×

12 கேரக்டர்களில் நடிக்கும் சேத்தன் சீனு

சென்னை: மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளியான ‘கருங்காலி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர், சேத்தன் சீனு. பிறகு தெலுங்கில் ‘மந்த்ரா-2’, ‘ராஜு காரி கதி’, ‘பெல்லிக்கி முந்து பிரேமகதா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் அவர், காவேரி கல்யாணி இயக்கியுள்ள படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘புன்னகை பூவே’, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘காசி’, ‘சமுத்திரம்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த மலையாள நடிகை காவேரி கல்யாணி, தற்போது இயக்குனராக மாறி தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கியுள்ள பான் இந்தியா படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை.

தவிர, ஆறுபடை முருகன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, சங்கர் இயக்கத்தில் சேத்தன் சீனு நடித்துள்ள ‘வள்ளுவன்’ என்ற படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது. அடுத்து கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ‘ஜென்டில்மேன்-2’ படத்தில் ஹீரோவாக நடிக்கும் சேத்தன் சீனு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுதந்திரத்துக்காகப் போராடிய 12 சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையை மையப்படுத்தி ஆந்தாலாஜி படமாக உருவாகும் ‘ஆக்டர்’ என்ற படத்திலும் நடிக்கிறார். இதில் வேலு நாச்சியார் உள்பட 12 கேரக்டர்களிலும் சேத்தன் சீனுவே நடிக்கிறார். இந்நிலையில் பிஎம்கே இண்டர்நேஷனல், சிசி புரொடக்‌ஷன் இணைந்து தயாரிக்கும் ‘பீஷ்ம பருவம்’ என்ற படத்தில் சேத்தன் சீனு ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்துக்காக, 45 அடி உயரம் கொண்ட மகா காளி செட் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Chetan Seenu ,
× RELATED தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா: எம்.எம்.கீரவாணி நெகிழ்ச்சி