×

ரூ.4,863 கோடி கடனுக்கு வெறும் ரூ.323 கோடி கொடுத்து தீர்க்க முயற்சி சிவசங்கரன் நிறுவனத்தின் செட்டில்மென்ட் கோரிக்கை நிராகரிப்பு: சொத்துக்களை விற்று கடனை வசூலிக்க தீர்ப்பாயம் அதிரடி

சென்னை: ரூ.4,863 கோடி கடனுக்கு வெறும் ₹323 கோடி கொடுத்து தீர்க்க முயன்ற, சிவசங்கரனின் சிவா இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் செட்டில்மென்ட் கோரிக்கையை, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது. அதோடு, அந்த நிறுவன சொத்துக்களை விற்று கடனை வசூலிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன். இவருக்கு பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் பல வங்கிகளில் மோசடிகள் நடந்தது ஏற்கெனவே அம்பலம் ஆகின. இதுபோல், இவரது நிறுவனங்களில் ஒன்றான சிவா இண்டஸ்டிரீஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும், ₹4,863 கோடி கடனுக்கு வெறும் ₹323 கோடி மட்டுமே செட்டில்மென்ட் செய்த தகவல் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவசங்கரனின் சிவா இண்டஸ்டிரீஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் உட்பட அவரது நிறுவனங்கள் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவிடம் ₹403 கோடி, எல்ஐசியிடம் ₹354 கோடி, பாரத ஸ்டேட் வங்கியிடம் ₹281 கோடி, யூனியன் பாங்க் ஆப் இந்தியாவிடம் ₹645 கோடி, ஐடிபிஐ வங்கியில் ₹876 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹306 கோடி, பாங்க் ஆப் இந்தியாவில் ₹74 கோடி, மஸ்டார் எனர்ஜி (யுஏஇ)யிடம் ₹777 கோடி, கனரா வங்கியிடம் ₹1,148 கோடி  உட்பட மொத்தம் ₹4,863 கோடி கடன் பாக்கி  வைத்துள்ளது.  இதற்கிடையில் கனரா வங்கி தான் வழங்கிய ₹1,148 கோடி கடனை தீர்க்க, சர்வதேச சொத்து மறு சீரமைப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டது. இந்நிலையில், 2 பரிவர்த்தனைகளில் ₹323 கோடியை மட்டும் பெற்றுக் கொண்டு ₹4,803 கோடி கடனை சரிக்கட்ட சிவசங்கரன் நிறுவனம் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வங்கி அதிகாரிகள் துணையுடன் வங்கி வழங்குநர் குழு ஒப்புதல் அளித்து 2 நாட்களில் முன்பணமாக ₹5 கோடி கொடுப்பது எனவும், இதைத்தொடர்ந்து முதல் பரிவர்த்தனையில் தீர்ப்பாய அனுமதி பெற்று 30 நாட்களில் ₹41.45 கோடியும், 2வது பரிவர்த்தனையாக தீர்ப்பாய அனுமதி பெற்று 180 நாட்களில் ₹276.76 கோடியும் வழங்கி செட்டில்மென்ட் செய்வது என முடிவானது.இதனிடையே, திவால் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் சிவா இண்டஸ்டிரீஸ் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு வந்தது. அப்போது, கடனை திரும்ப செலுத்த முடியாத நிறுவனம், செட்டில்மென்ட் தொகையை செலுத்தும் என்ற நம்பிக்கை வங்கிகளுக்கு எந்த அடிப்படையில் ஏற்பட்டது என்று தீர்ப்பாய நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மொத்த கடன் தொகையில் வெறும் 6.5 சதவீதம் வசூல் செய்து விட்டு கடனை முடிவுக்கு கொண்டு வர கடன் வழங்குநர் குழு முடிவு செய்தது மோசமான முன்னுதாரனம் ஆகிவிடாதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. திவால் சட்ட விதி 12ஏயின்படி. திவால் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய, கடன் வழங்குநர் குழுவில் 90 சதவீதம் பேர் அதற்கு ஆதரவாக வாக்களிக்களிக்க வேண்டும். ஆனால், சிவா இன்டஸ்டிரீஸ் விஷயத்தில், செட்டில்மென்ட் செய்யவே வாக்களித்துள்ளனர். கடன் வழங்கிய வங்கி செட்டில்மென்ட் நடவடிக்கைக்கு பரிந்துரைத்த தொகை முழுமையாக பெறப்பட்டிருந்தால் மட்டுமே, கடன் வழங்குநர் குழு அதற்கு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். இப்படி நடந்தால், வங்கிக்கு வராக்கடன் பிரச்னை ஏற்படாது. தீர்ப்பாயத்தின் பணியும் சுலபமாகியிருக்கும். சிவா இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் இந்த திட்டம், செட்டில்மென்ட் போன்று தெரியவில்லை. மாறாக, வர்த்தக மறு சீரமைப்பு திட்டம் போல தெரிகிறது. மொத்தம் ₹4,863 கோடி கடனுக்கு ₹5 கோடி முன்பணமாக வழங்க நிறுவனம் முன்வந்துள்ளது. விதிகளின்படி, செட்டில்மென்ட் பணம் நிறுவனம் தரப்பில் இருந்தோ அல்லது, சொத்துக்களை விற்றோ வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, தீர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக சிவா குழும நிறுவனங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள தீர்ப்பாயம், சிவா இண்டஸ்டிரீஸ் சொத்துக்களை விற்று கடனை வசூலிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது….

The post ரூ.4,863 கோடி கடனுக்கு வெறும் ரூ.323 கோடி கொடுத்து தீர்க்க முயற்சி சிவசங்கரன் நிறுவனத்தின் செட்டில்மென்ட் கோரிக்கை நிராகரிப்பு: சொத்துக்களை விற்று கடனை வசூலிக்க தீர்ப்பாயம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Sivakshankaran ,Chennai ,Siva Industrial ,Sivasankaran ,Sivakshankaran Company ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!