×

மயிலாடும்பாறை அருகில் உள்ள மலையில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்தது கண்டுபிடிப்பு: கற்கருவிகளை பட்டைத் தீட்டிய தடயம் சிக்கியது

கிருஷ்ணகிரி: மயிலாடும்பாறை அருகில் உள்ள மலையில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் கற்கருவிகளை பட்டைத் தீட்டிய தடயங்கள் சிக்கியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் தொகரப்பள்ளி அருகில் மயிலாடும்பாறை உள்ளது. இங்குள்ள சானாரப்பன் மலையில் கற்கருவிகளை பட்டைத் தீட்டும் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறியதாவது: மயிலாடும்பாறை சானாரப்பன் மலையில் உள்ள நெகில் சுனையில், பாறை ஓவியங்கள் உள்ளன. சுனையில் தண்ணீர் ஓடும் பாறையில், குரூஸ் (கற்கருவிகளைப் பட்டைத் தீட்டும் பள்ளம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதன் புதிய கற்காலத்திற்கு முன்பு, கற்களை உடைத்து பயன்படுத்தி வந்துள்ளான். முனை உடைந்துவிட்டால் அவற்றை தூக்கி எரிந்துவிடுவான். ஆனால் புதிய கற்காலத்தில், கற்களை ஒரு வடிவத்தில் உடைத்து, அதை பாறையில் தேய்த்து ஒரு கூரான வடிவத்தைக் கொண்டு வருவான்.கற்கருவிகளை தேய்க்கும் போது முனை உடைந்துவிட்டால் மீண்டும் பாறையில் தேய்த்து முனையை உருவாக்குவான். அவ்வாறு கற்களை பாறையில் தேய்க்கும் போது ஏற்படும் சூட்டைத் தணிக்க சுனையில் ஓடும் தண்ணீரில் கற்கருவிகளை மூழ்கடித்து, பின்னர் ஒரு பக்கம் கூறாகவும், ஒரு பக்கம் பட்டையாகவும் தேய்த்து கருவிகளை உருவாக்கியுள்ளான். 2001ம் ஆண்டு இங்கு பட்டைத் தீட்டும் பள்ளம் ஒன்றை மட்டுமே கண்டுபிடித்தனர். தற்போது இங்கு அகழாய்வு மேற்கொண்ட பின்னர் 11 குரூஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த புதிய கற்கால மனிதர்கள் ஒன்றாக சேர்ந்து இந்த இடத்தைவிட்டு செல்லாமல், சிறிது சிறிதாக வெளியேறி உள்ளதால், குரூஸ் தவிர வேறு தடயங்கள் எதுவும் இல்லை. அந்த தடயங்களைத் தேடித்தான் அடுத்தக் கட்ட ஆய்வு சென்று கொண்டிருக்கிறது. தற்போது இந்த சுனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பானை ஓடுகளை சுத்தம் செய்து அதில் எழுத்துக்கள் உள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வில் தொல்லியல் அகழாய்வு அலுவலர் பரந்தாமன், கிருஷ்ணகிரி வரலாற்று குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்….

The post மயிலாடும்பாறை அருகில் உள்ள மலையில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்தது கண்டுபிடிப்பு: கற்கருவிகளை பட்டைத் தீட்டிய தடயம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Mayiladumpara ,Krishnagiri ,
× RELATED சிக்னல் கம்பம் சாய்ந்து 2 டூவீலர்கள் சேதம்