேளம் கொட்டுபவர்களும் சுடருக்குள் புகுந்தார்கள். ஈசனின் அருகே நகரும்போது இசையால் ஈசனைக் கரைத்தார்கள். அடுத்து சுற்றத்தினர் நெருங்கினார்கள். சமையற்காரர்கள் சிவனை சமீபித்து நின்றார்கள். சம்பந்தரின் அடியார்கள் சொக்கப்பனையாய் நின்ற ஈசனருகே செல்ல அது எல்லோரையும் இழுத்து உள்வாங்கிக்கொண்டது. அவ்வூரில் பலர் பயந்து பின்னோக்கி ஓடினார்கள். ஈசன் நந்திப்பெருமானைப் பார்க்க நந்தி பகவான் துரத்தி துரத்திப் பிடித்தார். ஓடிய அன்பர்களை தடுத்து நிறுத்தினார். அப்படி நந்திப்பெருமான் நிறுத்திய இடங்கள் இன்றும் நூறுரி, விருஷபம்(நந்தி) துரத்தி, ஈசனின் நாமத்தை ஓத நந்தி பகவான் வந்ததால் ஓதவந்தான்குடி என்றும் வழங்கப்படுகிறது. இறுதியாக நாயன்மார்களும், காக முனிவரும் உள்புக, ஞானசம்பந்தரும், சொக்கியாரும் வேறு யாரேனும் உளரோ என்று பார்த்து மெதுவாய் நடந்து ஈசனோடு கலந்தார்கள். மெல்ல அந்த பெருஞ்ஜோதி சுடராய் குவிந்து லிங்கத்துள் தழலாய் ஒடுங்கியது. அந்தக் கோயில் ஒரு பெரும் நிகழ்ச்சிக்குப் பிறகு தன் பழைய நிலையை அடைந்தது.நால்வரில் ஒருவரும், சமயக் குரவரும், தெய்வத் தமிழை தரித்தவருமான ஞானசம்பந்தப்பெருமான் முக்தியடைந்த க்ஷேத்திரம் இதுவேயாகும். சிதம்பரம் மற்றும் சீர்காழிக்கு அருகேயே இத்தலம் அமைந்துள்ளது. இதுவரை ஆங்காங்கு பெரியபுராணச் சம்பவங்களை பார்த்தோம். இனி… அடுத்த இதழிலிருந்து தனித்தனியாக ஒவ்வொரு நாயன்மார்களின் திருச்சரிதமாக தொடரும். (சிவம் ஒளிரும்)தொகுப்பு: கிருஷ்ணா

The post ஆளுடைப் பிள்ளையின் பெருமணம் appeared first on Dinakaran.

Tags : Aludaip Pillai ,Nayanmaral ,Aludaipillai ,Gnanam Talumpa Eesan ,
× RELATED திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்...