×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, சுதாகரன் உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் கலெக்டர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதில், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: கொடநாடு பங்களாவில், கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி கிருஷ்ணதாபா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நள்ளிரவு 12 மணியளவில் 8 பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கிருஷ்ணதாபா முகத்தில் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த அவர் பங்களாவுக்குள் ஓடிவிட்டார். இந்த நிலையில் 10வது கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், சயானின் மனைவி மற்றும் குழந்தை கார் விபத்தில்  கொல்லப்பட்டனர். அதன்பிறகு ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் கார் விபத்தில் பலியானார்.போலீஸ் விசாரணையின் முதல் இறுதி அறிக்கையில் 103 சாட்சிகள் சேர்க்கப்பட்டன. இந்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த 2020 நவம்பர் 23ல் அமர்வு நீதிபதி அனுமதி அளித்தார்.இந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை சிறையில் கொடுமைப்படுத்தியுள்ளனர்.கொரோனா ஊரடங்கு காலத்திலும் வழக்கு விசாரிக்கப்பட்டது. மனோஜ் தனக்கு சட்ட உதவி மையம் மூலம் வக்கீல் நியமிக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, அவருக்காக ஆஜராக அதிமுக கட்சியை சேர்ந்த எம்ஜிஆர் காலத்தில் ஆவின் சேர்மனாக இருந்த வக்கீல் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் விசாரணை முழுவதையும் சீர்குலைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டர் சங்கர், முன்னாள் எஸ்பி முரளி ராம்பா, அதிமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சஜீவனின் ஆதரவாளர் சுனில் ஆகியோரை சாட்சியாக விசாரிக்க கோரி நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். எங்கள் மனுவை விசாரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதி, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளித்தார். மற்றவர்களை சாட்சியாக விசாரிக்க கோரிய எங்கள் கோரிக்கையை நீதிபதி தள்ளுபடி செய்தார்.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த சம்பவத்தில் உள்ள தொடர்பு குறித்து சயான் அளித்த பேட்டியை விசாரணை நீதிமன்ற நீதிபதி கவனிக்காமல் இயந்திரத்தனமாக உத்தரவிட்டுள்ளார். கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் கொல்லப்பட்டது குறித்து விசாரணை அதிகாரி சரியாக விசாரிக்காமல் குற்றவாளிகளை சுதந்திரமாக வெளியில் நடமாட விட்டுள்ளார். இதை நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது. விசாரணை நடத்திய போலீசார் ஒரு சார்பு நிலையை எடுத்திருப்பதுடன் விசாரணையில் ஏராளமான குழறுபடிகளையும் செய்துள்ளனர். வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தொடர்பு குறித்து சயான் கூறியுள்ள நிலையில் வழக்கின் தீவிரத்தை கணக்கில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்ற நீதிபதி வெறும் பார்வையாளராக இருந்துள்ளார். இதுபோன்ற உத்தரவுகளால் விசாரணை மேலும் தாமதப்படும். ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில் கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும். இதை விசாரணை நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் தங்கள் தரப்பு வாதத்தை வைக்கும் கோரிக்கையை விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. இது இயற்கை நீதிக்கு முரணானது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த போலீசார் வெளிப்படையான விசாரணையை நடத்தவில்லை. முக்கிய குற்றவாளிகளை குற்றம் செய்வதற்கு பின்னால் இருந்து இயக்கியவர்களை வேண்டுமென்றே விசாரணை வளையத்திலிருந்து போலீசார் நீக்கியுள்ளனர். எனவே, எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோர் விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீலகிரி அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை விசாரிக்குமாறு நீலகிரி நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது….

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisamy ,Kodanadu ,Sasigala ,Chennai ,CM ,Sutagaran ,Dinakaran ,
× RELATED நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்:...