×

சுற்றுலா, வழிபாட்டுத்தலங்களுக்கு இன்றுமுதல் அனுமதி கொடைக்கானல்… இனி களைகட்டும்

*மதுரை மீனாட்சி, திருவில்லி. ஆண்டாள், பழநி முருகன், ராமேஸ்வரம் கோயில்களுக்குச் செல்ல பக்தர்கள் ஆர்வம்கொடைக்கானல் : தமிழகத்தில் உள்ள சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகளை வரவேற்க ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானல் தயாராகியுள்ளது. கோயில்கள் திறப்பு அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தென்மாவட்டங்களில் உள்ள முக்கியமான மதுரை மீனாட்சியம்மன், திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, பழநி, திருப்பரங்குன்றம் முருகன் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத்தலங்களும் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தன. பக்தர்கள் அனுமதியின்றி சுவாமிக்கு பூஜைகள் நடந்தாலும், கோயில் வளாகங்கள் தூசி படிந்தன. தமிழக அரசின் தொடர் முயற்சிகளால் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் அரசு அறிவித்துள்ள தளர்வுகள் படி, வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்படவுள்ளதால், கோயில் வளாகம் மற்றும் சுற்றுச்சுவர்களில் தண்ணீரை பீய்ச்சியடித்து ஊழியர்கள் சுத்தம் நேற்று செய்தனர். இன்று முதல் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அதுபோல், சுற்றுலாத்தலங்களுக்கும் இன்றுமுதல் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தென்மாவட்ட மக்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம், ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானல். இங்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்களை கண்டு ரசிப்பர். நகரின் மைய பகுதியிலுள்ள ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்வர். கொரோனா தொற்று காரணமாக கடந்த பல மாதங்களாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு அனுமதிக்கப்படாமல் இருந்தனர். தற்போது இ.பாஸ், இ.பதிவு இல்லாமல் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.கடந்த சில தினங்களுக்கு முன்பு பஸ் போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கொடைக்கானலில் கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று முதல் கொடைக்கானல் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ஏரி பகுதிக்கு அருகில் உள்ள பிரையண்ட் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் கோயில் பகுதிக்கு அருகில் உள்ள செட்டியார் பூங்கா, அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள ரோஜா பூங்கா ஆகிய மூன்று பூங்காக்களும் திறக்கப்பட உள்ளன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காக்களுக்கு சென்று அங்குள்ள பூக்களை ரசிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை செய்துள்ளது என கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஆண்டாள் கோயில் ‘பளீச்’அரசு உத்தரவைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். ஆண்டாள் கோயில் மட்டுமின்றி கோயில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, பெரியாழ்வார் சன்னதி, கோபுரம் அமைந்துள்ள பகுதி ஆகியவற்றையும் தண்ணீரை கொண்டு கழுவும் பணியில் ஈடுபட்டனர். தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கும் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் இருந்த செடி, கொடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.‘தீர்த்தமாட அனுமதியில்லை’ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் 71 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் இன்று முதல் சுவாமி, அம்பாள் சன்னதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் கோயிலுக்குள் பிரகாரங்கள், சுவாமி, அம்பாள் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டது. கோயிலுக்குள் பக்தர்கள் போதிய இடைவெளியை பின்பற்றி வரிசையாக செல்ல பிரகாரங்கள் மற்றும் சன்னதிகளில் வட்டம் வரைதல், தடுப்பு மருந்துகள் தெளித்தல் போன்ற பணிகள் செய்யப்பட்டது.கோயில் இணை கமிஷனர் பழனிக்குமார் கூறுகையில், ‘‘அதிகாலை ஸபடிக லிங்க பூஜை முதல் பள்ளியறை பூஜை வரை பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். சிறப்பு பூஜைகள் ரத்து செயயப்பட்டுள்ள நிலையில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளில் பக்தர்கள் தரிசனம் மட்டும் செய்யலாம். கோயிலுக்குள் தீர்த்தமாடுவதற்கு அனுமதியில்லை. இதனால் தீர்த்தக் கிணறுகள் திறக்கப்படவில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து போதிய இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்’’ என்றார்….

The post சுற்றுலா, வழிபாட்டுத்தலங்களுக்கு இன்றுமுதல் அனுமதி கொடைக்கானல்… இனி களைகட்டும் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Meenakshi ,Thiruvilli ,Andal ,Palani Murugan ,Rameswaram ,Kodaikanal ,Tamil Nadu ,
× RELATED உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி –...