×

அமளியால் மழைக்கால கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிந்தது நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: மக்களவை 75 மணி நேரம் வீணானதாக சபாநாயகர் வேதனை

புதுடெல்லி: பெகாசஸ் ஒட்டுகேட்பு மற்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மழைக்கால கூட்டத் தொடரில் தொடர் அமளி ஏற்பட்டு வந்த நிலையில், மக்களவையும், மாநிலங்களையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாளை வரை கூட்டத் தொடர் நடக்க இருந்த நிலையில் முன்கூட்டியே முடிக்கப்பட்டுள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் அமளியால் 75 மணி நேர அவை அலுவல் வீணாகி விட்டதாக சபாநாயகர் ஓம்பிர்லா அதிருப்தி தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளன்று, இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள் உட்பட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்களின் செய்தி வெளியானது. இதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தாமாக முன்வந்து மக்களவையில் விளக்கம் அளித்தார். ஆனால், இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்பிக்கள் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தின. ஆனால், அரசு தரப்பில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால், கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதலே இரு அவைகளும் அமளி காரணமாக முடங்கின. இதில் அமளிக்கிடையே சில மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், இன்னும் இரு தினங்களே இந்த தொடர் நடக்க இருந்த நிலையில் நேற்று காலை மக்களவை கூடியது. சமீபத்தில் இறந்த எம்பி.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.அப்போது அவர் பேசுகையில், ‘‘இக்கூட்டத் தொடர் எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை அனைத்து எம்பி.க்களும் அவை ஒழுங்க்கத்தையும், பாரம்பரியத்தையும் கடைபிடிக்க வேண்டுமென வலியறுத்துகிறேன். கோஷமிடுவது, பதாகைகளை காட்டுவது அல்ல நமது நாடாளுமன்ற பாரம்பரியம். இருக்கைகளில் அமர்ந்து உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். மழைக்கால கூட்டத் தொடரில் 96 மணி நேரத்தில் 74 மணி நேரம் 46 நிமிடங்கள் அமளியால் வீணாகி உள்ளது. ஓபிசி மசோதா உட்பட 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இத்தகைய முறையில் அவை செயல்பட்டது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது,’’ என்றார்.இதே போல, மாநிலங்களவையில் நேற்று ஓபிசி மசோதா, ஹோமியோபதி தேசிய ஆணைய சட்ட திருத்த மசோதா, பொது காப்பீடு சட்ட திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, இரவு 8 மணி வரை அவை நடத்த நிலையில் அமளி நிலவியதால், அவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அவைத்தலைவர் அறிவித்தார். நாளை வரை கூட்டத் தொடர் நடத்த திட்டமிட்ட நிலையில் முன்கூட்டியே மழைக்கால கூட்டத் தொடர் முடிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.* இரவு தூக்கத்தை இழந்தேன்: வெங்கையா நாயுடு கண்ணீர்மாநிலங்களவை நேற்று கூடியதும் பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் சிலர், அவையின் இருக்கைகள் மீது ஏறி அமளி செய்தனர். இது பற்றி அவைத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று பேசியதாவது: அவையில் நடக்கும் சில விஷயங்கள் மிகுந்த வேதனையை அளிக்கிறது. நேற்று (நேற்று முன்தினம்) அவையில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்பிக்கள் சிலர் இருக்கை மீது ஏறிநின்று அமளி செய்தனர். சிலர் அவைத்தலைவர் இருக்கை நோக்கி கோப்புகளை வீசி எறிந்தனர். இதுபோன்ற ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் புனிதத்தை சிதைப்பது மிகவும் வேதனை தருகிறது.நான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். எனது வேதனையை விளக்க வார்த்தைகள் இல்லை. இதனால், நேற்றிரவு தூக்கம் இழந்தேன். செவ்வாய்க்கிழமை அவையில் நடந்த விஷயத்திற்கு அவை உறுப்பினர்கள் தீர்வு காண வேண்டும். இன்னும் சில நாட்களில் நீங்கள் அனைவருமே 75வது சுதந்திர ஆண்டு விழா தொடக்கத்தை கொண்டாட இருக்கிறீர்கள். இந்த சமயத்தில் நல்ல நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டுமா அல்லது மோசமான குறுக்கீட்டாளராக இருக்க வேண்டுமா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு கண்ணீருடன் கூறினார்.* ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் நல்லதல்லமக்களவை முன்கூட்டி முடிக்கப்பட்டது குறித்து, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறுகையில், ‘‘பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென முதல் நாளில் இருந்தே நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் இடமாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுகின்றன. எது சரி, தவறு என்பதை தீர்மானிப்பது அரசின் வேலையல்ல. தனது இஷ்டத்திற்கு அரசு நடப்பது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல. இது நம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்,’’ என்றார்….

The post அமளியால் மழைக்கால கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிந்தது நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: மக்களவை 75 மணி நேரம் வீணானதாக சபாநாயகர் வேதனை appeared first on Dinakaran.

Tags : Amali ,Parliament ,New Delhi ,Pegasus ,Raintime Meeting ,Speaker ,
× RELATED புதிய எம்பி.க்களுக்கு நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் பிரமாண்ட வரவேற்பு