×

கேளுங்கள் கிடைக்கும்!

இயேசு தம் மக்களோடு உவமைகள் வாயிலாகவே பேசினார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. ‘‘நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன், உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்’’ (மத்தேயு  13 : 35) என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது என்றார். சீடர்கள் அவரருகே வந்து ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாக கூறியது. விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது, அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும், அவர் நிறைவாகப் பெறுவார்.  மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை, கேட்டும் கேட்பதில்லை, புரிந்துக் கொள்வதுமில்லை. இதனால் தான், நான் அவர்களோடு உவமைகள் வாயிலாக பேசுகிறேன் என்றார் ஆண்டவர். ‘‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் மனதில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய் விட்டது. காதும் மந்தமாகி விட்டது. இவ்வாறு தம் கண்களை மூடிக்கொண்டார்கள். எனவே, கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறாமலும் இருக்கின்றார்கள்’’ (மத்தேயு  13 : 14, 15) என்கிறார் இயேசு.நாமும் பல நேரங்களில் பிறர் மூலம் நமக்கு சொல்லும் பல நற்செய்திகளை நம் காதால் கேட்டிருப்போம். ஆனால் அதை நம் மனதில் நிறுத்தாமல், காதால் கேட்டு காத்தோடே விட்டிருப்போம். இதனால் நாம் அடையும் பயன் என்ன ? சில நேரங்களில் நற்செய்திகளை நம் மனதில் நிறுத்துவோம். ஆனால், அதை நம் வாழ்வில் பின்பற்றமாட்டோம். இதனாலும் நாம் அடையும் பயன் என்ன? எனவே நாம் கேட்கும் நற்செய்திகளையும், நற்செயல்களையும், நற்போதனைகளையும் நம் மனதில் நிறுத்தி அதைக் கடைப்பிடித்து பிறர் வாழ்விற்கு நாம் ஓர் எடுத்துக்காட்டாகவும், பிறர் வாழ்விற்கு வழிகாட்டும் பாதையாகவும் இருக்க, ஆண்டவரின் வழியை பின் தொடர்வோம்.தொகுப்பு: ஜெரால்டின் ஜெனிபர்

The post கேளுங்கள் கிடைக்கும்! appeared first on Dinakaran.

Tags : Jesus ,
× RELATED கார்மெல் குழந்தையேசு திருத்தலத்தில் பவுர்ணமி ஜெபவழிபாடு