×

ஓசூர் வனக்கோட்டத்தில் மலைகிராம மக்கள், விவசாயிகள் புதரில் வீசிய 111 கள்ளத்துப்பாக்கிகள்: மீட்ட வனத்துறையினர் போலீசிடம் ஒப்படைத்தனர்

ஒசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் தாமாக முன்வந்து ஒப்படைக்கப்பட்ட 111 கள்ளத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், நேற்று ஓசூர் ஏடிஎஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் யானை உள்ளிட்ட வன விலங்குகளை, கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளவர்கள் வேட்டையாடி வருவதை தடுக்கும் பொருட்டு, கள்ள துப்பாக்கி வைத்திருப்பவர்கள், வனத்துறை அலுவலர்களிடமோ, ஊர் முக்கியஸ்தர்களிடமோ, கடந்த 9ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என ஓசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர் கார்த்திகேயனி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ஜவளகிரி, ராயக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்களிலும், மலை கிராமங்கள் மற்றும் காப்புக்காடுகளை சுற்றியுள்ள கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் விளைவாக, வனப்பகுதியை சுற்றியுள்ள மலைகிராம மக்கள் மற்றும் விவசாய பொதுமக்கள், தாமாக முன்வந்தும், ஊர் முக்கியஸ்தர்கள் மூலமும் ஆங்காங்கே புதர்களில் கள்ளத்துப்பாக்கிகளை வைத்து விட்டு சென்றுள்ளனர். ஓசூர் வனக்கோட்டத்தில், தற்போது வரை 111 கள்ளத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த  துப்பாக்கிகள் ஓசூர் ஏடிஎஸ்பி அரவிந்த்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்தியாயினி கூறுகையில் ‘எதிர்வரும் காலங்களில் யாரேனும் கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் வைத்திருந்து, வனத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டாலோ, மோப்ப நாய் மூலம் சோதனையின் போது கண்டறியப்பட்டாலோ, வனஉயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் இதர வனச்சட்டங்களின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். …

The post ஓசூர் வனக்கோட்டத்தில் மலைகிராம மக்கள், விவசாயிகள் புதரில் வீசிய 111 கள்ளத்துப்பாக்கிகள்: மீட்ட வனத்துறையினர் போலீசிடம் ஒப்படைத்தனர் appeared first on Dinakaran.

Tags : osur ,Forest Department ,Osur Forest Kotam ,Osur Wilderness ,Dinakaran ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...