×

மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைகிறது நெல்லை – தென்காசி 4 வழிச்சாலை பணிகளை வரும் 2022 செப்டம்பரில் முடிக்க திட்டம்

*81 பாலங்கள் இடம் பெறுகின்றனநெல்லை  : நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையை அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இச்சாலையில் மொத்தம் 81 பாலங்கள் இடம் பெறுவதோடு, மாறாந்தையில் சுங்கச் சாவடியும் அமைகிறது. நெல்லை -தென்காசி  சாலை தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மரத்தடிகள் மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஓடுகள், சிமென்ட் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் நெல்லை – தென்காசி சாலை வழியாகவே கேரளா செல்கிறது. குற்றால அருவிகள் மற்றும் அதைச்சுற்றியுள்ள தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், பண்பொழி முருகன் கோயில் மற்றும் கேரளா மாநிலத்தில் சபரிமலை போன்ற ஆன்மீக தலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு நெல்லை – தென்காசி சாலை வரப்பிரசாதமாக உள்ளது.இச்சாலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல் கலைக்கழகம், ராணி அண்ணா கல்லூரி மற்றும் பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளும், தொழில்நுட்பக் கல்லூரிகளும், கலைக் கல்லூரிகளும், பள்ளிகளும் உள்ளன. கல்வி ஸ்தாபனங்களுக்கு செல்வோரும் இச்சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, தற்போது பணி நடந்து வருகிறது. இச்சாலை ஓரங்களில் காணப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு, அவற்றிற்கு பதிலாக புதிய மரங்கள் நடப்பட உள்ளன.நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலைக்கான பணிகள் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய நிலையில், கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் நிறைவு பெற்றிருக்க வேண்டும். கொரோனா பாதிப்பு காரணமாக சாலை பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் தென்காசி மாவட்டம், ஆவுடையானூர் வைத்திலிங்கபுரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் மாரியப்பன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இச்சாலை குறித்தான பல்வேறு கேள்விகளை மாநில நெடுச்சாலை துறையிடம் எழுப்பியிருந்தார். அதற்கு கோட்ட பொறியாளர் அளித்த பதில்களில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதி ஒதுக்கீட்டில் ரூ.430.71 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையானது அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை அருகே பழைய பேட்டையில் இருந்து ஆலங்குளம் வரைக்குமான பணிகள் கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கப்பட்டது. இப்பகுதிக்கான பணிகள் முழுவதும் முடிப்பதற்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம் தொடங்கி தென்காசி ஆசாத் நகர் வரை இவ்வாண்டு பிப்ரவரி 24ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டது. இப்பணிகள் முடிப்பதற்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மொத்தம் 18 மாதங்களில் இந்த நான்கு வழிச்சாலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழையபேட்டை முதல் ஆலங்குளம் வரை 7.62 சதவீத பணிகளும், ஆலங்குளம் முதல் ஆசாத்நகர் வரை 1.8 சதவீத பணிகளும் இப்போதைக்கு முடிவடைந்து உள்ளன. நான்குவழிச்சாலை என்றாலே பயணிகளுக்கு திகில் ஊட்டுவது சுங்கச் சாவடிகள்தான். நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையில் மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எத்தனை ஆண்டுகளுக்கு சுங்கச்சாவடி செயல்படும் என்ற கேள்விக்கு ‘தகவல் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் 35 மீட்டர் அகலத்திலும், நகரப் பகுதிகளில் 25 முதல் 28 மீட்டர் அகலத்திலும் இச்சாலை அமைக்கப்படுகிறது. நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையில்  சிறிய பாலங்கள் 79 இடங்களிலும், பெரிய பாலங்கள் ஆலங்குளம் மற்றும் பாவூர்சத்திரம் ரயில்வே கேட் ஆகிய இரண்டு இடங்களில் அமைக்கப்படுகிறது. மொத்த பாலங்கள் 81 ஆகும். ஆலங்குளத்தில் அமைய இருக்கும் பாலமானது 200 மீ நீளத்திலும், பாவூர்சத்திரம் ரயில்வே பாலம் 990 மீ நீளத்திலும் அமைகிறது. பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் அமைய இருக்கும் ரயில்வே பாலமானது விரைவில் தொடங்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31க்குள் இப்பாலம் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் சாலைப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நான்கு வழிச்சாலையின் மொத்த நீளமான 45.6 கி மீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் மரங்கள் நடப்பட இருக்கின்றன. நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் முடியும் பட்சத்தில் தற்போது போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருவதுடன் ஒரு மணி பயண நேரத்தில் தென்காசி செல்ல முடியும் என நம்பப்படுகிறது. சுங்கம் தேவையில்லைஇதுகுறித்து சமூக ஆர்வலர்  வைத்திலிங்கபுரம் மாரியப்பன் கூறுகையில், ‘‘தென்காசி மாவட்டத்தில் போதிய  அடிப்படை வசதிகள் இல்லை. இன்னமும் மருத்துவ வசதிகளுக்காக நெல்லைக்கே செல்ல  வேண்டியதுள்ளது. பகலிரவு பாராமல் பயணிகள் இச்சாலையை பல்வேறு தேவைகளுக்கு  பயன்படுத்தி வருகின்றனர். எனவே இச்சாலையில் மாறாந்தையில் அமைக்கப்படும்  சுங்கச்சாவடியை கைவிடக் கோரி மனு அளித்துள்ளோம். இச்சாலை பணிகள் ஆலங்குளம்  பகுதிக்கு மேற்கில் மெதுவாக  நடக்கிறது. அப்பணிகளை வேகப்படுத்துவதோடு, சாலை  தரமாக அமைக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.’’ என்றார்….

The post மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைகிறது நெல்லை – தென்காசி 4 வழிச்சாலை பணிகளை வரும் 2022 செப்டம்பரில் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Marantha ,Nellai – Tenkasi 4-lane ,Nellai ,Nellai - Tenkasi ,lane ,Maranthai ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம்...