×

தீபாவளியின்போது ஆவினில் இருந்து இலவசமாக ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் இனிப்புகள் சப்ளை: சேலத்தில் அமைச்சர் ஆவடி நாசர் தகவல்

சேலம்: தீபாவளி பண்டிகையின் போது மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.50 டன் ஆவின் இனிப்பு இலவசமாக சென்றுள்ளது. ஆவின் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என சேலத்தில் அமைச்சர் ஆவடி நாசர் கூறினார். சேலம் அஸ்தம்பட்டி, 5 ரோடு, மெய்யனூர், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட பல்வேறு பகுதிகளில், பால் முகவர்களிடம் பால் வரத்து, குறைகள் குறித்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நேற்று கேட்டறிந்தார். பின்னர், 5 ரோடு ஆவின் பாலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணம் கொடுத்து ஐந்து மில்க் ஷேக் வாங்கிய அவர், சாலையோரம் ஆதரவின்றி தவித்த மூதாட்டிக்கு வழங்கினார். தொடர்ந்து, தளவாய்பட்டி ஆவின் பால் பண்ணைக்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகளிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அமைச்சர் ஆவடி நாசர் அளித்த பேட்டி: தமிழகத்தில் பால் உற்பத்தி, விற்பனை 1.50 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தேர்தல் வாக்குறுதிப்படி பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.270 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது, ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி, பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் 636 முதுநிலை மற்றும் இளநிலை பணியாளர்கள் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததையடுத்து, அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சத்துணவில் பால் வழங்குவது குறித்து முதல்வர் முடிவு செய்வார். ஆவினில் வேலை செய்து உயிரிழந்த 48 பேரின் வாரிசுகளுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையில் பால் விலையை குறைக்காமல், தொடர்ந்து பழைய விலையிலேயே விற்று வந்த 22 நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் 25 பால் ஒன்றியங்களில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் ஆவின் பால்பண்ணையில் ஐஸ்கிரீம் பிளாண்ட் அமைப்பதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படும். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு கடந்த தீபாவளி பண்டிகையின் போது 1.5 டன் அளவுக்கு ஆவின் இனிப்பு இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் ஆவடி நாசர் கூறினார்….

The post தீபாவளியின்போது ஆவினில் இருந்து இலவசமாக ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் இனிப்புகள் சப்ளை: சேலத்தில் அமைச்சர் ஆவடி நாசர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Rajendra Balaji ,Aawin ,Diwali ,Salem ,Minister ,Avadi Nasser ,Dinakaran ,
× RELATED தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில்...