லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் திரையுலகில் நடிகைகள் நடத்தப்படும் விதம் குறித்து பிரபல நடிகை வேதனை தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட், நடிப்பு தொழிலில் இருந்து மாறி தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் ‘தி குரோனாலஜி ஆஃப் வாட்டர்’ என்ற படம் வெளியாகி, சமீபத்தில் திரையிடப்பட்டது. இந்நிலையில், இவர் கடந்த 24ம் தேதி ‘தி சண்டே டைம்ஸ்’ இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஹாலிவுட் திரைத்துறையின் போக்கு குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இந்த பேட்டியில் அவர் பேசுகையில், ‘ஹாலிவுட்டில் நடிகைகள் வெறும் பொம்மைகளாகவே நடத்தப்படுகிறார்கள். யார் வேண்டுமானாலும் நடிகையாகி விடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நான் இயக்குனராக மாறிய பிறகுதான், எனக்கு மூளை இருப்பது போலவும், புத்திசாலி போலவும் என்னிடம் பேசுகிறார்கள். ஆண் இயக்குனர்கள் தங்களுக்கு மந்திர சக்தி இருப்பது போல காட்டிக்கொள்கின்றனர். இதுபோன்ற கட்டமைப்பு ஆண்களால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை. எனது படத்தில் நடித்த நடிகை இமோஜென் பூட்ஸ் தனது உடலையும் ஆன்மாவையும் அர்ப்பணித்து நடித்துள்ளார்’ என்று கூறினார். இவர் இந்தாண்டில் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, மூன்று படங்களை இயக்குவதில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
