×

ராசிமலை கிராம மலைவாழ் மக்களுக்கான வீடுகளை விரைந்து கட்ட கோரிக்கை-சேதமடைந்த தற்காலிக வீடுகளில் தவிப்பு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே, ராசிமலை கிராமத்தில் மந்தமாக நடக்கும் இலவச வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தேவதானப்பட்டி அருகே, மஞ்சளாறு அணைக்கு மேற்புறத்தில், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் மலைவாழ் மக்கள் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1999ல் கெங்குவார்பட்டி தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அணைக்கு மேலே ராசிமலை என்னும் இடத்தில் 28 வீடுகள் கட்டி தரப்பட்டன. கிராமத்துக்கு தேவையான சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போராடி பெற்றனர். இந்நிலையில், மழைகாலங்களில் மண்சரிவு உள்ளிட்ட காரணங்களால் தொண்டு நிறுவனம் கட்டிய வீடுகள் சேதமடைந்தன. இதனால், மலைக்கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். கடந்த 2019 ஆகஸ்ட்டில் சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 32 புதிய வீடுகள் கட்ட, பணிகள் தொடங்கப்பட்டது. இதனால், மலைக்கிராம மக்கள் ஆங்காங்கே தற்காலிக வீடுகள் அமைத்து வசித்து வருகின்றனர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய வீடு கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளாகியும் ஒரு வீடு கூட கட்டி முடிக்கப்படவில்லை. தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் வனவிலங்குகள் உலா வருவதால், அவர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். மேலும் பருவமழை காலங்கள் தொடங்க உள்ள நிலையில், பெரும் சிரமம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து ராசிமலை கிராம மக்கள் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீடுகட்டும் திட்டத்தில் கட்டிட பணிகளை ஆரம்பித்தனர். நாங்கள் மலைகளுக்குள் தற்காலிக வீடுகள் அமைத்து வசித்து வருகிறோம். இரவு நேரங்களில் வனவிலங்களின் நடமாட்டம் உள்ளது. தற்காலிக வீடுகளில் வசித்து வருவதால் வனவிலங்குகளால் பெரும் ஆபத்து உள்ளது. மழை காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தமிழ்நாடு குடிமாற்று வாரியத்தில் கட்டப்பட்டுவரும் பணிகளை துரிதப்படுத்தி, புதிய வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்….

The post ராசிமலை கிராம மலைவாழ் மக்களுக்கான வீடுகளை விரைந்து கட்ட கோரிக்கை-சேதமடைந்த தற்காலிக வீடுகளில் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rasimalai ,Rasimalay ,Godhanapatti ,Devadanapatti ,Rasimalai Village ,Rashimalai Village ,Rashimalaya ,
× RELATED முன் விரோதத்தால் தகராறில் ஈடுபட்டவர்கள் கைது