×

மின்வயர்கள் உரசியதால் தீ; 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் நாசம்: போடி அருகே பரபரப்பு

போடி: போடி அருகே மின்வயர்கள் உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் கருகி நாசமாகின. போடி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சேகர். இவர் போடி தேனி சாலையில் உள்ள மீனா விலக்கு பகுதியில் கரும்பு பயிரிட்டுள்ளார். இன்னும் ஒரு  சில வாரத்தில் கரும்பு அறுவடைக்கு வரும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்திற்கு மேல் செல்லும் உயரழுத்த மின் வயர்கள் காற்றின் காரணமாக உரசியதால் தீப்பொறி ஏற்பட்டது. இந்த தீப்பொறி கரும்பு பயிர்கள் மீது விழுந்தது. இதில் கரும்பு சோகைகளில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.இதை பார்த்த விவசாயிகள் போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில்  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கட்டுக்கடங்காத தீயால் 2 ஏக்கர் அளவு கரும்புகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து விவசாயி சேகர் கூறும்போது, அறுவடை நேரத்தில் மின்சாரத்தின் மூலமாக  தீப்பற்றி எரிந்து பயிர்கள் நாசமாகியுள்ளது. இதனால் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்….

The post மின்வயர்கள் உரசியதால் தீ; 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் நாசம்: போடி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Podi ,Dinakaran ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்