×

ஜோலார்பேட்டை அடுத்த பக்ரித்தக்கா பகுதியில் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க நிரந்தர தீர்வு

*கால்வாய் கட்டுமான பணிகள் தீவிரம்

*வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அடுத்த பக்ரித்தக்கா பகுதியில் ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீரை அகற்ற நிரந்தர தீர்வாக கால்வாய் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஜோலார்பேட்டை அடுத்த பக்ரித்தக்கா பகுதியில் கட்டேரி, அம்மையப்பன் நகர், ஜோலார்பேட்டை நகராட்சி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் வகையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ரயில்வே தரைபாலம் அமைக்கப்பட்டது.

தற்போது பாலத்தின் வழியாக பேருந்துகள் கனரக வாகனங்கள் தவிர்த்து கார், பைக் உள்ளிட்டவை சென்று வருகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் மழை நீரானது ரயில்வே தரைபாலத்திற்குள் குளம் போல் தேங்கி நின்று விடுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் விரைவில் மேம்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோருக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனடிப்படையில், துறை அதிகாரிகளுடன் எம்பி, எம்எல்ஏக்கள் ரயில்வே பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டு கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கிடையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை சுமார் ஒரு லட்சம் மதிப்பீட்டில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நீர் இறைக்கும் மோட்டார் வழங்கி நீர் அகற்றப்பட்டு வந்தது. தற்போது ரயில்வே நிர்வாகம் துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரயில்வே பாலத்தில் மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் மழை நீர், தேங்காதவாறு நிரந்தர தீர்வுக்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அதனடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரயில்வே தரை பாலத்தில் மழை நீர் தேங்காதவாறு கட்டமைப்பு வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பாலத்தின் இருபுறமும் இரும்பு தூண்கள் அமைத்து மேற்கூரை அமைக்கப்படுகிறது. மேற்கூரையின் மீது வழியும் மழை நீர் மேம்பாலத்தில் இருபக்க கால்வாய் அமைத்து அதிலிருந்து மழை நீர் வெளியேற பணி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி மேம்பாலத்தில் இருபுறமும் இரும்பு தூண்கள் அமைக்கும் பணியும் மழைநீர் செல்ல இருபுறமும் கால்வாய் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பல வருடங்களாக மழைக்காலங்களில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரில் பாலத்தைக் கடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்த நிலையில், எம்பி, எம்எல்ஏக்களின் தொடர் நடவடிக்கையால் நிரந்தர தீர்வுக்கு ரயில்வே நிர்வாகம் பணியை தொடங்கி தீவிரப்படுத்தி வருவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

The post ஜோலார்பேட்டை அடுத்த பக்ரித்தக்கா பகுதியில் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க நிரந்தர தீர்வு appeared first on Dinakaran.

Tags : Jolarpet ,Bakrittakka ,Dinakaran ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே 5 அடி ராட்சத பள்ளம்...