×

மகத்தான வாழ்வருளும் மாசி மக நீராடல்

மாசிமகம் – 8-3-2020மகம் நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும் மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. சிம்ம ராசி நாதன் சூரியன், கும்ப ராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம். மாசி மாத மக நட்சத்திரத்துடன் இணைவது மாசிமகமாகத் திகழ்கிறது. சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் கோயில்களில் அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன. மோட்சத்தை அருளக்கூடிய கேதுபகவான் நட்சத்திரமாக  மகத்தில்  இந்த நாள் அமைகிறது. இதனை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள்.‘‘மகத்தில் பிறந்தவர் ஜெகத்தை ஆள்வார்’’  என்பது ஜோதிட வாக்கு. எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில்தான் உமா தேவி, தக்கன் மகளாக அவதரித்தார். தக்கன் தனது குழந்தைக்கு தாட்சாயிணி என பெயரிட்டு அன்போடு வளர்த்து சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார். தாட்சாயிணி மாசி மகத்தன்று அவதாரம் செய்ததால் அந்நாள் தேவியின் பிறந்த தினமாகத்தான் மகத்துவம் பெற்றது. இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானங்கள் செய்வது விசேஷம். அப்படிச் செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை, சகல தோஷ நிவர்த்தி ஏற்படும். இந்த விரதம் இருக்க விரும்புபவர்கள் காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். மதியம் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இரவு பால், பழம் அருந்தலாம். அன்று முழுவதும் வேறு வேலைகளில் ஈடுபடாமல் தேவார திருவாசகங்களை பாடியபடி இருக்கவேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மகம் விரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப் பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அத்துடன் மதியம் உணவு உண்ணும்போது சிவனடியார் ஒருவருக்கு அன்னதானம் வழங்குவது சிறந்தது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் அழுத்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச்செய்யும் நன்னாளே மாசிமக கடலாடு தீர்த்தமாகும். மாசி மகத்தில் தீர்த்தமாடல் சிறப்பினை பெற்றதற்கு ஒரு புராண வரலாறு உண்டு.ஒருமுறை சமுத்திர ராஜனான வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கட்டப்பட்டுக் கடலில் வீசப்பட்டு இருந்தார். வருணன் செயல்படாததால் உலகில் மழையின்றி வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டது. அனைத்து உயிர்களும் துன்புற்றன. தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை விடுவிக்கும்படி வேண்டி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசிமக திருநாளாகும். விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானிடம் வரம் கேட்டார். தான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டுக் கடல் நீரில் இருந்தபடியே சிவனை வணங்கியதால் தோஷம் நீங்கியதைப் போன்று மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு அவர்களின் பாவ வினைகள், பிறவிப்பிணிகள் துன்பங்கள் யாவும் நீங்கி, அவர்கள் உயர்வு பெற அருள வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிவபெருமானும், வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்தமாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசி மகத்தன்று பிரசித்தி பெற்ற புண்ணியத்தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம், பிதுர்க்கடன் செய்வது நலன் தரும்.கடல் புண்ணிய நதிகளில் நீராடும்போது ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக்கூடாது. உடுத்திய ஆடையின்மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றிக்கொள்ள வேண்டும். தீர்த்தமாடுவதற்குமுன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து சிறிதளவு தெளிக்க வேண்டும. ஈர ஆடையுடன் மூழ்கக்கூடாது. இரவில் தீர்த்தத்தில் மூழ்கக்கூடாது. பிரம்மஹத்தி தோஷத்தை போக்கி பேய்க்கும், நற்கதி கொடுக்கும். இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில்தான்.புனித நீராடுபவர்களுக்கு சிவபெருமான், மகாவிஷ்ணு உரிய பலனை வழங்குவார். ஒருமுறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கினால் சொர்க்கப் பேறு கிடைக்கும். மூன்றாம் முறை மூழ்கி எழுந்தால் அவர் புண்ணியத்திற்கு ஈடே கிடையாது. நீராட முடியாதவர்கள் சிவசிந்தனையுடன் மாசிமக புராணம் படிக்க வேண்டும். மாசி மகத்தன்று அதிகாலை நீராடி விட்டு துளசியால் மகா விஷ்ணுவை வழிபட்டால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வாழ்வில் இன்பமும், வெற்றியும் கிடைக்கும். மாசி மகத்தில் சரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம்.சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்தது மாசி மகத்தன்று தான். கடலுக்கு அடியில் இருந்து பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்றுதான் என புராணங்கள் கூறுகின்றன. மாசி மகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் இருக்கும்போது வருவது மகாமகம் ஆகும். அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். அன்று மகாமக குளத்தில் உலகில் உள்ள எல்லா தேவர்களும் நீராட வருவதாக ஐதீகம்.தொகுப்பு: இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு, கடலூர் மாவட்டம்

The post மகத்தான வாழ்வருளும் மாசி மக நீராடல் appeared first on Dinakaran.

Tags : Massimagam ,Lord ,Kedhu ,Mazimagam ,Masi Maasi Maha Aquarium ,
× RELATED திருவாரூர் மாவட்ட கலெக்டர் விளக்கம்...