×

கனலில் குதித்த கருப்பன்

வால்மீகி ஆசிரமத்தில் கர்ப்பத்துடன் தங்கியிருந்த சீதை, அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அவனுக்கு லவன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள். ஒரு முறை பச்சிளம் பாலகனாக இருந்த லவனை, வால்மீகியிடம் ஒப்படைத்து விட்டு, நந்தவனத்திற்கு அருகேயுள்ள நீரோடைக்கு தண்ணீர் எடுக்கச் சென்றாள். செல்லும் வழியில் புலி உறுமும் சத்தம் கேட்டது. தனது மகனை, வால்மீகி முனிவரின் கண்காணிப்பில் விட்டுவிட்டு வந்தோமே, அவர் தியானம் செய்து கொண்டிருப்பாரே, வனவிலங்குகளால் தனது மகனுக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்று அஞ்சிய சீதா, தண்ணீரை எடுக்காமல் பாதி வழியிலேயே திரும்பி வந்தாள். தனது மகனை கையில் எடுத்து, மார்போடு வாரி அணைத்துக் கொண்ட சீதை, யாகசாலைக்கு பின்புறம் சென்று குழந்தைக்கு அமுதூட்டினாள். தியானத்தில் ஆழ்ந்திருந்த வால்மீகி முனிவர், தியானம் முடிந்து, கண் விழித்து பார்த்தார். குழந்தையை காணவில்லை. உடனே, ஒரு தர்ப்பை புல்லை எடுத்து தனது சக்தியால் லவனைப்போன்று ஒரு ஆண் குழந்தையை உருவாக்கினார். அப்போது சீதை கைகளால் லவனை அணைத்தபடி வந்தாள். ஆசிரமத்தில் லவனைப் போலவே இன்னொரு குழந்தை இருப்பதைக் கண்டு வியந்தாள். ‘‘என்ன குழந்தை இது? எப்படி இங்கே?” என்று முனிவரிடம் கேட்டார். அதற்கு அவர், ‘‘சீதா, நீ லவனை எடுத்துச் சென்றது தெரியாமல், உனக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தர்ப்பை புல்லால் இந்தக் குழந்தையை உருவாக்கினேன்,” என்றார். ‘‘அதற்கென்ன, இந்தக் குழந்தையையும் நானே வளர்க்கிறேன்,’’ என்று கூறிய சீதை, அந்த குழந்தைக்கு குசன் என்று பெயரிட்டு, லவனுக்கு இணையாக வளர்த்து வந்தாள். (குசம் என்றால் தர்ப்பைப்புல்) தன்னுடைய அஸ்வமேத யாக குதிரையை லவனும் குசனும் மடக்கி வைத்திருக்க, அதை அறிந்த ராமர் அவர்கள் யாரென அறியாமல் இருவரோடும் போரிட்டார். முடிவில் இருவரும் சீதையின் மகன்கள் என்றும் லவன் தன் மகன் என்றும், குசன் தர்ப்பை புல்லால் உருவானவன் என்றும் வால்மீகி முனிவர் சொல்ல அறிந்தார். நாடாள தனது வாரிசுக்கு முடி சூட்ட ராமர் நினைத்தார். தனது மகனை அடையாளம் காண எண்ணினார். இருவரையும் யாகத்தீயில் இறங்கி வருமாறு அவையோர் கூறுகின்றனர். லவன் எளிதாக இறங்கி வந்தான். குசன் நெருப்பில் இறங்கி, உடல் கருகிய நிலையில் துடித்தபடி யாகத்தீயில் இருந்து வெளியே வந்து விழுந்தான். உடனே ராமன், குசன் மீது இறக்கப்பட்டு, ‘‘சரி, நீயும் என் மகன்தான், உனக்கும் ராஜ்யத்தில் சில பகுதிகள் தருகிறேன். நீயும் நாடாள வேண்டும்,’’ என்றார்.  அதற்கு குசன் ‘‘இந்த வாலிப பருவத்தில் இப்படி அழகு இழந்து, கருத்த மேனியுடன் நான் இந்த நாட்டில் இருக்க விரும்பவில்லை, கானகம் செல்கிறேன்’’ என்று கூறினான். பின்னர் குசன், குதிரையில் பயணத்தைத் தொடர்ந்தான். மேற்கு மலைத்தொடர் பகுதிக்கு வந்தான். பின்னால் புலி உறுமும் சத்தம் கேட்டது. உடனே கையில் வைத்திருந்த வாளை எடுத்து வீச முற்பட்டான். அப்போது ஹரிஹரசுதனான ஐயப்பனின் குரல் கேட்டது.‘‘யேய் கருப்பா, நிறுத்து.’’ கருப்பன் திரும்பி பார்த்தார், புலி மீது அமர்ந்தபடி ஐயப்பன் காட்சியளித்தார். ‘‘என்ன இந்த காட்டிற்குள் தனித்து செல்கிறாயே, நீ யார்?” என்று கேட்டார். (கருப்பன் என்று பெயர் சூட்டியதே ஐயப்பன் தான்) நடந்தது அனைத்தையும் குசன் சொன்னான். பின்னர், ‘‘உனக்கு யாரும் இல்லை என்று கலங்க வேண்டாம். நான் இருக்கிறேன். வா,’’ என்று சொல்லி கருப்பனைத் தன்னுடன் சபரி மலைக்கு அழைத்துச் சென்றார். பதினெட்டாம் படியின் கீழ் நிற்பதால் அவருக்கு பதினெட்டாம் படி கருப்பன் என்று பெயர்.தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

The post கனலில் குதித்த கருப்பன் appeared first on Dinakaran.

Tags : Karuppan ,Sita ,Valmiki Ashram ,Lavan ,
× RELATED ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள்: கடலூர் நீதிமன்றம் உத்தரவு