×

கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழைய அமலுக்கு வராத இ.பாஸ் நடைமுறை-கெடுபிடியின்றி சென்று வரும் தோட்ட தொழிலாளர்கள்

கூடலூர் : கேரளாவில் இருந்து குமுளி, கம்பம்மெட்டு வழியாக வர இ.பாஸ் கட்டாயமாக்கப்படவில்லை. இதனால் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் கெடுபிடியின்றி சென்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொது மக்கள் போக்குவரத்தை குறைக்கும் நடவடிக்கையாக மாநிலம் விட்டு மாநிலம் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ.பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு என கேரள மாநிலம் செல்ல வழிகள் இருந்தாலும் குமுளி வழியாக மட்டும் மக்கள் கேரளத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் மருத்துவ முகாம்களில் சோதனை செய்யப்பட்ட பின்பே அனுமதிக்கப்பட்டார்கள். அதன்பின் கொரோனா தொற்று குறைந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இ.பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. கம்பம்மெட்டு, லோயர்கேம்பில் இருந்த மருத்துவ முகாம்கள் காலிசெய்யப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவல் தொற்று மீண்டும் இரண்டாம் முறையாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் முக்கிய வழிமுறையாக, தமிழகத்திற்கு  கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி தவிர்த்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் இ.பாஸ் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அரசு நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. இந்த அறிவிப்பால் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் தோட்டத்தொழிலாளர்களும், விவசாயிகளும், வியாபாரிகளும் குழப்பமடைந்தனர். ஆனால் ெதாழிலாளர்கள் கேரளாவிலுள்ள தோட்டங்களுக்கு சென்றுவர தேனி மாவட்டத்தில் இதுவரை இ.பாஸ் கட்டாயமாக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இப்பகுதிக்கு இதுவரை இ.பாஸ் கட்டாயமாக்கப்படவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் தேர்தல் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். அதனால் சுகாதாரப்பணியாளர்கள் மூலம் மருத்துவ முகாம் அமைக்கலாம். ஆனால் இதுவரை இ.பாஸ், மருத்துவ முகாமிற்கான உத்தரவில்லை என்றனர். இதனால் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். …

The post கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழைய அமலுக்கு வராத இ.பாஸ் நடைமுறை-கெடுபிடியின்றி சென்று வரும் தோட்ட தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala ,Kudalur ,Kumuli ,Kampammettu ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு