×

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் கல்லா கட்டிய ஒன்றிய அரசு : வரலாறு காணாத வகையில் ரூ.3.35 லட்சம் கோடி வருவாய் வசூல்!!

டெல்லி : பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் கடந்த நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடியில் இருந்து ரூ. 3.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர்  ரமேஷ்வர் டெலி இந்த தகவலை அளித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.19.98- ல் இருந்து ரூ.32.09- ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று டீசல் மீதான கலால் வரி ரூ.15.83ல் இருந்து ரூ.31.08ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த நிதி ஆண்டில் பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத வசூலாகும். கச்சா எண்ணெய் விலை சார்ந்துள்ள நிலையில், கலால் வரி வசூல் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள அதே வேளையில், பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று அச்சம், ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து முடங்கியதே பெட்ரோல், டீசல் விற்பனைச் சரிவிற்கு காரணமாகும். மற்றொரு துணை கேள்விக்கு பதில் அளித்த நிதி துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மார்ச் மாதத்திற்கு பின்னர் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான கலால் வரி வசூல் ரூ.1.01 லட்சம் கோடி என்று கூறி உள்ளார். இதில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியும் அடங்கும். கடந்த நிதி ஆண்டில் பெட்ரோல் விலை 76 முறையும் டீசல் விலை 73 முறையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 24 முறை மட்டுமே இவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  …

The post பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் கல்லா கட்டிய ஒன்றிய அரசு : வரலாறு காணாத வகையில் ரூ.3.35 லட்சம் கோடி வருவாய் வசூல்!! appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Kalla ,Delhi ,Dinakaran ,
× RELATED End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை...