×

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்-போளூர் விவசாயிகள் வேதனை

போளூர் : போளூர் பகுதிகளில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்த வெளியில் செயல்படுவதால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிணற்று பாசனத்தை நம்பி நெல் சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. இதற்கு முன்பு ஆண்டுக்கு 3 பருவம் மட்டுமே நெல் சாகுபடி நடந்து வந்தது. தற்போது, போளூர் பகுதியில் ஆண்டு முழுவதும் சாகுபடி நடந்து வருகிறது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது. அதன்படி, போளூர் பகுதியில் அத்திமூர், புதுப்பாளையம், கேளூர்,  நெடுங்குணம், வடமாதிமங்கலம், பெரியகொழப்பலூர் உள்ளிட்ட 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தனியாக சொந்த கட்டிடங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை. அந்தந்த கிராமங்களில் உள்ள சமுதாய கூடங்களில் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வியாபாரிகள் எடுத்து செல்வதற்காக சமுதாய கூடங்களில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படுகிறது. ஆனால், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை வெட்டவெளியில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் அடுக்கி வைக்கப்படுகிறது.எனவே, மழை வந்தால் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்கும் பொறுப்பும் விவசாயிகளிடம் உள்ளது.  அவர்களும் தரமற்ற தார்பாய்களை வாடகைக்கு  வாங்கி வந்து ஏதோ முடிந்தளவிற்கு பாதுகாக்கின்றனர். போளூர் அடுத்த அத்திமூர் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எந்தவித கட்டிட வசதியும் இல்லாமல் சாலையோரம் உள்ள நெற்களத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு அதிகாரிகள் எப்படி அனுமதி தந்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், போளூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும்  கனமழை, சாரல் மழை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்  மூட்ைடகள் நனைந்து சேதமடைந்து வருகின்றன. நெல் மூட்டைகள் நனைவதும் அதனை உலர வைப்பதும் தினமும் நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அத்திமூரில் தற்போது சீசன் முடிந்து விட்டது. ஊராட்சி சார்பில் காலி இடம் கொடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. விரைவில், அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டி விடுவோம் என தெரிவித்தனர். இதேபோல், போளூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உள்ளே இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கும் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் அடிக்கடி மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன. மாவட்டம் முழுவதும் இதுபோன்ற நிலை நிலவுகிறது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்த கட்டிடம் கட்டுவதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்….

The post நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்-போளூர் விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Bulur ,Bolur ,Polur ,Dinakaran ,
× RELATED போளூரில் நெல் சாகுபடி அதிகரிப்பால்...