×

திருவஹிந்திரபுரம் ராமர்

தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூர் அருகே அமைந்துள்ள தேவனாதப் பெருமாளின் திருச்சந்நதியிலே கோயில் கொண்டிருக்கிறான் இந்த கோசலை மைந்தன். கோசலைக்குப் பிறந்தாலும், சிற்றன்னை கைகேயியின் உத்தரவுக்கு உடனே தலைவணங்கி, பெரியவர்களை மதிக்கவேண்டிய பண்பை இளைஞர்களுக்கு உணர்த்திய உத்தமன் அவன். தன் மனைவிக்குத் தான் அளித்த வரங்கள் இப்படி தன்னையே தாக்கும் என்பதை எதிர்பாராத தசரதனை கேள்விகேட்டு வேதனைப்படுத்தாமல் உடனே காடேகிய, தந்தை சொல் தாண்டாத தவப் புதல்வன் அவன்.‘நாளை உனக்கு பட்டாபிஷேகம்,’ என்று பெருமை பொங்க, தன் தலை தடவி தகவல் தெரிவித்த தந்தையாரைப் பணிவுடன் வணங்கி, எந்த உணர்வோடு ஆசி பெற்றானோ, அதே உணர்வு சிறிதும் குறையாமல்தான், ‘நீ ஆரண்யம் புக வேண்டும், உன் தம்பி பரதன் ஆட்சி பீடத்தில் அமரவேண்டும்,’ என்று தசரதன் சொன்ன வாசகங்களை அவன் எதிர்கொண்டான். அவனுடைய தாமரை முகம், ‘பதவி’ என்றபோது பிரகாசிக்கவும் இல்லை; ‘துறவு’ என்றபோது வாடிவிடவும் இல்லை,‘ என்கிறார் கம்பர். அப்படி ஒரு மந்தஹாசவதனனை திருவஹிந்திரபுரத்தில் தரிசிக்கலாம். இந்த ராமனிடம் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார், ஸ்வாமிதேசிகன். ராமனுடைய வீரதீர பராக்கிரமங்களை நினைத்து நினைத்து உருகி அந்த சம்பவங்களில் அப்படியே தோய்ந்து போனவர் அவர். எங்கே பணிவு காட்டவேண்டுமோ அங்கே பணிவையும், எங்கே வீரத்தைக் காட்ட வேண்டுமோ அங்கே வீரத்தையும் காட்டி, மனித குலத்துக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவன் அவன். சக்கரவர்த்தித் திருமகனாக இருந்தாலும், சாமானியர்களும் போற்றும் பெருந்தகையாக விளங்கியவன். அத்தகைய பண்பாளனின் காதையை, ‘ரகுவீரகத்யம்’ என்ற மிகவும் பிரபலமான வடமொழி பாடல் தொகுப்பாக ஸ்வாமிதேசிகனைப் பாடச் செய்தவன்.எத்தனைபேர் எத்தனை வகையாகவும் ராமாயணத்தைச் சொன்னாலும், அதைக் கேட்பதில் யாருக்கும் அலுப்போ, அயர்ச்சியோ ஏற்படுவதில்லை என்றால் அதுதான் ராமனின் தனிச் சிறப்பு. அப்படி சிறப்பு பெற்ற செல்வன் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் திருவஹிந்திரபுரம்.தொகுப்பு: அபிநயா

The post திருவஹிந்திரபுரம் ராமர் appeared first on Dinakaran.

Tags : Thiruvahindrapuram ,Kosala ,Mainthan ,Thiruchannadi ,Devanatha Perumal ,Cuddalore ,Southern Ghats ,
× RELATED சாலையில் சுற்றி திரிந்த 6 மாடுகள் பறிமுதல்: சேவாலயா கோசாலையில் ஒப்படைப்பு