×

இரட்டை வேட பாஜவுக்கும், பாதம் தாங்கும் அதிமுகவுக்கும் நீதிமன்றம் நெத்தியடி தீர்ப்பு: நீட் தீர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: நீட் ஆய்வுக்குழு அமைத்தது செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இரட்டை வேடம் போடும் பாஜவுக்கும், பாதம் தாங்கும் அதிமுகவுக்கும் நெத்தியடியாக அமைந்துள்ளது, என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: மருத்துவ கல்வி பயில நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் கனவை சிதைக்கும் நீட் தேர்வினை, அது முன்மொழியப்பட்ட காலம் முதலே அரசியல் ரீதியாக எதிர்த்து வருகிறோம். திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வானது தமிழ்நாட்டு மாணவ, மாணவியரிடையே கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆராய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரிடம் இதுவரை 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து கருத்துகள் குவிந்துள்ளன. இவற்றை ஆராய்ந்து அதன் மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் நீதியரசர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த அறிக்கை கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து மேற்கொள்ளவிருக்கிறது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தநிலையில் பாஜ பொறுப்பாளர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் இக்குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். ‘நீட் தேர்வை விலக்குவது சட்டரீதியாக இருக்குமானால் அதனை பாஜ ஏற்கும்’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்லிய நிலையில், அப்பட்டமான இரட்டை வேடமாக அதே பாஜவின் பொறுப்பாளரால் இத்தகைய மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தங்களின் அரசியல் லாபங்களுக்காக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் நலனுக்கு எதிராக இத்தகைய மனுவை அந்த பொறுப்பாளர் தாக்கல் செய்திருந்தார்.  ஆட்சியை இழந்த பிறகும் பாஜவின் பாதம் தாங்கி அடிமை சேவகம் செய்யும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, இந்தக் குழுவையே நாடகம் என்று சொன்னார். ‘நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் போடுவதுபோல நாங்கள் போடுகிறோம்; நீங்கள் அதை குப்பையில் போடுங்கள்’ என்று பாஜவுடன் திரைமறைவு ஒப்பந்த நாடகம் நடத்தி ஒரு முறையல்ல இரண்டு முறை, தமிழ்நாடு சட்டமன்றத்தையே ஏமாற்றிய பழனிசாமிதான் திமுக அரசால் அமைக்கப்பட்ட குழுவை நாடகம் என்று கூறினார். நீட் தேர்வுக்கு எதிராக பாஜ மனு தாக்கல் செய்ததை ஒரு வரி கூட கண்டிக்க தைரியம் இல்லாத பழனிசாமி, மாணவர் நலன் கருதி திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை குறை கூறினார். நீட் தேர்வுக்கு எதிரானவன்தான் நான் என்று பழனிசாமி சொல்லிக் கொள்வதைப் போல கபடநாடகம் வேறு இருக்க முடியுமா? அப்படி எதிரானவராக இருந்திருந்தால், அனைத்து கட்சியினரும் தமிழ்நாடு அரசோடு கைகோத்து, பாஜவின் முயற்சியை முறியடிக்க உயர் நீதிமன்றத்தில் களமிறங்கியபோது, தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது ஏன் என்று விளக்க முடியுமா?. பாஜவின் இரட்டை வேடம், அதிமுகவின் அடிமை சேவகம் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து, தனது தீர்ப்பின்மூலம் நெத்தியடி கொடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை, அதன் மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஆகியவை அடுத்தடுத்த காலங்களில் வரிசையாக நடக்க இருக்கின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதி அதற்குள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் இந்த நடவடிக்கைகள் அதற்குள் முடிவடைய இயலாத சூழல் உள்ளது. தமிழ்நாடு அரசு, சட்டபூர்வ நடவடிக்கையில் இருக்கும் இந்த நேரத்தில் நடக்கும் இந்த ஆண்டுக்கான தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையில் வருந்தத்தக்கதே. ஆனாலும் இறுதியில், நீட் தேர்வினால் நமது மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.பாஜவின் பாதம் தாங்கி அடிமை சேவகம் செய்யும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, இந்த குழுவையே நாடகம் என்று சொன்னார்….

The post இரட்டை வேட பாஜவுக்கும், பாதம் தாங்கும் அதிமுகவுக்கும் நீதிமன்றம் நெத்தியடி தீர்ப்பு: நீட் தீர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Court of Justice ,Double ,Pedict ,Chief MJ ,G.K. Stalin ,Chennai ,Chennai High Court ,Need Observatory ,Baja ,Nedyadi ,B.C. ,Dinakaran ,
× RELATED கடலாடியில் இரட்டை மாட்டுவண்டி...