×

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கும் முன்பே இலையை மிரட்டும் தாமரையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சி கூட்டணியில் உள்ள தாமரை கட்சியினர் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கும் முன்பே அல்வா நகரத்தின் மாநகராட்சி தேர்தலுக்கு விருப்ப மனுக்கள் பெறப் போகிறார்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஆமா..இதெல்லாம், இலை கட்சியை மிரட்டி சீட் பறிக்கத் தான். ஏற்கெனவே நெல்லை தொகுதியை தாமரை கட்சிக்கு தாரை வார்த்து விட்ட நிலையில், தற்போது மாநகராட்சியும் எங்களுக்கு உண்டா, கிடையாதா என இலை கட்சி விசுவாசிகள் தாமரையின் அறிவிப்பை ஏக்கத்தோடு பார்க்கின்றனர்.  இதே நிலை தொடர்ந்தால் கட்சியும் தாமரையிடம் அடகு போய் விடும் என்பது தான் இலை கட்சியினரின் கவலை’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘கோடிக்கணக்கில் பயிர் கடன்  முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், கலங்கிக் கிடக்கிறார்களாமே  கூட்டுறவு வங்கி தலைவர்கள்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி  சோழ மன்னர் மாவட்டத்தில் 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், 4 நகர  கூட்டுறவு வங்கிகள் இருந்து வருகின்றன. இந்த மாவட்டத்தில் ‘‘பீஸ்’’ என்கிற  காம் பெயரை கொண்டவர் அமைச்சராக இருந்த காலத்தில் தனது அதிகாரத்தை  பயன்படுத்தி 136 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தனது ஆதரவாளர்களை  தலைவராக ஆக்கினாராம்… இதேபோன்று நகர கூட்டுறவு வங்கிகளிலும் தனது  நெருங்கிய உறவினர், தனக்கு வேண்டியவர்களை தலைவராக ஆக்கியுள்ளார். இதற்கு  விசுவாசமாக இந்த தலைவர்கள் எல்லாம் அமைச்சர் எந்தெந்த நிகழ்ச்சிகளில்  எல்லாம் கலந்து கொண்டாரே அந்தந்த வங்கிகளின் கணக்கில் தங்களது பெயர்களை  விளம்பரமாக வெளியிட்டு பலன் தேடிக்கொண்டார்களாம்… பில்லூர் தொடக்க  வேளாண்மை கூட்டுறவு வங்கியில் லட்சக்கணக்கில் கையாடல் நடந்து இருந்தது  ஆட்சி முடியும் நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பெருந்தொகையாக  இருந்ததால் இறந்துபோன அந்த வங்கியின் செயலர் தலையில் கட்டப்பட்டதும், மாவட்டம்  முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன்  வழங்கியதில் கோடி கணக்கில் முறைகேடு நடைபெற்று இருந்ததும் தற்போது கண்டு  பிடிக்கப்பட்டதாம்… இதனால் சம்பந்தப்பட்ட வங்கியின் இயக்குனர்களே தகுந்த  ஆதாரங்களுடன் மாவட்ட கலெக்டரிடம் நேரிடையாகவே புகார் மனுவாக கொடுத்து  உள்ளார்களாம்… இந்த தகவல் தற்போது கசிய தொடங்கி இருப்பதால் கூட்டுறவு  வங்கிகளில் தலைவர்களாக இருந்து வரும் மாஜி அமைச்சரின் ரத்தத்தின் ரத்தங்கள்  கலக்கத்தில் இருந்து வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘கதர் கட்சி குழப்பத்துக்கு முடிவே இல்லாம போகுது போல..’’ ‘‘50  வருஷத்துக்கு முன்னாடி வேலூரில் பிரபல பஸ் அதிபரா இருந்த காங்கிரஸ்காரரு,  கட்சி மேலே உள்ள அபிமானத்துல, நகரின் பிரதான சாலையில இருந்த இடத்தை  கட்சிக்கு தானமா கொடுத்தார். கட்சி காமராஜர், இந்திராகாந்தினு பிரிஞ்சப்ப,  காமராஜர் தலைமையில் இருந்த கட்சி வசம் இருந்தது அந்த இடமும், அதில் இருந்த  கட்டிடமும். பின்னாடி, கட்சி ஒண்ணா சேந்தாலும், அதை நிர்வகிச்ச  அறக்கட்டளையை சேர்ந்தவங்க, ஏர் உழவன் கட்சியில இருந்ததால அவங்களிடம்  இருந்தது.ஒருவழியா போராடி கதர் கைக்கு கட்டிடம் வந்தது. அப்புறமா  சைக்கிள் வசம் போயி, மீண்டும் கதர் கட்சி வசம் வந்தது. ஆனாலும் அந்த இடத்தை  யாரு நிர்வாகம் பண்றது, அதுல வர்ற வருமானத்தை என்ன செய்றது என்ற  பிரச்னையில் கோஷ்டிங்க அடிதடி வரைக்கும் போறது மட்டும் நிக்கலயாம்.  காரணம்,  அறக்கட்டளையில இருந்தவங்க இப்ப யாரும் இல்லை என்றதால், கதர் கட்சிக்கு  உள்ளூர் தலைவரா இருக்கிறவரு தன்னிச்சையா அதில் இருந்த கட்டிடத்தை இடித்து  வியாபாரம் நடத்த ஒருவருக்கு கொடுத்திட்டாருனு, இந்திரனா இருக்கிறவரு தகராறு  செய்து, இன்னைக்கு வரை பிரச்னை தீரலயாம்.அதேநேரத்தில் கதர் கட்சி  மாநில தலைமை எனக்கு ஆதரவாத்தான் இருக்கு. அதுவரை என்னை யாரும் அசைக்க  முடியாதுனு உள்ளூர் தலைவரு சொல்லி வர்றதுடன், இந்திரன் தலைமையில உள்ளவங்களை  கட்சியை விட்டு கல்தா கொடுக்கணும்னு, கையில் பட்டியலுடன் சத்தியமூர்த்தி  பவன சுத்தி வர்றாராம். அவங்களும் பார்ப்போம் என்று முஷ்டியை உயர்த்தி  வர்றாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.   ‘‘ஆபாச வீடியோவில் மற்றொருதாமரை கட்சி மாஜி எம்எல்ஏ சிக்கியிருக்காராமே..’’ ‘‘தாமரை  கட்சியின்  மாநில நிர்வாகி ஒருவர் ஆபாச வீடியோவில் சிக்கியுள்ள நிலையில்,  மேலும் 14  பேரின் வீடியோ உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதில்,  விழுப்புரம்  தாமரை கட்சியின் மாஜி எம்எல்ஏவும் உள்ளாராம். ஏற்கனவே,  தலைவரின் லீலைகள் குறித்து, பெண் நிர்வாகிகள் பலர் புகார் அளித்துள்ள  நிலையில், தற்போது  நிர்வாணமாக பெண் ஒருவருடன் ஆபாசமாக இருந்தது வீடியோவாக  எடுக்கப்பட்டுள்ளதாம். 14 பேர் பட்டியலில், விழுப்புரம் தாமரை கட்சியின்   தலைவரும் இருப்பதால் கலக்கத்தில் உள்ளாராம். எனினும் மாஜி எம்எல்ஏ,  தலைமையே  ஆபாச வீடியோவால் ஆட்டம் கண்டிருக்கு, என்னை என்ன செய்யப்போறாங்க  என்று  கூலாக பதில் கூறி, நேற்று மத்திய தூய்மை பணியாளர் ஆணையத்தின்  தலைவருடன்  காரில் சென்று, விழுப்புரத்தில் சகஜமாக ஆய்வு செய்தாராம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘கூட்டுறவு தலைமை பொறுப்பில் இருப்பவர் இப்பவும் தன் ஆட்டத்தை நிறுத்தலையாமே..’’ ‘‘பூட்டு மாவட்டத்தில் மகாகவி பெயருடன், மயிலை வாகனமாகக் கொண்டவரின் பெயர் கொண்ட இலைக்கட்சி பிரமுகர் தற்போது கூட்டுறவு தலைமை பொறுப்பில் உள்ளார். இவருக்கு கீழ் 80 ரேஷன் கடைகள் உள்ளன. இம்மாவட்டத்தின் முக்கிய பிரமுகரான ஊர் பெயரை முன்னால் கொண்ட மாஜி ‘‘ஷாக்’’ அமைச்சரின் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் இக்கடைகளில் பணியாற்றி வருகிறார்களாம்… இந்த பணியாளர்கள் ஒத்துழைப்போடு, கடந்த 8 ஆண்டுகளில் வசூல் நடத்தி, தோட்டம், பங்களா என பல கோடிக்கணக்கில் சொத்து மதிப்பை உயர்த்தி விட்டாராம்…  ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும், பணிமாற்றத்திற்கு உதவுவதாக, பணியாளர்கள் பலரிடமும் பேசி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கேட்டும், ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறாராம். ஆளுங்கட்சிக்கு அவப்பெயரைத் தேடித்தரும் இவர் குறித்து இப்போது உளவுத்துறை கண்காணிக்கத் துவங்கி இருப்பது பணியாளர்கள் மத்தியில் நிம்மதியைத் தந்திருக்கிறது…’’ என்றார் விக்கியானந்தா.  …

The post உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கும் முன்பே இலையை மிரட்டும் தாமரையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus Party ,Leaf Party Alliance ,Alwa ,wiki ,Yananda ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...