×

ஆலய தரிசனம் பிட்ஸ்

* திருவண்ணாமலை மாவட்டம் போரூர் வட்டத்தில், ஆரணி- படவேடு சாலையில் சந்தவாசலுக்கு 3 கி.மீ கிழக்கே அமைந்துள்ளது ஏரிக்குப்பம் என்ற சனிபகவான் தலம். சுமார் ஐந்தரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட நீள்சதுர கருங்கல் வடிவமாய் இங்கு சனிபகவான் அருள்கிறார். அதில் மேல்பாகத்தில் வலதுபுறம் சூரியனும், இடது புறம் சந்திரனும், நடுவே சனியின் வாகனமான காகமும் பொறிக்கப்பட்டுள்ளன. அதன்கீழே ஷட்கோணமும், ஷட்கோணத்தின்மீது சிவன், அனுமன், சனிபகவானின் பீஜாட்சரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. அதற்கும் கீழே லட்சுமி கடாட்ச வசிய யந்திரமும், பஞ்சபூத ஆகர்ஷண யந்திரமும் திகழ்கின்றன. இது ஒரு சனிபரிகாரத்தலம்.* சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அருளாட்சி புரிந்து வருகிறார் வடதிருநள்ளாறு சனி பகவான். சனீஸ்வர பகவான் சாந்தமூர்த்தியாக காக வாகனத்தில் அமர்ந்து நீலாம்பிகையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்ப இத்தலத்தில் பஞ்சமுக அனுமார், யக்ஞ விநாயகர் போன்றோரும் அருள்கின்றனர்.* விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது கல்பட்டு. இத்தலத்தில் பெரிய திருவுருவாக 21 அடி உயரத்தில், தன் வலது காலை தன் வாகனமான காகத்தின் மீது வைத்த நிலையில் கம்பீரமாக சனிபகவான் எழுந்தருளியிருக்கிறார். இங்கு பலிபீடம் இல்லை. சனிபகவான் சாந்தமான வடிவத்துடன் காட்சி தருகிறார். * சூரிய பகவானின் மைந்தனான சனிபகவானுக்கு மாண்ட்வ்ய முனிவரின் சாபத்தால் பாதம் முடமானது. சனிபகவான் தனது தந்தையான சூரிய பகவானிடம் முறையிட்டார். இருவரும் சேர்ந்து மாண்ட்வ்ய முனிவரிடம் சாபவிமோசனம் கேட்டனர். அப்போது, மாண்ட்வ்ய முனிவர் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையம்பதிக்குத் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது திருவாதவூர்த்தலம். அங்குள்ள திருமறைநாதரை நியமப்படி வணங்கினால் உன் சாபம் சரியாகும் என்றார். அதன்படி, சூரியனும், சனியும் திருவாதவூர் தலத்திற்கு வந்து, நியமப்படி நீராடி, சிவனை வணங்கினர். திருவாதவூரில் வழிபட்டவரை வருத்தாதே என்று கேட்டுக் கொண்டார். பின்பு, சனீஸ்வர பகவானின் வாதம் நிவர்த்தியாகி, சிவன் எதிரிலேயே அமர்ந்த திருக்கோலத்தில் தனி சந்நதியில் காட்சியளிக்கிறார். * தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ளது குச்சனூர். இங்கு சனிபகவான் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். கல்தூணாக பூமியில் இருந்து தோன்றிய இவருக்கு மஞ்சள் காப்பு சாத்துகிறார்கள். சூர்யநாராயணின் மகன் என்பதால் நாமமும், ஈஸ்வர பட்டம் பெற்றிருப்பதால் விபூதியும் அணிவிக்கிறார்கள். நீதி வழங்குவதிலும், வயிற்று நோய் தீர்ப்பதிலும் நிகரற்றவர் இந்த குச்சனூர் சனீஸ்வரர்.* மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயிலில் சனி பகவான், திருமறைநாதரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். வரும் செப். 26ல் நடை பெறும் சனிப் பெயர்ச்சி நாளில் திருவாதவூர் திருமறைநாதரை வழிபட்டால், திருமறைநாதர் அரு ளால் சனியின் வீரியம் குறையும் என நம்பப்படுகிறது.* காரைக்கால் அருகே உள்ளது திருநள்ளாறு. நளச் சக்ரவர்த்தியின் ஏழரை நாட்டு சனி விலகிய தலம். இங்குள்ள நள தீர்த்தத்தில் குளித்தெழுந்து, ‘நள்ளாறா’ எனக் கூறினால் நம் வினைகள் நாசமடையும். மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நதிக்கு செல்லும் வழியில் தனி சந்நதியில் அமைப்பில் அமர்ந்து அருளாட்சி செய்கிறார் சனிபகவான். விசேஷ நாட்களில் ‘தங்க காகம்’ வாகனத்தில் அவர் எழுந்தருளும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். நளன், தமயந்தி, ருதுபர்ணன் என்ற ராஜரிஷி, கார்க்கோடகன் பாம்பு போன்றவர்களுக்கு சோதனைப் படிப்பினையையும் பிறகு நிம்மதியான வாழ்க்கையையும் நல்கியவர். இந்த தலத்திற்கு வந்து வணங்குபவர்களுக்கு சனி பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் மன திடமும், பிரச்னைகளிலிருந்து மீளும் வழியும் கிட்டும். நல்வாழ்வுக்கும் வழி பிறக்கும். தொகுப்பு: எஸ்.கிருஷ்ணஜா

The post ஆலய தரிசனம் பிட்ஸ் appeared first on Dinakaran.

Tags : Thiruvandamalai District ,Borur Circle, Arani- Patavedu Road ,Chandavasal ,
× RELATED சந்தவாசல் அருகே கேளூரில்...