×

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

சுக்கிர யோகம் தரும் கைலாசநாதர்அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தனது குருநாதரின் வாக்குப்படி தாமிரபரணியில் 9 மலர்களை விட்டார். இந்த மலர்கள் தங்கிய இடங்களிலெல்லாம் சிவன் கோயிலை நிறுவி வழிபட்டார். அதில் கடைசி மலர் நின்ற இடம்தான் சேர்ந்த பூ மங்கலம். இங்குள்ள கைலாசநாதரை வழிபட்டு உரோமச முனிவர் முக்தி அடைந்தார். நதி கடலுடன் சங்கமமாகும் இடத்தை மங்கலம் என்றழைப்பர். இங்கு சிவன் கைலாசநாதராக அருட்பாலிக்கிறார். அம்பாள் சௌந்தர்ய நாயகி. சிவபெருமான் சுக்கிரனின் அம்சமாக வீற்றிருப்பதால் இத்தலத்தை வழிபட்டால் கும்பகோணம் சூரியனார் கோயிலை அடுத்துள்ள கஞ்சனூர் சிவபெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.சேர்ந்த பூ மங்கலம் கோயிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆறு ஓடுகிறது. அங்கு ஒரு தீர்த்தக் கட்டம் உள்ளது. இங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புன்னக்காயல் என்னுமிடத்தில் தாமிரபரணி கடலுடன் கலக்கிறது.  இந்த இடத்துக்கு சங்கு முகம் என்று பெயர். இது மிகவும் விசேஷமான தீர்த்தக் கட்டம் ஆகும். இங்கிருந்து தீர்த்தம் எடுத்துதான் இந்தப் பகுதியில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். உரோமச முனிவர் மட்டுமன்றி அகத்தியரும், கடலரசனும் சங்கு முகத்தில் நீராடி சிவனை வழிபட்டதாக ஐதீகம்.ஒரு மனிதனின் ஆயுட் காலத்தில் சுக்கிரன் இருபது ஆண்டுகள் ஆட்சி புரிகிறார். இந்த சுக்கிர பகவான்தான் மனிதனுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளித் தருபவர். இவரது அருளை பரிபூரணமாக பெற நினைப்பவர்கள் சுக்கிர பகவானின் அம்சமாக  ஈசன் விளங்கும் சேர்ந்த பூ மங்கலம் சென்று தரிசித்தால் கைமேல் பலன் கிடைக்கும் என்பது உறுதியான நம்பிக்கை. கருவறையில் ஆவுடையோடு பிரதிஷ்டை லிங்கமாக சிவபெருமான் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். இருவருக்கும் கருவறை மீது தனித்தனியாக விமானம் உள்ளது. எதிரே இரு கல் மண்டபங்கள் உள்ளன. தெற்கு வாசல் வழியேதான் உள்ளே செல்ல வேண்டும். சுவாமி – அம்பாளைச் சுற்றி நந்தவனம் உள்ளது. இதில் தனி மண்டபத்தில் தட்சிணா மூர்த்தியும், தென் மேற்கில் கன்னி விநாயகரும், வட மேற்கில் சுப்பிரமணியர் வள்ளி – தெய்வானையுடனும் அருட் பாலிக்கின்றனர். வடக்கு சுற்றில் சனீஸ்வரரும், வட கிழக்கில் பைரவரும் எழுந்தருளி உள்ளனர். கோயில் முன்புறம் கொடிமரம் உள்ளது.  கோயில் மண்டபங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம் முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் இக்கோயிலை கட்டியிருப்பதாக கணிக்க முடிகிறது. சேந்தன் என்ற பாண்டியன் காலத்தில் இந்தக்கோயில் கட்டப்பட்டதாகவும் ஒரு கருத்து உள்ளது.  முற்காலத்தில் இவ்வூர், குடநாட்டு ஆத்தூர் சேர்ந்த மங்கலம் என்றும் அவனிபசேகர சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்குள்ள சண்டிகா தீர்த்தத்தில் நீராடி கைலாசநாதரை தரிசித்தால் சுக்கிர யோகம் கிட்டுவதாக ஐதீகம். இந்த கோயில் கோபுரத்தில் குபேர மூர்த்தி, சங்க நதி – பத்ம நதியுடன் காட்சி தருகிறார். இங்கு பல ஆண்டுகளாகத் தேரோட்டம் நடக்காமல் இருந்தது. தற்போது பக்தர்கள் முயற்சியால் சித்ரா பவுர்ணமி தினத்தில் தேரோட்டம் சிறப்பாக நடக்கிறது. சித்திரை திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும். இங்கு நடைபெறும் சுமங்கலி பூஜை சிறப்பு வாய்ந்தது. பவுர்ணமிதோறும் திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றது. இந்தக் கோயிலில் குழந்தைப் பேறு வேண்டுபவர்கள் நீராஞ்சன வழிபாடு செய்தால் உடனடியாகப் பலன் பெறுகிறார்கள் என்கிறார்கள். தொழிலில் நஷ்டத்தை சந்திப்பவர்கள் இங்கு வந்து சுக்கிர ஓலை எழுதி வைத்து, சிறப்பு பூஜை செய்தால் தொழில் விருத்தி பெறும். இதற்காக வெள்ளிக்கிழமை தோறும் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தூத்துக்குடி – திருச்செந்தூர் பிரதான சாலையில் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி, வேன் அல்லது ஆட்டோவில் சென்றால் இந்த கோயிலை அடையலாம். இத்தல எண்ணெய்சாதம் பிரசாதம் பெயர் பெற்றது.எண்ணெய் சாதம்தேவையான பொருட்கள்சுத்தமான நல்லெண்ணெய் 1/4 கிலோபச்சரிசி  – 2 ஆழாக்குபயத்தம் பருப்பு – 1 ஆழாக்குகடுகு – 2ஸ்பூன்சீரகம் – 2 ஸ்பூன்மிளகு – 2 ஸ்பூன்கறிவேப்பிலை – 2 கொத்துஉப்பு – தேவையான அளவு.மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்நெய் – 100 கிராம்.  செய்முறை: முதலில் பச்சரிசி மற்றும் பயத்தம் பருப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து நல்லெண்ணெய் விட்டு வறுத்து அரிசி குழையும் வரை  வேக வைக்கிறார்கள். வெந்தவுடன் அதனை வெள்ளை துணி போட்டு இறக்கி மூடி வைக்கிறார்கள். பின்பு இரும்பு கடாயில் நல்லெண்ணெய், கடுகு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டு நன்றாக தாளித்து இறக்கி வைத்த சாதத்தை வைத்து நன்கு ஆவி பறக்க கிளறுகிறார்கள். இறுதியில் கறிவேப்பிலை பொடி மற்றும் சீரகம், மிளகு ஆகியவற்றை பொடி செய்து தூவி மஞ்சள் பொடி. தேவையான அளவு உப்பு சேர்த்து இறுதியில் நெய்விட்டு கிளறினால் எண்ணெய்சாதம் பிரசாதம் தயார்.தொகுப்பு: ந.பரணிகுமார்

The post எந்த கோயில்? என்ன பிரசாதம்? appeared first on Dinakaran.

Tags : Sage Uromasa ,Kailasanatha Agathiya ,Tamiraparani ,
× RELATED பரக்காணி பகுதியில் தடுப்பணை...