சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாசற்ற நீர் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புவி சுற்றுப்புற சூழல் கண்காணிப்பு திட்டம் மற்றும் இந்திய தேசிய நீர்வள ஆதாரங்கள் கண்காணிப்பு திட்டம் ஆகியவற்றின் மூலம் காவிரி, தாமிரபரணி, பாலாறு, வைகை ஆகிய நதிகள் மற்றும் உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, வீராணம், போரூர், பூண்டி, பழவேற்காடு உள்ளிட்ட ஏரிகளில் உள்ள நீரின் தன்மை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கண்காணிக்கப்படுகின்றன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து, மருத்துவமனைகளில் பயன்படுத்தும் முகக்கவசம், முழு உடல் கவசம், கையுறைகள், ஊசி, மருத்துவ கழிவுகள் போன்றவை போரூர் ஏரியில் சட்டவிரோதமாக கொட்டப்படுகிறது. இதே நிலைமைதான் முடிச்சூர் ஏரியிலும் காணப்படுகிறது. இதுபற்றி புகார் அளிக்கும்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், அதை தடுக்க நிரந்தரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஏரியில் கொட்டப்படும் குப்பைகள், மருத்துவ கழிவுகள் காரணமாக ஏரி நீர் மாசடைந்து, நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படைவதாகவும், சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். போரூர் ஏரி குறித்து நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இருப்பினும், இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீர் மாசினை தடுக்கும் வகையில் ஏரிகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மருத்துவ கழிவுகள் போன்ற பொருட்கள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்….
The post போரூர், முடிச்சூர் ஏரிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை appeared first on Dinakaran.