×

இல்லறத்தின் மேன்மையை பறைசாற்றும் சோமாஸ்கந்தர்

‘சோமாஸ்கந்தர்’ என்பது சிவபெருமானின் இருபத்தைந்து மூர்த்தங்களில் ஒன்றாகும். சிவபெருமானின் அற்புதத் திருக்கோலங்களுள் உன்னத வடிவமாகத் திகழ்வது சோமாஸ்கந்த மூர்த்தி வடிவம் ஆகும். சிவபெருமான் உமையவளோடு அமர்ந்திருக்க, தாய், தந்தை இருவருக்கும் நடுவில் திருமுருகப் பெருமான், சிறு குழந்தையாக வீற்றிருக்கும் திருக்கோலமே’ சோமாஸ்கந்தர் திருக்கோலமாகும். ‘இல்லறம் அல்லாது நல்லறம் அன்று’ – என்னும் அவ்வைப் பிராட்டியாரின் அமுத மொழியை உலகுக்கு உணர்த்துவதாக இத்திருக்கோலம் அமைந்துள்ளது. ஆணும் பெண்ணுமாக இணைந்த வாழ்வில். அவ்விருவரின் உள்ளார்ந்த வெளிப்பாடாக அமையும் மழலைச் செல்வத்தைத் தாங்கி நிற்கும். சோமாஸ்கந்த மூர்த்தம் இல்லறத்தின் மேன்மையைப் பறை சாற்றுவதாகும். பெற்றவர்கள் கவனம் பிள்ளைகள் மீது இருந்தால்தான் பின்நாளில் பேர் சொல்லும் நல்ல பிள்ளைகளாக வளர்ந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லவர்களாக இருப்பார்கள் என்பதையும் எடுத்துச் சொல்கிறது. பெரும்பாலான சிவாலயங்களில் உற்சவக் காலங்களில் ‘பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு’ என்ற நிகழ்ச்சி இதில் விநாயகப் பெருமான். முருகப் பெருமான், சோமாஸ்கந்தர், அம்பிகை, சண்டேஸ்வரர் ஆகியோர் பஞ்ச மூர்த்திகளாகக் கருதப்பட்டு திரு வீதியுலா எழுந்தருளச் செய்வார்கள். உற்சவ காலத்தில் இவர்கள் பல விதமான வாகனங்களிலும், தேரிலும் அமர்ந்து பவனி வருவார்கள்.. இதுவே ‘பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு’ எனப்படும். இந்தத் திருவீதியுலா தனித்தன்மையும் தத்துவச் சிறப்பும் வாய்ந்த ஒன்றாகும். இறைவன் இனிய துணைவனாக, பாசமுள்ள தந்தையாக இறைவி மற்றும் இனிய தனயனுடன் காட்சியளிக்கும் அருள் நிறைந்த பூரண வடிவம் இது. காண்பதற்கினிய கருணை வடிவம். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க நாம் தரிசிக்க வேண்டிய கடவுள் வடிவம் இது.தமிழ் எத்தனை பழமை வாய்ந்ததோ அத்தனைப் பழமையானது சிற்பக்கலை. தமிழர்களின் வாழ்வோடு இயைந்து போன பல கலைகளுள் இதுவும் ஒன்று. சங்க இலக்கியங்களின் பக்கங்களிலும், காப்பிய ஏடுகளிலும் செழித்து வளர்ந்த சிற்பக்கலைக்கு நித்திய தரிசனமாகவே கல்லில் வடிவம் தந்தவர்களுள் பல்லவர்கள் முதன்மையானவர்கள். இந்தப் பல்லவ குல மன்னர்கள் சற்று விசித்திரமான சித்தம் உடையவர்கள். இறைவனைக் குடும்பச் சூழலில், விச்ராந்தியாக விளங்குவதாகக் காட்டி, அதிலேயே சமய சமரசங்களைப் போதித்து, சொரூபமற்ற இறைவனை நம்மால் கிரகிக்கப்படுவதற்காக சகுண நிலையில் நிறுத்தி அற்புத கல்லோ வியமாய், ‘சோமாஸ்கந்தர்’ என்ற புடைப்புச் சிற்பத்தை முதன் முதலில் வடித்தார்கள். இத்தகைய அற்புத வடிவத்தை உருவாக்கிய பெருமை முழுக்க முழுக்க பல்லவர்களுக்கே உரியது.