×

குடும்ப கஷ்டம் தீர சென்ற இடத்தில் அடித்து துன்புறுத்தல்: பக்ரைனில் சிக்கி தவித்த பெண்கள் தன்னார்வ அமைப்பு மூலம் மீட்பு

தண்டையார்பேட்டை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி (32), வடிவுக்கரசி (38), வள்ளி (35). மூன்று பேரும்  கணவர்களை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குடும்பம் நடத்த இவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் தங்களது குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்தனர்.  இந்நிலையில் வெளிநாட்டுக்கு சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம், குடும்ப கஷ்டங்கள் தீரும் என இவர்களுக்கு ஒருவர் ஆலோசனை கூறியுள்ளார். இதையடுத்து கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு டிராவல் ஏஜென்சியை அணுகியுள்ளனர். பின்னர், டிராவல் ஏஜென்சி ஊழியர்கள் வழிகாட்டுதல்படி பாஸ்போர்ட் எடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பரிசோதனைகள்  முடித்து பக்ரைன் நாட்டுக்கு 3 பேரும் வீட்டு வேலைக்காக சென்றனர்.வேலைக்கு சென்று 4 மாதத்துக்கு மேலான நிலையில், அங்கு கடுமையான வேலை கொடுப்பதாகவும், வேலை செய்ய மறுத்தால் அடித்து துன்புறுத்துவதாகவும், உணவு அளிக்காமல் கஷ்டப்படுத்துவதாகவும், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்துவிடுங்கள் என பக்ரைன் நாட்டு ஏஜென்சியில் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள், ரூ.2 லட்சம் பணம் கொடுத்தால் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து சென்னையில் உள்ள தங்களது குடும்பத்தாருக்கு செல்போன் மற்றும் வாட்ஸ்அப் மூலம் 3 பெண்களும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்களது குடும்பத்தினர், பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் 3 பேரையும் மீட்டு தருமாறு வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்த செய்தி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் வைரலானது.இதை பார்த்த கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல தன்னார்வ அமைப்பு தலைவர் கன்னிகா, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத்தை தொடர்புகொண்டு, தங்கள் அமைப்பு மூலம் பக்ரைனில் தவிக்கும் 3 பெண்களையும் மீட்டுவர  அனுமதி அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். போலீசார் அனுமதி அளித்ததைதொடர்ந்து கன்னிகா, பக்ரைனில் உள்ள தமிழ்மன்றத்துடன் தொடர்புகொண்டு, தமிழ் மன்ற நிர்வாகி செந்தில், கேரளா அமைப்பை சேர்ந்த சுதிர் ஆகியோர் 3 பெண்களையும் மீட்பதில் தீவிரம் காட்டினர். சுதீர், தூதரகம் மூலம் பெண்களை மீட்டு இந்தியா அழைத்து வரவேண்டிய பணிகளை செய்தார். செந்தில், அந்த பெண்களை வீட்டு உரிமையாளரிடருந்து மீட்கும் பணிகளை செய்தார். இதுகுறித்து தகவல் கன்னிகாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இவர்களது தீவிர முயற்சியால் 3 பெண்களும் மீட்கப்பட்டு விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இன்று காலை சென்னை வந்த 3 பெண்களும்  சொந்த ஊர் திரும்ப காரணமாக இருந்த தன்னார்வ அமைப்பு தலைவர் கன்னிகா, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் மற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும்  தமிழ்மன்ற நிர்வாகி செந்தில், கேரளா அமைப்பை சேர்ந்த சுதிர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்….

The post குடும்ப கஷ்டம் தீர சென்ற இடத்தில் அடித்து துன்புறுத்தல்: பக்ரைனில் சிக்கி தவித்த பெண்கள் தன்னார்வ அமைப்பு மூலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Bahrain ,Thandaiyarpet ,Velankanni ,Vadikukarasi ,Valli ,Arunachal Iswarar Koil Street, Puduvannarappet, Chennai ,Pakistan ,
× RELATED வெறிச்சோடிய வேளாங்கண்ணி