×

கீழடி அகழாய்வில் முதுமக்கள்தாழிகள், இரும்பு வாள் கண்டெடுப்பு..!

திருப்புவனம்: கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் குத்து வாள் மற்றும் ஒரு அடி உயரமுள்ள முள்ள மூன்று முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியில் ஏழு குழிகளும், அகரத்தில் எட்டு குழிகளும் கொந்தகையில் நான்கு குழிகளும், மணலூரில் மூன்று குழிகளும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை உறைகிணறுகள், வெள்ளி நாணயம், உழவு கருவி, பானைகள், பானை ஓடுகள் என பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொந்தகை தளத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 25 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில்,  ஒரே குழியில் ஒரு 30 செ.மீ. உயரமுள்ள மூன்று முதுமக்கள்தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 11 தாழிகள் திறக்கப்பட்டு அதில் உள்ள மண்டை ஓடு, எலும்புகள், சுடுமண் கிண்ணங்கள் உள்ளிட்டவைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த மாதம் ஒரு குழியில் இரும்பினாலான கத்தி போன்ற ஆயுதம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இரு நாட்களுக்கு முன் 46 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாள் கண்டறியப்பட்டுள்ளது. இறந்தவர்களை புதைக்கும் போது அவர்கள் பயன்படுத்திய மற்றும் விரும்பிய பொருட்களையும் சேர்த்து புதைப்பது வழக்கம். அதுபோல பண்டைய காலத்தில் அவர்கள் பயன்படுத்திய ஆயுதத்தையும் புதைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏழாம் கட்ட அகழாய்வில் இதுவரை இரண்டு இரும்பு ஆயுதங்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. முதுமக்கள்தாழிகள் சாதாரணமாக ஒரு அடியில் இருந்து ஐந்து அடி உயரம் வரை இருக்கும். கடந்த ஆறாம் கட்ட அகழாய்வில் 29 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு அதில் 20 எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டன.  தற்போது 25 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அதில் ஒரு அடி உயரத்தில் மூன்று முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் குழந்தைகளின் உடல்களை வைத்து புதைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் சிறிய தாழிகளில் உள்ள எலும்பு கூடுகள் அனைத்தும் உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறது. சிறிய தாழிகளினுள் சுடுமண் கிண்ணங்கள் ஏதும் இல்லை. பெரிய தாழிகளில் மட்டும்தான் சுடுமண் கிண்ணங்கள், உணவு கிண்ணங்கள், குறியீடுகளுடன் கூடிய கிண்ணங்கள் உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன….

The post கீழடி அகழாய்வில் முதுமக்கள்தாழிகள், இரும்பு வாள் கண்டெடுப்பு..! appeared first on Dinakaran.

Tags : Kontakai ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...