×

மேட்டூர், தேவூர் பகுதியில் காவிரி நீரை ராட்சத குழாய் மூலம் திருடி பாசனத்திற்கு விட ரூ.100 கோடி வசூல்: எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் மீது புகார்; நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் விசாரணை

சேலம்: ஊழலுக்கு எதிரான 5வது தூண் அமைப்பின் சேலம் மாவட்ட உறுப்பினர் செல்வம், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது: சேலம் மாவட்டம், இடைப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவூர், ராமக்கூடல், புள்ளாக்கவுண்டம்பட்டி ஆகிய காவிரி கரையோர பகுதிகளில், சிவசக்தி நீரேற்று பாசன சங்கம்,  மோர்பாளையம் நீரேற்று பாசன சங்கம், ஆலத்தூர் நீரேற்று பாசன சங்கம் ஆகியவை உள்ளன. இவற்றின் மூலம், சுமார் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறவுள்ளது. குறிப்பாக காவிரி ஆற்றுக்கு அருகே 250 மீட்டர் தள்ளி கிணறு அமைத்து, அதில் ஊறும் தண்ணீரை இலவச மின்சாரம் மூலம் நீரேற்றம் செய்து பாசன வசதி வழங்குவது இத்திட்டத்தின் நிபந்தனை. ஆனால், காவிரி ஆற்றில் நேரடியாக ராட்சத குழாய்களை 20 முதல் 30 அடி ஆழத்தில் பதித்து, அதன் மூலம் தண்ணீரை சட்டவிரோதமாக எடுத்து கிணற்றில் நிரப்பி, பின் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி, மின் மோட்டார் மூலம் பாசன நிலங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீரேற்று பாசன விவசாய சங்க தலைவர்களுடன், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடாசலம் கூட்டணி அமைத்து, பாசன விவசாயிகளிடம் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பெற்று, சட்டவிரோதமாக காவிரி தண்ணீரை வழங்குகின்றனர். இதுதொடர்பாக விசாரித்து, கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் செல்வதை தடுக்கும் வகையில், ராட்சத குழாய் மூலம் தண்ணீர் திருடப்படுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கும் இந்த மனுவை அனுப்பியுள்ளதாக செல்வம் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ‘‘மேட்டூர், தேவூர் பகுதியில் 3 நீர்ப்பாசன சங்கங்கள் மூலம் 850க்கும் அதிகமான விவசாயிகளிடம் இருந்து, ரூ.100 கோடிக்கு மேல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடாசலம் வசூலித்து, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். காவிரியில் இருந்து நேரடியாக குழாய் மூலம் தண்ணீரை எடுத்து பயன்படுத்த அனுமதி கிடையாது. ஆனால், ஆட்சியில் இருந்தபோது அதிகாரிகளின் துணையோடு, குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த அரசு உரிய நடவடிக்கையை எடுத்து, முறைகேட்டை தடுக்க வேண்டும்,’ என்றார். இது குறித்து அரசு சிறப்பு செயலாளர் அசோகன், ஏற்கனவே திருச்சி மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில், தேவூர் பகுதியில் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் கள ஆய்வு நடத்தி வருகின்றனர். நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் கள ஆய்வு நடத்தி வருகின்றனர்….

The post மேட்டூர், தேவூர் பகுதியில் காவிரி நீரை ராட்சத குழாய் மூலம் திருடி பாசனத்திற்கு விட ரூ.100 கோடி வசூல்: எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் மீது புகார்; நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Mettur ,Devoor ,Edappadi Palaniswami ,Water Resources Department ,Salem ,Selvam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை...