×

ராமவாக்கு சொல்லும் நங்கவள்ளியில் புற்றுமண் பூசினால் நோய்தீர்க்கும் சோமேஸ்வர லட்சுமி நரசிம்மர்

சேலத்தில் ஜவுளி உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நங்கவள்ளியில் இருக்கிறது ஆயிரமாண்டு பழமைவாய்ந்த சோமேஸ்வர லட்சுமி நரசிம்மர் கோயில். இங்கு 75 அடி உயரத்தில் 5 நிலை களை கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ராஜகோபுர நுழைவு வாயிலில் நுழைந்து சென்றால் இருபுறமும் பெரிய திருவடி, சிறிய திருவடிகளான கருடாழ்வரும், அனுமனும் காட்சியளிக்கின்றனர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்கிறது இந்த கோயில். சிவாலயத்தில் நரசிம்மர் சுயம்புவாக அருள்பாலிப்பது தமிழகத்தில் வேறு எந்த கோயில் களிலும் இல்லாத சிறப்பு. இங்கு சிவனும், பெருமாளும் ஒருசேர இருப்பதால் சோமேஸ்வரர் என்ற பெயரில் அழைப்பதாகவும் பெயர்க்காரணம் கூறப்படுகிறது. துளசி மாடம், கொடிமரம், பலி பீடம், சபா மண்டபம், நவக்கிரகங்கள், முருகன், பிரம்மா, அஷ்டலட்சுமி சன்னதிகள் கோயில் வளாகத்தை சுற்றிலும் கவனம் ஈர்க்கிறது. பிரகலாதன், சீனிவாச கல்யாணம், அனந்தசயனம், பரதன் பாதுகை பெறுதல் என்று எண்ணற்ற சுதைச்சிற்பங்கள் கண்ணை பறிக்கிறது. தசாவதாரம், காளிங்கப்பாம்பின் மீது கண்ணன் நடனம், சிவலிங்கத்திற்கு கண்ணைத் தரும் கண்ணப்பன் என்று 16 கால் மண்டபத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், முன்னோரின் கலைநுட்பத்திற்கு கட்டியம் கூறி நிற்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மக்கள், தங்கள் பசுக்களுடன்  பிழைப்புக்காக இங்கு வந்தனர். அவர்களில் தொட்டி நங்கை என்ற பெண்மணி, ஒரு கூடையை கொண்டு வந்தாள். அந்த கூடை திடீரென கனகனத்தது. கூடையை இறக்கி  பார்த்தபோது, அதற்குள் சாளகிராம வடிவில் கல் ஒன்று இருந்தது. அதை தொட்டி  நங்கை, தூக்கி எறிந்து விட்டு நடந்தாள். ஆனால் மீண்டும் கூடை கனகனத்தது. இறக்கி பார்த்தபோது, அதே கல் கூடையில் இருந்தது. இதனால் அசம்பாவிதம்  ஏதும் நிகழும் என்று அச்சப்பட்ட தொட்டிநங்கை, கூடையோடு கல்லை அங்கிருந்த  குளத்தில் வீசி எறிந்தாள். அப்போது உடன்சென்ற மற்றொரு பெண்ணுக்கு அருள்  வந்தது. குளத்தில் கூடையோடு வீசப்பட்ட கல், லட்சுமியின் வடிவம் என்று  அந்தப் பெண் கூறினாள். வியப்புற்ற ஊர் மக்கள், குளத்தில் இறங்கி கல்லை  தேடினர். அப்போது பாம்பு புற்றுடன் லட்சுமியின் உருவம் பதித்த கல்  கிடைத்தது. ஓலைக் கீற்று அமைத்து, ஊர் மக்கள் அந்தக்கல்லை வைத்து  வழிபட்டனர். விஜயநகர மன்னர்கள் இதை விருத்தி செய்து, லட்சுமியுடன் சேர்த்து  காவல் தெய்வமான நரசிம்மருக்கும், சிவனுக்கும் கோயில் கட்டினார்கள் என்பது தலவரலாறு. இந்த கோயிலில் உள்ள பாம்பு புற்று மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. கருவறையில் உள்ள சிலைகளுக்கு அக்காலத்தில் பால் அபிஷேகம் செய்து கற்பூர தீபம் காட்டும் முன்னரே புற்று மண் வந்து சிலைகளை மூடிவிடுமாம். இதனால் இங்குள்ள புற்றினை மறைத்து வைத்துள்ளனர். இந்த புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது நிரம்பாது என்கின்றனர். தோல் நோய்களால் பாதிக்கப்பட்டோர், இப்புற்று மண்ணை எடுத்து பூசினால் உடனே சரியாகிவிடும் என்பது தொடரும் நம்பிக்கை. தீராத நோய்கள், திருமணத்தடை, புத்திரபாக்கியம் என்று அனைத்திற்கும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டுதல் வைக்கின்றனர். வீடு, நிலம், வாகனம் வாங்கவும், புதிய தொழில் தொடங்கவும், துளசியை வைத்து ராமவாக்கு கேட்டு செல்வது பிரதானமாக உள்ளது. காரியங்கள் வெற்றி பெறும் நேரத்தில் விரும்பிய பொருட்களை நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கிச் செல்வது இன்றுவரை தொடர்ந்து வருகிறது….

The post ராமவாக்கு சொல்லும் நங்கவள்ளியில் புற்றுமண் பூசினால் நோய்தீர்க்கும் சோமேஸ்வர லட்சுமி நரசிம்மர் appeared first on Dinakaran.

Tags : Someswara Lakshmi Narasimha ,Nangavalli ,Ramava ,Someswara Lakshmi Narasimha temple ,Salem ,
× RELATED குட்கா விற்றவர் கைது