×

செங்கல்பட்டு நகருக்குள் வெளிமாவட்ட பஸ்கள் வருகை: பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி

செங்கல்பட்டு: கடந்த 25 வருடங்களுக்கு முன்பு, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்கள் செங்கல்பட்டு நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றி சென்றன. பின்னர், செங்கல்பட்டு நகருக்கு வெளியே பைபாஸ் சாலை அமைக்கப்பட்டதால், அரசு விரைவு பஸ்கள் தவிர, மற்ற மாவட்ட பஸ்கள் நகருக்குள் வந்து சென்றன. அதில் கடந்த 15 ஆண்டுகளாக நகருக்குள் வந்து சென்ற விழுப்புரம், கள்ளகுறிச்சி, திருவண்ணாமலை, சிதம்பரம்,  புதுச்சேரி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், கடலூர், காட்டுமன்னார்கோயில், பண்ருட்டி, மேல்மலையனூர்,  மரக்காணம், செஞ்சி, போளூர், வந்தவாசி பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், செங்கல்பட்டு நகருக்குள் வந்து செல்லாமல் பைபாஸ் சாலை வழியாக சென்றன.அதேபோல் செங்கல்பட்டு அதனை சுற்றியுள்ள திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பயணிகளும்  காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளை சேர்ந்த பயணிகளும் தென்மாவட்டங்களுக்கு செல்ல தாம்பரம், பெருங்களத்தூர், மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். செங்கல்பட்டு நகருக்குள் பஸ்கள் செல்லாததால், உள்ளூர் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். நகருக்குள் வெளியூர் பஸ்கள் வந்து செல்லவேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித பலனுமில்லை. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், பொதுமக்கள் சார்பில், நகர திமுக  சார்பிலும்  நகருக்குள் மீண்டும் வெளி மாவட்ட பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்பேரில், கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு நகருக்குள் வெளிமாவட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள், வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக்கை, திமுக அரசு பொறுப்பேற்ற உடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு புதிய மாவட்டத்துக்கு முக்கிய அந்தஸ்து கிடைத்துள்ளது. மாவட்ட மக்கள் சிரமமின்றி வெளி மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு நகரில் இருந்து பயணம் செய்யலாம். இதனால், கால தாமதம், பண விரயம் குறையும். வெளிமாவட்ட பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், அமைச்சர், எம்எல்ஏ ஆகியோருக்கு நன்றி என தெரிவித்தனர்….

The post செங்கல்பட்டு நகருக்குள் வெளிமாவட்ட பஸ்கள் வருகை: பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chennai ,Chenkalpattu ,
× RELATED செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில்...