×

டென்னிஸ் வீராங்கனை கோகோ கவுஃபுக்கு கொரோனா பாதிப்பு: ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகினார்

டோக்கியோ: கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை கோகோ கவுஃப், ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஓராண்டு தாமதத்திற்கு பின்னர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி முதல் ஆக.8ம் தேதி வரை நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் டோக்கியோவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அனைவருக்கும் முறையாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டோக்கியோவில் கடந்த வாரம் போட்டி அமைப்பாளர்களில் இருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தடகள வீரர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் வளர்ந்து வரும் இளம் வீராங்கனைகளில் ஒருவரான 17 வயதேயான கோகோ கவுஃபுக்கு, கொரோனா பாசிட்டிவ் என்பது பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக டோக்கியோவில் இருந்து அமெரிக்கா திரும்புகிறார் என்று அமெரிக்க டென்னிஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. அட்லாண்டாவை சேர்ந்த கோகோ கவுஃப், தற்போது மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 25ம் இடத்தில் உள்ளார். சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் 4ம் சுற்று வரை முன்னேறிய இவர், அப்போட்டியில் ஜெர்மன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரிடம் தோல்வியடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் பலர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் கோகோ கவுஃப், வெண்கலம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2019ல் ஆஸ்திரியாவில் நடந்த லின்ஸ் ஓபன் டென்னிசிலும், இந்த ஆண்டு இத்தாலியில் நடந்த பார்மா ஓபன் டென்னிசிலும் கவுஃப் மகளிர் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். லின்சில் மேலும் இரட்டையர் போட்டிகளிலும் கோகோ கவுஃப், தற்போது மிகத் திறமையாக ஆடிக் கொண்டிருக்கிறார். மகளிர் இரட்டையர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இவர் 3 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். இதனால் கொரோனா காரணமாக ஒலிம்பிக்கில் இவர் ஆடமாட்டார் என்ற செய்தி, அமெரிக்காவுக்கு பின்னடைவுதான் என்று அமெரிக்க டென்னிஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்….

The post டென்னிஸ் வீராங்கனை கோகோ கவுஃபுக்கு கொரோனா பாதிப்பு: ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகினார் appeared first on Dinakaran.

Tags : Koko Kauf ,Olympics ,Tokyo ,Coco Kauf ,Olympic Games ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்...