×

மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிவோரை பிடித்து தீர விசாரிக்க வேண்டும்: ‘கருடா’ ரோந்து போலீசாருக்கு எஸ்பி உத்தரவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமீப காலமாக கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் ‘கருடா’ ரோந்து போலீஸ் சேவையை தொடங்க எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா நடவடிக்கை மேற்கொண்டார்.  அதன்படி ‘கருடா’ ரோந்து போலீஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா ‘கருடா’ ரோந்து போலீசார் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது, ரோந்துக்கு பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனத்தின் சைரன், ரிப்லெக்டர் லைட், ஹெட்லைட் ஆகியவை சீராக இயங்குகிறதா என ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் ரோந்து போலீசாரிடம் பேசுகையில், `ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க ‘கருடா’ ரோந்து போலீஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 28 பீட் ஆபிசர்களைக் கொண்டு இந்த சேவை இயங்கும். நெடுஞ்சாலைகள், நகரின் முக்கிய சாலைகள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஆகிய இடங்களில் ரோந்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எப்போதும், ரிப்லெக்டர் விளக்குகளை ஒளிரவிட்டபடி ரோந்து செல்ல வேண்டும். வாக்கிடாக்கி, சட்டையில் அணியும் கேமரா ஆகியவற்றை முழுமையான சார்ஜில் வைத்திருக்க வேண்டும். காவல் கட்டுப்பாட்டு அறையுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தெரிவிக்கப்படும் தகவல்கள் அறிந்துகொண்டதை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். குற்ற சம்பவம் நடைபெறும் இடத்திற்கு விரைந்து சென்று காவல் பணியில் ஈடுபட வேண்டும்.இரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரியும் நபர்கள், டூவிலரில் அதிவேகமாக செல்வோர், போலீசாரைப் பார்த்ததும் தப்பியோடும் நபர்களை பிடித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். பழைய குற்றவாளிகளா என்பதை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் அவசரத் தேவைக்காக வருவோர், குடும்பத்தினருடன் செல்வோரிடம் கன்னியமாக நடந்து கொள்ள வேண்டும். மதுபோதை, கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடுவோரிடம் ரோந்து போலீசார் வாக்குவாதம் செய்யக்கூடாது. அமைதியாக இருந்து அவர்களின் பேச்சு, நடவடிக்கைகள் ஆகியவற்றை தங்களது கேமராவில் வீடியோ பதிவு செய்ய வேண்டும். குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும். இரவு ரோந்தின்போது குற்ற சம்பவங்கள் நடப்பதை கண்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தனியாக செல்லாமல் கூடுதல் போலீசார் உதவியுடன் குற்ற நடவடிக்கை தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அதைத்தொடர்ந்து, ‘கருடா’ ரோந்து போலீஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், டிஎஸ்பி பூரணி, ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா, போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், எஸ்பி அலுவலக எஸ்ஐ சிதம்பரம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிவோரை பிடித்து தீர விசாரிக்க வேண்டும்: ‘கருடா’ ரோந்து போலீசாருக்கு எஸ்பி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Karuda ,Ranipette ,Ranipette district ,SP ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...