×

தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை தடுக்க புல்லூரில் பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படும்

*ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் தகவல்திருமலை : தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை தடுக்க புல்லூர் பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.  ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் மண்டலம், புல்லூரில் கனகநாச்சியம்மன் கோயில் அருகே ஆந்திர அரசு தடுப்பணை கட்டியுள்ளது. இந்த தடுப்பணை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அமைந்துள்ளது. ஆரம்பத்தில் 8 அடி உயரத்துடன் இருந்த  தடுப்பணையை 13 அடியாக ஆந்திர அரசு உயர்த்தியது. இதனால் தமிழகத்திற்கு வந்த  தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், சுற்றியுள்ள பல்வேறு  பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாய நிலங்கள்  பாசனத்திற்கு போதிய தண்ணீரின்றி  பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தற்போது பெய்த பலத்த மழையில் அணை  நிரம்பி தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கை தொடர்ந்து தமிழகத்தில் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இந்த தடுப்பணையை நேற்றுமுன்தினம் மாலை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் குப்பம் தொகுதி பொறுப்பாளர் பரத்  கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.  இதையடுத்து, அவர் கூறியதாவது: ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக தடுப்பணை நிரம்பி வீணாக தண்ணீர்  தமிழகத்திற்கு பாலாற்றின் வழியாக செல்கிறது. இதனை அரசு கண்டுகொள்ளவில்லை என மக்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும்  மழை வரும் நேரங்களில் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வீணாக தமிழகத்திற்கு செல்வதால் குப்பம் தொகுதியில் உள்ள நான்கு மண்டலங்களில் கோடை காலத்தில் பாசன தேவைக்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இன்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட தடையாக உள்ள வழக்குகளை நீதிமன்றத்திற்கு சென்று சட்டரீதியாக எதிர்கொண்டு அனுமதி பெற்று புதிய அணை கட்ட முதல்வர் ெஜகன்மோகன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இதனால் அதிக அளவில் தண்ணீரை தேக்கி வைத்து குப்பம் தொகுதியில் உள்ள 4 மண்டலங்களில் கோடை கால தண்ணீர் தேவை நிறைவேற்ற முடியும். எனவே ஆந்திர மாநில அமைச்சர்  பெத்தி ரெட்டி ராமசந்திரா ரெட்டி மற்றும் அவரது மகனும்  நாடாளுமன்ற உறுப்பினருமான மிதுன் ரெட்டி ஆகியோரை சந்தித்து நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில்  வெற்றி பெற்று அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சிஏற்கனவே முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில் இருந்தபோது இந்த இடத்தில் அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்போது தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அணை கட்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், தடுப்பணையின் உயரம் மட்டும் உயர்த்தப்பட்டது. தற்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மீண்டும் தடுப்பணையை அணையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருப்பது  தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு அணை கட்டும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்….

The post தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை தடுக்க புல்லூரில் பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் appeared first on Dinakaran.

Tags : Bala River ,Bullur ,Tamil Nadu ,YSR Congress party ,Tirumala ,Pulur dam ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...