பல்லவர் தளிகளில் கருவறை பின்சுவற்றில் ‘சோமாஸ்கந்தர்’ எனும் இப்புடைப்புச் சிற்பம் இல்லாத கோயிலே இல்லை என்னும்படி பல்லவ முத்திரையாக அமைத்து விட்டனர். ஆதியில், பல்லவர்களுக்கு வெகு காலம் முன்பே உமா, ஸ்கந்த – உமா, கந்தனோடு கூடிய சிவன் – சோமாஸ் கந்த தத்வம் பிரபஞ்சம் பூராவுமே பரவியிருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. மொகஞ்சதாரோ அகழாய்வுகள் சிவன் உமை, கந்த வழிபாடு இருந்ததை வெளிப்படுத்துகிறது. ஆரியர்களின் வருகைக்கு முன்னரே விராத்தியர் என்போர் மும் மூர்த்திகளான சிவன், உமை, கந்தனை வழிபட்ட சான்றுகள் உள்ளன. இதனைப் பின்பற்றியே பல்லவ சோமாஸ்கந்த புடைப்புச் சிற்பம் உருவாகி விட்டது. கருவறைக்கிடையே சொரூபமற்ற லிங்கம் மூல மூர்த்தியாய் விளங்க. அந்த உருவங்களுடன் சிவன், உமை இடையில் தவழும் குழவி கந்தன், பிரம்மா, விஷ்ணு இவ்வளவும் கொண்ட சிற்பப் பாளம் தனியாய் பின் அவற்றில் புடைப்பாய் விளங்கலாயிற்று இதுவே பொதுவான பல்லவபாணியாகும்.இடைப்பாணி சிற்பம் ஒன்று மகா அபூர்வமாய் சென்னைக்கு எழுபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுராந்தகம் எனும் ஊரில் வெண்காட்டீஸ்வரர் சிவாலயத்தில் காணப்படுகிறது. இங்கும் சரித்திர நாயகர்களான பல்லவர் வருகையால் கற்றளி எழும்பி, சோமாஸ்கந்த  புடைப்புச் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது இதில் ஓர் அற்புதம் என்ன வென்றால், சோமாஸ்கந்தருடன் ஓர்அதிசய கணேசரும் அமர்ந்துள்ளார். இதை அற்புத சோமாஸ்கந்த கணேசர் புடைப்புச் சிற்பம் என்று தான் கூற வேண்டும். கந்தனுக்கு அருகில் கணேசர் இருக்கும் இது போன்ற வித்தியாசமான அமைப்பு வேறெங்கும் காண முடியாது.இங்கு வலது கோடியில் பெரியலிங்கம், அடுத்து உமை, இடையே கந்தனுடன் வீற்றிருக்கிறாள். இடது கோடியில் பெரிய ஆக்ருதியுடன் கணேசர் உள்ளார். இதை ‘சோமாஸ்கந்த கணேசர்’ என்கிறார்கள்.பிறகு வந்த சோழர்கள் பல்லவர்களின் கலை முறையை வளப்படுத்திக் கல்லில் மட்டுமின்றிச் செம்பிலும் கலைப் படைப்புகளை உருவாக்கி சிற்பக் கலையின் சிகரத்தைத் தொட்டார்கள். சோழர் காலத்துச் செப்புத் திருமேனிகள் வார்ப்புக் கலையின் வடி வழகுச் சாதனைகளாகும் தற்போது பல சிவாலயங்களில் காணப்படும் சோமாஸ்கந்தர் உட்பட பல செப்புத்திருமேனிகள் சோழர்கள் உருவாக்கியவையே. எத்தனையோ வடிவங்கள் எத்தனையோ கோயில்களில் இடம் பெற்றிருந்தாலும் எங்கு பார்த்தாலும் எப்போது பார்த்தாலும் எப்படிப் பார்த்தாலும் விழிகளை வியப்பால் மலர்த்தி, உள்ளத்தின் மெல்லுணர்வுகளை இளக்கி இன்பமூட்டும் தன்மையில் அழகுத் திருமேனிகள் வார்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் சோமாஸ்கந்த மூர்த்தியும் ஒன்று.