×

ஆம்பூர் அருகே சமணர் காலத்தில் வண்ணக்கலவைகளால் வரையப்பட்ட அபூர்வ ஓவியங்கள் வரலாற்று நிகழ்வுகளை தாங்கி நிற்கும் ஆர்மா மலைக்குகை பாழாகிறது

* ஆட்டு கொட்டகை, சாராயம் விற்பனை மையமாக மாறிய அவலம்* பாதுகாக்கப்பட்ட இடமாக மாற்ற அரசு நடவடிக்கை தேவைஆம்பூர் : ஆம்பூர் அருகே உள்ள சமணர்காலத்தில் வண்ணக்கலவைகளால் வரையப்பட்ட அபூர்வ ஓவியங்கள், வரலாற்று நிகழ்வுகளை தாங்கி நிற்கும் ஆர்மா மலைக்குகை, ஆட்டுக்கொட்டகையாகவும், சாராயம் விற்பனை செய்யும் மையமாகவும் மாறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது  மலையம்பட்டு ஊராட்சி.  ஆம்பூரில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ளது. இதையொட்டி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஆர்மா மலை உள்ளது. முற்றிலும் பாறைகளால் உருவான இந்த ஆர்மா மலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 750 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆர்மா மலையில் பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி கொண்ட அரிய வகை மூலிகை  தாவரங்கள், அரிய வகை மரங்கள் ஆகியவை செழித்து வளர்ந்துள்ளன. இயற்கை எழில் நிறைந்த ஆர்மா மலையின் தெற்கு பகுதியில் பல்வேறு நினைவு சின்னங்கள் அடங்கிய பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஒன்று உள்ளது. இந்தக் குகையின் உள்ளே மேற்பரப்பில் பாறைகளில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு  வண்ணக் கலவைகளால் வரையப்பட்ட  அபூர்வ ஓவியங்கள் காணப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள ஓவியங்களைப்போன்று இந்த ஓவியங்கள் உள்ளது. இந்த  குகையானது சமணர்கள் காலத்தில் பயன்படுத்தபட்டதாகவும், நீண்டபயணம் மேற்கொண்ட சமணர்கள் ஆர்மா மலைக்குகையில் தங்கி சமண மத கோட்பாடுகளை எடுத்துரைத்ததாகவும், வரலாறு உண்டு. அவ்வாறு இங்கு பல காலம் தங்கிய சமணர்கள், குகையின் உள்ளே சிறு, சிறு அறைகளாக செங்கற்களைக் கொண்டு கட்டி, சுவர் எழுப்பி உள்ளனர். இன்றளவும் இந்த செங்கற்கள் ஆங்காங்க உடைந்திருந்தாலும் உறுதியாக காணப்படுகிறது.   மேலும், ஆர்மாமலை குகையில், காக்கும் தெய்வங்களை வழிபடுவதற்காக,  பாறைகளில்  புடைப்பு சிற்பங்களாக வடித்து  வைத்து, வணங்கி வந்துள்ளனர். மேலும், இந்த ஆர்மா மலையின் கீழ்ப்பகுதியிலிருந்து மேலே குகைக்குச் செல்ல கற்களால் 250க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆர்மா மலையின் பாறைகளில் வரையப்பட்டுள்ள வண்ணக்கலவை ஓவியங்களை, சமூக விரோதிகள்  சிலர் சேதப்படுத்தியுள்ளனர். அதேபோல் பாறைகளில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.இப்படி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாற்று நிகழ்வுகளை தாங்கி நிற்கும் ஆர்மா மலைக்குகை தற்போது, ஆடு கொட்டகையாகவும், சாராயம் விற்பனை செய்பவர்களின் இடமாகவும் மாறியுள்ளது. எனவே வரலாற்று சிறப்பு மிக்க ஆர்மா மலைக்குகையினை பாதுகாக்கப்பட்ட இடமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். சுற்றுலாத்தலமாக்க வேண்டும்இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆர்மாமலை காட்சியகமாக அறிவித்து, சுற்றுலா தலமாக்க நீண்ட காலமாக கோரி வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஹிம்சா நடைபயண குழுவினர் இந்த பழமையான குகை, அதிலுள்ள ஓவியம், கட்டிடம் ஆகியவற்றை காண வந்தனர்.  தமிழ்நாடு முழுவதும் உள்ள மிகவும் பழமையான, பாரம்பரியமில்லாத சமணர் குகைகளை தேடி கண்டறிந்து நேரில் பார்வையிட்டு வழிபாடு செய்த இந்த குழுவினர் இதுகுறித்து ஆய்வு நடத்தினர். தமிழக அரசு, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து உடன் பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். சித்தனவாசல் ஓவியங்களை பெருமையாக கூறும் நிலையில், இந்த ஓவியங்கள் அவற்றுக்கு சற்றும் குறைந்தது அல்ல என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் இன்றோ இந்த குகைகள் தற்போது  கால்நடைகளின் கொட்டகையாகவும், சாராய வியாபாரிகள், சாராயம் பதுக்கி ைவக்கும் இடமாகவும் பயன்படுத்துவது வேதனையாக உள்ளது. எனவே, அரசு இந்த அரியவகை  ஓவியங்களையும், கட்டிடங்களை, புடைசிற்பங்கள் என்று பழங்கால வரலாற்று நிகழ்வுகளை தாங்கி நிற்கும் ஆர்மாமலை குகையினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர். …

The post ஆம்பூர் அருகே சமணர் காலத்தில் வண்ணக்கலவைகளால் வரையப்பட்ட அபூர்வ ஓவியங்கள் வரலாற்று நிகழ்வுகளை தாங்கி நிற்கும் ஆர்மா மலைக்குகை பாழாகிறது appeared first on Dinakaran.

Tags : Ambur ,Arma Caves ,Avalam ,Ampur ,Arma ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...