×

சாலையில் சுற்றி திரிந்த 6 மாடுகள் பறிமுதல்: சேவாலயா கோசாலையில் ஒப்படைப்பு

திருவள்ளூர், அக்.6: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரிந்த 6 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மாநில சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் முறையாக கட்டி பராமரிக்கப்படாமல் உள்ளது. இதில், மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் இருந்து சென்னை, திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஊத்துக்கோட்டை,  பெருமந்தூர் மற்றும் ஆந்திர மாநிலம் பல்வேறு பகுதிகளுக்கும் நாள் தோறும் நூற்றுக்கணக்கான அரசு பேருந்துகளும், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும், தொழிற்சாலை வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் கிராமப் பகுதிகளில் மட்டுமல்லாமல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் உள்ள கால் நடைகளை உரிமையாளர்கள் கட்டிப் போடாமல் அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இதனால் அந்த மாடுகள் சாலையில் படுத்துக் கொண்டும், சாலைகளில் சுற்றித் திரிந்து கொண்டும் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கின்றன. இதனால், பகல் நேரங்களில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் பேருந்துகள், கார், வேன் மற்றும் இரண்டு சக்கர வாகணங்களில் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, கால்நடைகளை அவைகளின் உரிமையாளர்கள் உரிய பாதுகாப்போடு பராமரிப்பது அவரவரின் கடமையாகும். கால்நடைகள் அவைகளின் உரிமையாளர்கள் முறையாக கட்டி பராமரிக்கப்படாததால், சாலைகளில் சுற்றித் திரிவதால், விபத்துகள் ஏற்பட்டு அதன் மூலம் உயிரிழப்பும் ஏற்பட காரணமாக உள்ளது. மேலும், அதிகப்படியாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் கால்நடைகள் மீது மோதி, உயிர் இழப்புகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், கை, கால்கள் இழந்த நிலையிலும் உள்ளனர். எனவே, கால்நடைகளை சாலைகளில் அபாயகரமாக சுற்றவிடும் கால்நடை உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு நகர்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டப்படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ₹ 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடதக்கது.

ஒவ்வொரு, பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், காவல் துறை ஆய்வாளர்கள், கால்நடை பராமிரிப்புத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து தணிக்கை செய்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வட்ட அளவிலான குழு தலைவரும் வட்டாட்சியருமான சுரேஷ் குமார் தலைமையில் குழு உறுப்பினர்களான போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், கால்நடைத் துறை மருத்துவர் சிவசங்கர், வருவாய் ஆய்வாளர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் மாலினி, தேவராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கிராம உதவியாளர்கள் ஆகியோர் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றி திரிந்து கொண்டிருந்த 6 கால்நடைகள், காவல்துறை வருவாய்த்துறை மற்றும் கால்நடைத்துறை அலுவலர்கள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டது. கால்நடை மருத்துவரின் மருத்துவ சான்று பெற்று இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா கோசாலையில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

The post சாலையில் சுற்றி திரிந்த 6 மாடுகள் பறிமுதல்: சேவாலயா கோசாலையில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Sewalaya Kosala ,Tiruvallur ,Collector ,Alby John Varghese ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...