பிற மதங்கள் ‘துறவறமே சிறந்தது பேரின்பம் அளிக்க வல்லது’ என்ற கருத்தை வலியுறுத்திச் சொல்லப்பட்ட காலத்தில், அன்பும் அறனும் சிறந்து விளங்க இல்வாழ்க்கை அமையுமானால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும் என்ற இனிய இல்லற வாழ்க்கையின் நன்மைகளை உணர்த்தி, பக்தி வழியில் இல்லற வாழ்வின் சிறப்பை எடுத்துச் சொல்ல அமைந்த வடிவமே சோமாஸ்கந்தர் வடிவமாகும்.சத்து, சித்து, ஆனந்தம் என்பதையே ‘சச்சிதானந்தம்’ என்பர். சத்து என்பது சிவ பெருமானையும், சித்து என்பது உமையம்மையையும், ஆனந்தம் என்பது திரு முருகப்பெருமானையும் குறிப்பதாகும். இந்த மூன்று பெரும் தத்துவங்களின் அழகிய வடிவமே சோமாஸ்கந்தர் வடிவமாகும் என்று சிவ தத்துவ நூல்கள் கூறுகின்றன.சிவாலயங்களில் சோமாஸ்கந்தரின் திருக்கோலம் எப்படி ? இருக்கும்?பெரும்பாலும் சிவாலயங்களில் உள்ள கருவறையின் வலது புறத்தில் தனிச் சந்நதியில் சோமாஸ்கந்த மூர்த்தியின் வடிவத்தை அமைத்திருப்பார்கள். சிவபெருமான் கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் தமது இடது காலை மடித்து வைத்து வலது காலைத் தொங்க விட்ட கோலத்தில் காட்சியளிப்பார். இவர் அணிகலன்களுடன் பட்டாடையும் புலித்தோலும் அணிந்திருப்பார். சதுர் புஜம் கொண்ட இப்பெருமானின் மேல் இரு கரங்களில் மழுவும் மானும் ஏந்தியிருப்பார். முன் வலது திருக்கரம் அபய முத்திரையும், முன் இடது திருக்கரம் வரத முத்திரை அல்லது சிம்மஹரண முத்திரையுடன் இருக்கும். இவர் ஜடாமகுடம் மற்றும் பூரண அணிகலன்கள் அணிந்து திவ்யமான தோற்றத்துடன் திகழ்கிறார்.இதே போன்று சிவபெருமானுக்கு இடப் புறமாக அமர்ந்திருக்கும் உமாதேவியும் தமது இடது காலைத் தொங்க விட்டவாறும் வலது காலை மடித்தும் எழிலுடன்காட்சி தருகிறார். அன்னையின் வலது திருக்கரம் தாமரை மலரை ஏந்தியபடியும், இடது திருக்கரம் ஆசனத்தில் ஊன்றியபடியும் இருக்கும். அன்னையும் பூரண அணிகலன்கள் அணிந்து எழிலுடன் விளங்குகிறார்.இவ்வாறு தம்பதியர் திருக்கோலத்தில் இருக்கும் சிவபெருமானுக்கும் உமையம்மைக்கும் நடுவே கந்தன் சின்னஞ்சிறு குழந்தையாக நடன மாடிய நிலையிலோ அல்லது அன்னை மடி மீது அமர்ந்த நிலையிலோ காட்சி அளிப்பான். கைகளில் தாமரை மலரை ஏந்தியிருப்பான். கந்தன் நடனமாடும் கோலத்தில் இருப்பின் அவனது இடது திருக்கரம் பழத்தையும் வலது திருக்கரம் சூசிமுத்திரை காட்டியபடி இருக்கும். இவ்வாறு சோமாஸ்கந்தர் வடிவம் குறித்து ஆகம நூல்களும் சிற்ப சாஸ்திரங்களும் கூறுகின்றன. இதன்படி உருவான பெரிய சோமாஸ்கந்த மூர்த்தி இலங்கையில் இருக்கும் திருக்கேதீஸ்வரம் எனும் சிவாலயத்தில் அமைந்துள்ளது.