×

குடும்ப தகராறில் விபரீதம்; உடலில் மின்சாரம் பாய்ச்சி மனைவி கொடூர கொலை: தூக்கத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவன் கைது

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை நைனியப்பன் கார்டன் 6வது தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (48). இவர், லெதர் கம்பெனியில் தையல்காரராக வேலை செய்து வருகிறார். இவருடைய முதல்  மனைவி இறந்து விட்டார். அதன்பிறகு 2016ம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை  நைனியப்பன் கார்டனை சேர்ந்த ஹசினா பேகம் (37) என்பவரை 2வது திருமணம்  செய்து கொண்டார். ஹசினா பேகத்திற்கு குழந்தை இல்லாததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 27ம் தேதி இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டில்  படுத்து தூங்கினர். மறுநாள் காலை ஹசினாபேகம் படுக்கை அறையில் அசைவற்று  கிடந்தார். அவரை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. படுக்கையிலேயே அவர்  இறந்து கிடப்பதாக ஹசினா பேகத்தின் பெற்றோருக்கு ஷாஜகான் தகவல் தெரிவித்தார்.  அதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஹசினா பேகத்தின் தாயார் ஷாபிராபேகம், ஷாஜகானிடம் மகள் இறப்பு குறித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், தனது  மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார்  செய்தார். அதன்பேரில் போலீசார், ஹசினாபேகம் உடலை பிரேத பரிசோதனைக்காக  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர்கள், ஹசினா பேகம் உடலில் மின்சாரம் பாய்ந்து இருப்பதாகவும், கை மற்றும் கழுத்தில் அதற்கான காயம் இருப்பதாகவும், உடலில் மின்சாரம் பாய்ந்ததாலேயே அவர் இறந்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் ஷாஜகானை போலீஸ்  நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், சம்பவத்தன்று இரவு  கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஷாஜகான், மனைவி ஹசினாபேகம் தூங்கியபிறகு முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி உள்ளார். இதில்  அவர் மயங்கியதும், அவரது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொடூரமாக கொலை செய்ததும், பின்னர் படுக்கையிலேயே அவர் இறந்து கிடப்பதாக கூறி நாடகமாடியதும்  தெரிந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷாஜகானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். …

The post குடும்ப தகராறில் விபரீதம்; உடலில் மின்சாரம் பாய்ச்சி மனைவி கொடூர கொலை: தூக்கத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : VANNARAPETTA ,Shahjahan ,Nainiappan Garden 6th Street, Vannarappet ,
× RELATED கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு