×

திருமண தடை நீக்கும் குடந்தை சோமேஸ்வரர் கோயில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலை அடுத்து பொற்றாமரைக்குளத்தின் கரையில் பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர்(குடந்தைக்காரோணம்) கோயில் அமைந்துள்ளது. மூலவர்  சோமேஸ்வரர், தாயார்  தேனார் மொழியாள், சோமசுந்தரி. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 28வது தலமும், 274 சிவாலயங்களில் இது 91வது தலமும் ஆகும். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.தல வரலாறு:  முன்பு ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகுஎனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒருதேங்காயை வை. அதை மாவிலையால் அலங்கரி. கும்பத்தில் நூல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை. அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய். அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன் என்றார். அதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. கும்பம் மிதந்தது. அமுத கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உரி சிதறி விழுந்தது. அவ்விடத்தில் ஒரு லிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்தை சந்திரன் வழிபட்டான். எனவே இறைவனுக்கு சோமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.தலபெருமை: அமுத குடம் உடைந்தபோது சிதறிய தீர்த்தம் இத்தலத்தின் முன்பு குளம்போல பெருகியது.இக்குளத்திற்கு சந்திரபுஷ்கரணி என பெயர். காலப்போக்கில் இக்குளம் அழிந்துவிட்டது. முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து ஒற்றைக்காலில் பாதரட்சையுடன் காட்சி தருவதை கும்பகோணம் சோமேஸ்வரர் கோயிலில் காணலாம். ஒரே பிரகாரத்தைக் கொண்ட இக்கோயிலில் சந்திரனும், வியாழனும் பூஜித்துள்ளனர். எனவே திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இத்தலத்தை வழிபடுவது சிறந்தது. இக்கோயிலுக்கு மூன்றுவாசல்கள் உள்ளன. ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மாலீசர் மற்றும்மங்களநாயகி அம்பிகையை தரிசிக்கலாம்.  திருமால் வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் சிவனுக்கு மாலீசர் என்ற பெயர் ஏற்பட்டது. கட்டைகோபுரத்தை கடந்துவந்தால் சோமநாதர் மற்றும் தேனார்மொழி அம்பிகையை தரிசிக்கலாம்.வடக்கு வாசல் வழியாக வந்தால் சோமேஸ்வரரையும், சோமசுந்தரியையும் தரிசிக்கலாம். ஆகஎத்திசையில் இருந்து வந்தாலும் இறைவனின் அருள் கிடைக்கும் தலம் இது. உள் மண்டபத்தில் சோமாஸ்கந்தர் அருள்பாலிக்கிறார். கருவறை சுவர்களில் எட்டுபேர் வணங்கிய நிலையிலான சிற்பங்கள் உள்ளன.இத்தலத்தில் நடராஜ பெருமான் தனி சன்னதியில் சிவகாமி அம்பாளுடன் காட்சி தருகிறார். இவருக்கு காணா நட்டம் உடையார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரைப் பார்க்காமல் சென்றால்,சென்றவருக்குத்தான் நஷ்டமே ஒழிய, இறைவனுக்கு ஏதும் இல்லை என்ற பொருளில் இப்பெயர்சூட்டப்பட்டுள்ளது. இவரை வணங்கினால் வியாபார விருத்தி, தொழில் விருத்தி, உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை.திருவிழா: இக்கோயிலில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும்.  இக்கோயில் காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். இக்கோயிலில் உள்ள கல்யாண விநாயகரை 11 திங்கட்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டால்பெண்களுக்கு திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை….

The post திருமண தடை நீக்கும் குடந்தை சோமேஸ்வரர் கோயில் appeared first on Dinakaran.

Tags : Kutantha Someswarar ,temple ,Kumbeswarar temple ,Kumbakonam, Tanjore district ,Someswarar ,Kudanthaikaronam ,Pottamaraikulam ,Moolavar Someswarar ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...