திருவாரூர் திருத்தலத்தில் மூல மூர்த்தி வன்மீக நாதர் புற்றிலிருந்து எழுந்ததனால் புற்றிடங் கொண்டார் என்று தமிழிலும் வன்மீக நாதர் என்றும் வடமொழியிலும் பெயர். இத்தலத்தின் எல்லாச் சிறப்பும் தியாகராஜப் பெருமானுக்கே மற்ற தலங்களில் ‘சோமாஸ் கந்தர்’ என்று வழங்கும் உற்சவ மூர்த்தியே இங்கு தியாகராஜராக எழுந்தருளியுள்ளார். திருவாரூர் தியாகராஜரான சோமாஸ்கந்தரைப் பார்க்கும் போது குமரகுருபர சுவாமிகளுக்கு பிரயாகையில் உள்ள ‘திரிவேணி சங்கமம்’ நினைவுக்கு வருகிறதாம். திருக்கயிலை நாதனான சிவபெருமான் உடல் முழுவதும் வெண்ணீறணிந்து திகழ்வது வெண்மை நிற கங்கை நதி போலவும், உமாதேவி தன் நீல நிறத்தால் யமுனை நதி போலவும், நடுவே இருக்கும் சிவந்த நிறமுள்ள கந்தன் சரஸ்வதி நதியைப் போலவும் இருக்கின்ற திருக் கோலம் திரிவேணி சங்கமம் போல இருப்பதாக குமரகுருபர சுவாமிகள் தமது ‘திருவாரூர் நான் மணி மாலை’ என்ற நூலில் அழகாக விளக்கம் தருகிறார். இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் கந்தன் இருக்கும் திருக்கோலத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார். ‘சோமாஸ் கந்த வடிவம் பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட பொன் மாலை நேரத்தின் மனோகரமான இயல்பை எடுத்துக் காட்டுகிறது’ என்று தமது கந்த புராணத்தில் பாடியுள்ளார்.அறுபத்து மூன்று நாயன்மார்களில் மிகவும் புண்ணியம் செய்தவர் சிறுத் தொண்ட நாயனார் மட்டுமே. ஏனென்றால், பிள்ளைப் பாசத்தை முழுவதுமாகத் துறந்த சிவனடியாரான சிறுத் தொண்டருக்கு மட்டுமே சிவபெருமான் பார்வதியுடனும் முருகப் பெருமானுடனும் சேர்ந்து ‘சோமாஸ் கந்தராக’ காட்சியளித்தார் என்ற அற்புத வரலாற்றை சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில் விரிவாக எடுத்துரைக்கிறார். வேறு எந்த அடியார்க்கும் இந்தப் பாக்கியம் கிடைக்க வில்லை.எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் நாட்டின் தனிச் சிறப்பு வாய்ந்த அபூர்வமான வடிவம் சோமாஸ் கந்த மூர்த்தியாகும். சிவன் சக்தி, முருகன் ஆகியோர் வழிபாட்டை ஒருங்கிணைத்துப் போற்றிப் பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட பிரபலமான வடிவம் இது. படிப்படியாக சோழர்களால் வளர்க்கப்பட்டது. மாமல்லபுரம், வேதாரண்யம், வைத்தீஸ்வரன் கோயில், காஞ்சிபுரம் ஆகிய திருத்தலங்களில் சிவலிங்கத்துக்குப் பின்புறம், கருவறைச் சுவரில் இந்த சோமாஸ் கந்த மூர்த்தியின் திருவுருவை அமைத்தார்கள்.திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பைஞ்ஞீலி குடை வரைக் கோயிலில் சிவபிரானுக்கு வலதுபுறம் அம்பிகை அமர்ந்த வடிவில் சோமாஸ்கந்த வடிவம் காணப்படுகிறது. கும்ப கோணத்துக்கு அருகில் உள்ள நாச்சியார் கோயில் அருகில் அமைந்துள்ள ராம நதீச்சரம் கோயிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தத்தில் அம்பிகையின் கரத்தில் ரிஷபம் காணப்படுவது மிகவும் அற்புதமாகும்.தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கருகாவூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கள்ளி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்தியமங்கலம் பவானீஸ்வரர் ஆகிய தலங்களில் சிவன், முருகன், அம்பிகை ஆகியோரது சந்நதிகள் சோமாஸ்கந்த வடிவில் அமைந்துள்ளன. சப்த விடங்கத் தலங்களில் சோமாஸ்கந்தப் பெருமானைத் தியாகராஜராகப் போற்றி வழிபடுகிறார்கள்.சாலுவன் குப்பம், பனமலைத்தாள புரீசர் ஆலயங்களில் உள்ள சிற்பங்களில் சோமாஸ்கந்தருடன்பிரம்மாவும் விஷ்ணுவும் சேர்ந்துள்ளனர். காஞ்சிபுரம் ஏகாம்ப ரேஸ்வரர். கோயிலும், குமர கோட்டமும், காமாட்சியம்மன் கோயிலும் அமைந்துள்ள பங்கு எழில் மிகு சோமாஸ்கந்த வடிவத்துக்கு அற்புதமான ஒரு எடுத்துக் காட்டாகும். இந்த வடிவம் இல்லறத்தை இனிதாக்கவும், புத்திர பாக்கியத்தையும் அளிக்க வல்லது. ஆகையால் இந்த வடிவில் உள்ள உமாதேவி ‘புத்திர சௌபாக்கிய பிரதாயினி ’ என்று போற்றப்படுகிறார்.நாடெங்கிலுமுள்ள எண்ணற்ற சிவாலயங்களில் அருவ உருவ வடிவங்களில் சிவபெருமான் காட்சியளிக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே பிரசித்தி பெற்ற பல சிவாலயங்களில் சிவபெருமான் உமாதேவியோடும் கந்தனோடும் இணைந்து எழில் பொங்கும் இன்ப வடிவில் குடும்ப சகிதமாக ‘சோமாஸ்கந்தராகக்’ காட்சியளிக்கிறார்.இணையற்ற அழகையும் அருளையும் தெய்வ சாந்நித்யமும் பொங்கிப் பெருகும் எழில் வடிவமான ‘சோமாஸ்கந்தர்’ வடிவம் முழுக்க முழுக்க தமிழ் நாட்டுக்கு மட்டுமே உரியது. தமிழருக்குச் சொந்தமானது. தமிழருக்குப் பெருமை சேர்ப்பது. இத்தகைய வடிவத்தை வேறு எங்கும் காண முடியாது!’ என்று திருக்கோயில் கல்வெட்டு, வரலாற்று ஆய்வாளர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். ஆம், தமிழகத்திற்கு என்றும் பெருமை சேர்க்கும் அடையாளங்களுள் ‘சோமாஸ்கந்த’ வடிவமும் ஒன்று. தொகுப்பு: டி.எம். இரத்தினவேல்

The post இல்லறத்தின் மேன்மையை பறைசாற்றும் சோமாஸ்கந்தர் appeared first on Dinakaran.

Tags : Somaskander ,Somaskandar ,Shiva Peruman ,Somaskantha Murthi ,Somaschandar ,
× RELATED ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டெடுப்பு