×
Saravana Stores

கள்ளக்குறிச்சி அடுத்த நாகலூர் கிராமத்தில் 830 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே திருவிழா நடத்த நிலதானம் செய்த சோழர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாறு ஆய்வு மையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகலூர் வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழு கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகலூர் என்ற கிராமத்தில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது நாகலூர் கயிலாயமுடையநாயனார் என்ற சிவன் கோயிலில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. 95 செ.மீ நீளமும், 85 செ.மீ அகலமும், 7 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகை கல்லில் முன்பக்கம் 14 வரிகள், பின்பக்கம் 9 வரிகளுடனும் கல்வெட்டு அமைந்துள்ளது. கோயிலின் முன்பக்கம் இது நடப்பட்டுள்ளளது. 830 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்க சோழனின் 13ம் ஆட்சியாண்டில் கிபி.1191ம் ஆண்டு இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் வீரராசேந்திர சோழன் என மூன்றாம் குலோத்துங்கன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் இந்த கிராமத்தின் பெயர் நாவலூர் என  இடம்பெற்றுள்ளது.  12ம் நூற்றாண்டில் சோழநாட்டில் ஜனநாத வளநாட்டு பரனூர் கூற்றத்தில் நாவலூர் அமைந்திருந்தது. கூற்றம் என்பது இன்றைய தாலுகா போன்றது. இங்குள்ள கயிலாயமுடைய நாயனார் கோயிலுக்கு துறையுடையான் ஊராடுவான் ஆன நந்திபந்தமன் என்பவர் ஒரு திருவிழாவை ஏற்படுத்தியுள்ளார். இக்கோயில் பூசைக்கு என ஏற்கனவே பத்து மா (ஆயிரம் குழி) நிலம் தானம் செய்யப்பட்டிருந்தது. மேற்கொண்டு ஆயிரம் குழி நிலம் ஒதுக்கப்பட்டு மொத்தம் இரண்டாயிரம் குழி நிலம் இத்திருவிழா நடத்த தானமாக தரப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை தடையில்லாமல் நடத்தும் பொறுப்பை இக்கோயிலில் பூசை செய்து வந்த சிவப்பிரமாணன் காசிபகோத்திர நீறணிந்தான் காழிப்பிள்ளை மற்றும் அவரது சகோதர்களிடம் ஒப்படைத்து உள்ளனர். இதுமட்டுமின்றி இக்கோயிலில் தடையின்றி பூஜைகளும் திருவிழாவும் நடக்க 4 வேலி (எட்டாயிரம் குழி) புன்செய் நிலமும் தானமாக தரப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு அரசனின் நேரடி ஆணையில் வெட்டப்பட்டுள்ளது. …

The post கள்ளக்குறிச்சி அடுத்த நாகலூர் கிராமத்தில் 830 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagalur village ,Kalakurichi ,Kallakurichi ,Salem ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி பேருந்துநிலையம் அருகே...