×

சோளத்தட்டை படப்பில் தீ ஒரே குடும்பத்தில் 4 பேர் உடல் கருகி பலி: பழநி அருகே பரிதாபம்

பழநி:  பழநி அருகே நேற்று அதிகாலை சோளத்தட்டை படப்பில் தீப்பற்றி எரிந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு (எ) முருகேசன் (52). விவசாயி. மனைவி வளர்மதி (47). மகள் சிவரஞ்சனி (21), பி.எஸ்சி பட்டதாரி. மகன் கார்த்திகேயன் (18), பி.காம் 2ம் ஆண்டு மாணவர். அதே கிராமத்தில் எல்லை தோட்டம் எனும் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.நேற்று முன்தினம் பழநி அருகே வேலாயுதம்பாளையத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இரவு 9 மணி அளவில் வீடு திரும்பினர். நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தோட்டத்தில் இருந்த சோளத்தட்டை படப்பு தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னராசு குடும்பத்தினரின் செல்போன்களுக்கு அழைத்தபோது, வீட்டிற்குள் போன் மட்டும் அடித்துக் கொண்டிருந்தது. தகவலறிந்து வந்த பழநி தீயணைப்புப்படை வீரர்கள், தீயை அணைக்கும்போது சோளத்தட்டை படப்பில் இருந்து இறந்தவர்கள் உடல்கள் வெளியே தெரிந்தது. சம்பவ இடத்திற்கு ஐஜி அன்பு, டிஐஜி விஜயகுமாரி, எஸ்பி சீனிவாசன் தலைமையில் போலீசார் குவிந்தனர். வீட்டிற்குள் ரத்தம் சிறிது கிடந்ததால் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டு, படப்பில் வைத்து எரிக்கப்பட்டிருக்கலாமா என்ற ரீதியில் போலீசார் விசாரணையை துவக்கினர்.சம்பவ இடத்திற்கு மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிந்து, கொலை செய்து எரிக்கப்பட்டனரா? அல்லது சின்னராசு குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டனரா என விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் அளித்த  பேட்டியில், ‘‘முதற்கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த எந்த பொருளும்  காணாமல் போகவில்லை. சந்தேக மரணம் என்ற ரீதியில் வழக்குப்பதிவு செய்து புலன்  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கருகி உயிரிழந்த சம்பவம் பழநி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரத்தக்கறையும்… விஷ மாத்திரையும்உயிரிழந்த சின்னராசுவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், அருகிலேயே தென்னை மரத்திற்கு வைக்கும் விஷ மாத்திரை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மாத்திரை அதிக விஷத்தன்மை உடையது. எனவே, மாத்திரையை சாப்பிட்ட பின் அனைவரும் தீக்குளித்தனரா? அல்லது வெளிநபர்கள் யாராவது கொலை செய்து விட்டு, தப்பினரா என்ற ரீதியிலும் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்தவர்கள் உடலில் விஸ்ரா பரிசோதனைதிண்டுக்கல்லில் நடந்த பிரேத பரிசோதனையில் உடல் எரிந்தபோது 4 பேரும் மயக்கநிலையில் இருந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தீயின் புகை இறந்தவர்களின் உடலிற்குள் சென்ற அளவைக் கொண்டு மருத்துவர்கள் இக்கணக்கீடை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இறந்தவர்களின் உள்ளுறுப்புகள் விஸ்ரா பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டே விஷம் அருந்தியதால் மயக்கம் ஏற்பட்டதா? எந்த வகையான விஷம் அருந்தினர் என்பது தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மனஅழுத்த பாதிப்புசின்னராசு கடந்த சில வருடங்களாக மன அழுத்தம் ஏற்பட்டு, சரியாக தூக்கம் வரவில்லை எனக்கூறி மருத்துவம்  பார்த்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திகேயனுக்கு சிறுநீரக பிரச்னை  இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் வளர்த்த பசுமாடு இறந்துள்ளது. இதனால் சின்னராசு மனரீதியாக பெரும்  பாதிப்பிற்குள்ளானதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். எனவே, மனஅழுத்தத்தில் சின்னராசு, குடும்பத்தினரை கொலை செய்து தற்கொலை செய்திருக்கலாமா என்ற ரீதியிலும்  விசாரணை நடக்கிறது.6 மணி நேரம் விடாது குரைத்த வளர்ப்பு நாய்உயிரிழந்த  சின்னராசு தனது தோட்டத்தில் மாடு மற்றும் நாய் வளர்த்து வந்துள்ளார். தீயில் எரிந்த சோளத்தட்டை படப்பிற்கு அருகில்  வளர்ப்பு நாயும் வேப்ப மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த நாய்  தீப்பற்றிய நேரம் முதல் உயிரிழந்தவர்களின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு  சென்றது வரை சுமார் 6 மணி நேரம் குரைத்துக் கொண்டே இருந்தது. இந்த காட்சி கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது….

The post சோளத்தட்டை படப்பில் தீ ஒரே குடும்பத்தில் 4 பேர் உடல் கருகி பலி: பழநி அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Palani ,BALANI ,Cornstone ,Phalani ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து