×

மயிலாடும்பாறை அருகே கிணற்று நீரை குடிப்பதால் கிராமமக்களுக்கு பாதிப்பு

வருசநாடு : மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மந்திசுனை -மூலக்கடை ஊராட்சியில் சிறப்பாரை கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மயிலாடும்பாரை மூலவைகையாற்றில் உறை கிணறு அமைத்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக சிறப்பாறை கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், மிகவும் உயரமான இடத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளதால், அதில் குடிநீரை நிரப்ப முடியவில்லை. மேலும் மேல்நிலை தொட்டி குடிநீர் கிராமமக்களுக்கு போதுமானதாக இல்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கிராமமக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதன் காரணமாக கிராம பொதுக்கிணற்றில் குடிநீரை தேக்கி, அதிலிருந்து கயிறு மூலம் இறைத்து பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘‘மேல்நிலை தொட்டியில் போதிய அளவில் நீரை நிரப்ப முடியாத காரணத்தால், பொது கிணற்றில் குடிநீரை தேக்கி வைத்து பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக கிணற்றிலிருந்து நீர் இறைக்க முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கிணறு திறந்த நிலையில் உள்ளதால் குடிநீர் மாசடைந்து விடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு அடிக்கடி வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. கடமலை- மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக குழாய் அமைத்து குடிநீர் வழங்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் இப்பகுதியில் மட்டும் குடிநீரை கிணற்றிலிருந்து இறைத்து குடிக்கும் நிலையில் உள்ளோம். எனவே சிறப்பாரை கிராமத்திற்கு குடிநீர் முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்….

The post மயிலாடும்பாறை அருகே கிணற்று நீரை குடிப்பதால் கிராமமக்களுக்கு பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladumparai ,Varusanadu ,Siyalarai ,Mantisunai-Moolakadai ,Mayiladumpara ,
× RELATED தரைப்பாலத்தை பராமரிக்க கோரிக்கை