துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் வேலு (48), மாநகராட்சி ஒப்பந்த ஊழியர். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். வேலுவின் மருமகன் சுரேஷ். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வடிவழகன், இவரது தம்பி பாலாஜி ஆகியோர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சேத்துப்பட்டு பகுதியில் கடந்த மாதம் வடிவழகன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் சுரேஷ் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரை பழிதீர்க்க வடிவழகனின் தம்பி பாலாஜி திட்டம் தீட்டினார். இதனிடையே, சுரேஷை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் செம்மஞ்சேரி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சுரேஷ் ஜாமீனில் வெளியில் வருவதற்குள், அவரது குடும்பத்தில் யாரையாவது ஒருவரை கொலை செய்து பழிதீர்க்க வடிவழகனின் தம்பி பாலாஜி முடிவு செய்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து சுரேஷின் மாமனார் வேலுவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு, வாசலில் படுத்திருந்த வேலுவை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பினர். இதுபற்றி செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, செங்கல்பட்டில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பாலாஜி (23), அவரது கூட்டாளிகள் தினேஷ் (19), சார்லஸ் (19), சஞ்சய் (19) மற்றும் 2 சிறுவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பாலாஜி கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றாவாளி. செம்மஞ்சேரி காவல் நிலைய ரோந்து வாகனத்தை இரு முறை கத்தியால் வெட்டி கண்ணாடியை உடைத்தது, சேப்பாக்கம் போலீசாரை தாக்கியது என பல்வேறு வழக்கு இவர் மீது நிலுவையில் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் செம்மஞ்சேரி கொலை வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்று வந்தவர். அண்ணனின் கொலைக்கு பழி தீர்க்க இந்த கொலையை செய்ததாக போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, 6 பேரையும் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், பாலாஜி உள்ளிட்ட 4 பேரை புழல் மத்திய சிறையிலும், 2 சிறுவர்களை சீர்த்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்….
The post மாநகராட்சி ஊழியர் கொலை வழக்கில் சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது: பழிக்குப்பழியாக கொன்றதாக வாக்குமூலம் appeared first on Dinakaran.
