
ஒன்றரை வருட இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் நடிக்கும் படம், ‘அண்டர் 18’. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒரு அக்கா, தம்பிக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம்தான் கதை. தம்பியாக கார்த்திகேயன் நடிக்கிறார். கிச்சா சுதீப், விக்ராந்த் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். ஒசூர் பகுதியில் கதை நடக்கிறது. இது சில உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது. தமிழில் திடீரென்று ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தாலும், எனக்கு பிடித்த கதையும், கேரக்டரும் அமையாததால் காத்திருந்தேன்.
நான் நடித்த ‘காக்கா முட்டை’, ‘கனா’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘டிரைவர் ஜமுனா’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘சொப்பன சுந்தரி’, ‘ஃபர்ஹானா’ போன்ற படங்கள், எனது கேரக்டரை மையமாக வைத்து உருவானவை. இப்போது தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறேன். எனினும், தமிழ் திரையுலகம்தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. அதற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருவேன். மற்ற மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தால், எனக்கு பொருத்தமான கேரக்டர்கள் அமைந்தால் மட்டுமே நடிப்பேன்.
எத்தனையோ ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், வழக்கமாக எனக்கு அளிக்கும் சம்பளத்தை மட்டுமே தருகிறார்கள். அதை உயர்த்தி கேட்க முடியவில்லை. சென்னையில் சொந்த வீடு இருக்கிறது. ஐதராபாத்தில் குடியேறவில்லை. ஆனால், நான் சொந்த வீடு வாங்கிவிட்டதாக சொல்கிறார்கள். அப்படி சொல்லும் நபர்களே அந்த வீட்டை எனக்கு காட்டிவிட்டால் சந்தோஷப்படுவேன். எனது திருமணம் குறித்து யோசிக்கவில்லை. எப்போது நடந்தாலும், கண்டிப்பாக அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்’ என்றார்.

