×

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் திடீர் உண்ணாவிரதம்

குன்றத்தூர்: முகலிவாக்கத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம் 156வது வார்டு முகலிவாக்கம், அம்பேத்கர் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் களத்துமேடு எனும் காலி மைதானம் உள்ளது. இங்கு தங்களது வீடுகளில் நடைபெறும் விசேஷங்கள் மற்றும் அங்குள்ள கோயிலுக்கு பொங்கல் வைத்து, அப்பகுதி மக்கள் வழிபாடு செய்ருகின்றனர். இந்நிலையில், காலி மைதானத்தில், சென்னை பெருநகர கழிவுநீரகற்று வாரியம் சார்பில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்காக அளவிடும் பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் 100க்கு மேற்பட்ட மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அங்கிருந்த அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால், அனைத்து மக்களும் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆலந்தூர் ஆர்டிஓ யோகஜோதி, தாசில்தார் சரவணன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர், உதவி கமிஷனர்கள் போரூர் பழனி, பூந்தமல்லி முத்துவேல்பாண்டி ஆகியோர் தலைமையில் மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இதுதொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, மாற்று இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒரு மணிநேரம் பரபரப்பு நிலவியது….

The post கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் திடீர் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Kunradthur ,Mughalivakam ,
× RELATED குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர்...